தமிழீழ மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்த உன்னதமான ஒற்றைத் தலைவர்….!!!

தமிழீழ தேசியத் தலைவர்

தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.?

இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.! கஞ்சி அல்லது பருப்பும், சோறும் என்றாலும், அது போராளிகளுக்கும் கிடைத்து விட்டதா, என்பதை உறுதி செய்த பின்பு தான், தனது உணவுக்கு தயாராவார். பருப்பும், சோறும் என்றாலும், அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்க வந்தால், நலம் விசாரித்த பின், அவரது முதல் கேள்வி “சாப்பிட்டியா”..!

அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும், பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும், தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல் தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார். உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ, சவற்காரம், உடைகள், பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்து கொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.

இது எனக்கு கிட்டண்ணை கூறியது.!
ஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப் போய் முகாம் திரும்பினாள். தாங்கள், கழட்டிப் போட்டுவிட்டு சென்ற அழுக்கான உடைகளை தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து, துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும், அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.

புலிகளமைப்பில் எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையுடன், அந்த தாயன்பை நானும் அனுபவித்தேன். புன்னகையுடன் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.

வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை, பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார். வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று விரும்பி, எங்களுக்கும் வலியுறுத்துவார்.
அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.

ஈழத்துரோனர்
(ஈழ விடுதலை நினைவுகளுடன்)

(www.eelamalar.com)