தமிழீழ விடுதலை வரலாற்றில் ராதா அண்ணாவைப் பற்றி படித்ததில் பிடித்தது…

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில் (மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.

அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென “Down Postion” என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது.

தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். ” காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்” என்று ராதா கூறி முடித்தார்.

ராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து ” இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்” என்று சொல்லிச் சிரித்தார்.

மூலம்: பேபி அண்ணா