தமிழீழ வைப்பகம் (BANK OF TAMILEELAM) ஆரம்பித்து வைக்கப்பட்ட நாள் 23.05.1994

தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்!
இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான ‘தமிழீழ வைப்பகம்’ திகழ்கிறது என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது.
இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை.
இருந்தபோதும் யுத்தத்தின் போதும் அமைதிக் காலத்தின் போதும் தமிழர்களுக்கான பாதுகாப்பு வைப்பகமாக அந்த வங்கி திகழ்கிறது.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ வங்கியானது சிறிலங்கா அரசாங்கத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த வங்கியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் முழுமையான நிதிக் கொள்கை நிர்வாகத்தோடு இயங்கி வருகிறது.
இந்த வங்கி 1994 ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளின் வங்கியில் சிறிலங்கா ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியான சிறிலங்காவின் வங்கிகளை விட இந்த வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் 8.5 வீதம் அளவிற்கு வழங்கப்படுகிறது. சிறிலங்காவில் வைப்புத்தொகைக்கான சராசரி வட்டி 5.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் செயற்பாடுகள் குறித்து வங்கியின் பணிப்பாளர் மகாலிங்கம் வீரத்தேவன் கூறுகையில், யுத்த காலத்தின் போது மக்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் வைப்பீடு செய்தனர். அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் பெருமளவில் கடன் பெற்று வருகின்றனர். நாங்களும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சேமிப்புத் தொகைக்கான செயற்திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

36 வயதாகும் வீரத்தேவன, யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர்.
தற்போது தமிழீழ வங்கியில் 15 மில்லியன் டொலர் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரத்தேவன் கூறினார்.
தமிழீழ வங்கி லாப நட்டக் கணக்குகளை வெளியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் மட்டுமே இந்த விவரங்கள் கையளிக்கப்படும்.
இந்த 7 பேர் கொண்ட நிர்வாக சபையே வங்கி தொடர்பான நிதிக் கொள்கைகளையும் வட்டி விகிதங்களையும் முடிவு செய்து அறிவிக்கிறது.

“சிறிலங்காவின் வர்த்தக நிலைமையில் அரசாங்கம் பணத்தை அச்சடித்தும் பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. இது எமது வர்த்தகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்கிறார் வீரத்தேவன்.
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து கடன் தொகையை மக்கள் பெருமளவில் பெற்றனர். வீடுகளைத் திருத்தவும், வர்த்தகங்களை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களை அமைக்கவும் இந்தத் தொகையை தமிழீழ வங்கியிடமிருந்து பெற்றுச் சென்றனர்.

2002 ஆம் ஆண்டு 30 வீதமாக இருந்த தமிழீழ வங்கியின் வைப்புத் தொகை 2003 ஆம் ஆண்டு 42 வீதமாக உயர்ந்தது. அதேபோல் 2002 ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறுவோர் விகிதம் 20 வீதமாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு 40 வீதமானது என்றார் வீரத்தேவன்.
தவணைகளை நாம் துப்பாக்கி முனையில் பெறுவதில்லை. இந்தப் பணிக்கு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியுள்ளோம் என்கிறார் தமிழீழ வங்கியின் நிர்வாக அதிகாரியான கந்தையா பாலகிருஸ்ணன்.
தமிழீழ வங்கியின் 12 கிளைகளில் 4 கிளைகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளன.
தலைமையகமான கிளிநொச்சியில் பிளாஸ்மா ஸ்கிறீன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரம் வைப்புத் தொகைதாரர்களும் 300 நடப்பு வங்கிக் கணக்கு வைத்துள்ளோரும் உள்ளனர்.

தமிழீழ வங்கியினது காசோலைகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளை தவிர்த்த சிறிலங்காவின் இதர பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை.
வெளிநாடு வாழ் தமிழர்களின் பணம் சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்டபோதும் விடுதலைப் புலிகள் அந்த வங்கிகளின் பணிகளில் தலையிடுவது இல்லை.
தமிழீழ வங்கியானது சர்வதேச நாடுகளில் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் சிறிலங்காவின் இதர பகுதி உள்ளிட்ட பிற்பகுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கிறது.
சிறிலங்காவின் மத்திய வங்கியானது தமிழீழ வங்கி வைப்புத் தொகைகளைப் பெறுவது சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும் அதன் உத்தரவுகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருந்துவதில்லை.
இந்த வங்கியின் பணம் கொள்ளை போவதில்லை என்று வீரத்தேவன் கூறுகையில் அது ஏன் என்று நாம் கேட்டோம்…அவர் சிரித்துக் கொண்டே எளிமையான வரிகளில் சொன்னார்…
“யாரும் எங்களிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கமாட்டார்கள். நாட்டில் அசாதாரண சூழல் ஒன்று ஏற்படும் வரை இங்கு பாதுகாப்பாகவே அவை இருக்கும் என்றார் வீரத்தேவன்.