தமிழ்மக்களிடையே அரசாங்கம் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?

நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மழுங்கடித்து வருகின்றது. காட்டலோனியா, குர்திஸ்தான் போன்று தமிழ்மக்களிடையே பொது வாக்கெடுப்பொன்று நடத்த அரசு தயாராக உள்ளதா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தனது உரையில்,

அரசு பௌத்த மதத்தை வளர்ப்பதற்கும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் எவ்வாறு நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும்.

2015ஆம் ஆண்டு அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அனைத்துலகச் சமூகத்திடம் வழங்கிய உறுதிமொழிக்கமைய நிலைமாறுகால நீதியின் பிரகாரம், யுத்தத்தின்போது இறந்த உறவுகளுக்கு நினைவு கூருவதற்கான உரிமை அளிக்கப்பட வேண்டும். அதேபோல், ஜெனீவா தீர்மானத்தில் ஏற்றுக் கொண்ட விடயங்களான காணி விடுவிப்பு, காணாமல் போனோருக்கான தீர்வு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட விடயங்களில் எவ்வித முன்Nனுற்றங்களும் ஏற்படவில்லை.

இவ்வாறு தமிழ்மக்கள் பல்வேறு பிரச்சினைகளுடனும் கண்ணீரோடும் வாழ்ந்து வரும் நிலையில். என்னதான் பொருளாதாரத் திட்டங்களை அரசு அறிவித்தாலும் எவ்விதப்பயனும் ஏற்படப் போவதில்;லை. இவ்வாறு தொடர்ந்து சென்றால் தமிழ்மக்களிடையே பொது வாக்கெடுப்பொன்று நடத்த அரசு தயாரா என்று கேட்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.