மேஜர் கடலரசன்…!

மன்னார் களமுனையில் அடம்பன் பகுதி.. KP 02 காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. தாங்கி,மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்நகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் வண்டில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. இந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும்.

நிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது.சூட்டாதரவு , மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்கு தேவையான கால அவகாசம் வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது.

‘ KP 02 இற்கு உடனே இரும்பை அனுப்புங்க கட்டளைப்பீடத்தில் இருந்த மாவீரர் கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல் பரிமாறப்படுகிறது…
‘நான் அங்கேதான் நிக்கிறன் K7’
சரமாரியான சூட்டொலிகள்..எறிகணை வெடிப்புகளுக்கிடையே அவனது குரல் தொலைத்தொடர்புக் கருவியூடாக தெளிவாகக் கேட்கிறது.

இவ்வளவு வேகமாய் எப்படிப் போனான்.. இப்படி கள நிலைமையை புரிந்துகொண்ட அவன் விரைந்து செயற்படுவது இது முதல் தடவை அல்ல என்பதை தளபதி அறிந்தே இருந்தார். அவர் மட்டுமல்ல அங்கிருந்த அனைத்துப் போராளிகளும் அறிந்தே இருந்தனர்.

நாங்கள் அவனை இரும்பு என்றுதான் அழைப்போம். எனக்கு இவன் முதலில் அறிமுகமானது 2008 ஆரம்பப்பகுதியிலேயே. பூநகரிப் படையணி ஆரம்பிக்கப் பட்டபின் தனது கன்னிக் கள நடவடிக்கைகளுக்காக அடம்பன், பாலைக்குளி ஆகிய பகுதிகளில் நிலைகொள்ளத் தயாரானது. இந்த அணியில் அவனும் உள்ளடங்கியிருந்தான். நல்ல உயரம்..உறுதியான உடலமைப்பு… குத்து வரியில் தனது கனரக ஆயுதத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான்.

சித்திரை மதம் 2008 அதிகாலை வேட்டையா முறிப்புப் பகுதியில் எதிரியின் முன்னேற நடவடிக்கை.எமது கட்டளை தளபதி மாவீரர் லெப்.கேணல் ரகு அவர்களால் அழைக்கப்பட்டேன். ‘சுருதியின் காப்பரண் பகுதியில் தொடர்பில்லை இரும்பை உடனடியாக மோட்டார் சைக்கிளில் கொண்டு அங்கு வீட்டுவிட்டு வா’

அவன் தனது முழு ஆயத்தநிலையில் அங்கு நின்றிருந்தான். அவனையும் மற்றுமொரு போராளியையும் ஏற்றுக் கொண்டு சண்டை நடக்குமிடத்திற்கு விரைகிறேன். வேகமாப்போ ..வேகமாப் போ என சத்தமிட்டபடி வருகிறான்..
சண்டை நடக்கும் பகுதியை அண்மித்ததும் நிறுத்தும்படி கூறியவன் ‘..இஞ்ச விட்டுட்டு நீ போ’ என்கிறான் .’ நானும் உங்களோட வாறன் கடல்..’ என்று நானும் அவனுடன் புறப்பட ‘ அங்க ரோமியோ 2 வோட அவசரத்துக்கு ஆக்கள் இல்ல நீ போ ..கவனம் ‘ என்று கூறி விரைகிறான்.

நெடுநேரம் இடம்பெற்ற இச் சண்டை முடிவுக்கு வந்தபோது எமது காப்பரண் பகுதிகள் மீட்கப்பட்டதுடன் எதிரியின் படைக்கலன்களும் கைப்பற்றப் பட்டன.இச்சண்டையில் கடலின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
இப்படித்தான் முன்னணி காப்பரண் வரிசையில் கடலும் அவனது PKLMG உம் காத்திரமானதொரு பாத்திரமானார்கள். கடலைப் பொறுத்தவரை PK யை மட்டுமல்ல
RPG யையும் மிக துல்லியமாக கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்தான். பலமுறை அவனது RPG தாக்குதலும் நிலைமைகளுக்கு உதவியாய் அமைந்தன.

மல்லாவி களமுனைக்கு எமது அணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியை அண்டிய பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. மிகவும் கடுமையான சண்டை… ‘ஒரு ரீமோட கடலை உடனே அனுப்புங்கோ ‘ பிரிகேடியர் பானுவிடமிருந்து கட்டளை கிடைக்கிறது..

கடல் அந்த சிறு அணியுடன் விரைகிறான். எதிரிகளை முறியடித்து அவனது அணி முன்னேறுகிறது. எதிரியிடமிருந்து அங்கு கைப்பற்றிய RPG யை அவன் எதிரிகளை நோக்கி இயக்குகிறான்.. இன்னுமொரு இலக்கு..விரைந்து முன்னேறி இலக்குப் பார்த்தவனின் தொடை பகுதியில் எதிரியின் குண்டொன்று ஆழப்பதிகிறது.
இச்சமரில் பல ஆயுதங்களும் எதிரியின் வாகனங்களும் கைப்பற்றப் படுகின்றன.
ஆனால் எங்கள் கடலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. களமெங்கும் கனன்று விழுப்புண் பலதாங்கி வீரம் விதைத்த இம் மாவீரன் மல்லாவி மண்ணில் விதையாகிப் போனான்.

‘தம்பி டேய் நான் வீரச்சாவடஞ்சா எனப்பத்தி நாலுவரி எழுதுவியா..’
அவனின் குரல் இன்றும் என்னுள் ஒலிக்கிறது.

“சக போராளி”