தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நகர்வுகளுக்கு அமைவாகவே சிங்களத் தலைவர்களால் ஆட்சியை நகர்த்த முடியும்…!

மீள்பதிவு
-ராஜ்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே கடந்த முப்பது வருடங்களாக இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்த ஒரேயொரு சக்தியாக விளங்குகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக பிரபாகரன் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து, இலங்கையின் அரசியல் பெரும் மாற்றம் கண்டது. இலங்கையை ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிகளும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நகர்வுகளுக்கு ஏற்பவே தமது ஆட்சி முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சிறீலங்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழீழ விடுதலைப் புலிகளை ஏளனம் செய்தார். ஏதோ பத்து பதினைந்து வரையான புலிப் பயல்கள் மாத்திரமே இருக்கிறார்கள். சில மணிநேரத்தினுள் அவர்களை அடக்கிவிடலாம் என்று கூறினார். இதனைவிட பிரேமதாசா புலிகளை அழிக்க பல முயற்சிகள் செய்தார். அவர் கொல்லப்பட்ட பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். இவரின் காலத்தில் புலிகள் பல இராணுவ வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இதற்கு அடுத்ததாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இவரின் காலத்திலும் புலிகள் யுத்த களத்தில் அபரிமிதமான சாதனைகளை நிகழ்த்தியிருந்
தனர். குறிப்பாக யுத்த களங்கள் அனைத்தும் புலிகளுக்குச் சாதகமாகவே அமைந்திருந்தன.

இவர்களுக்கு அடுத்ததாக ஜனாதிபதியாக வந்தவர்தான் இன்றைய மகிந்த ராஜபக்ச. இவர் ஒரு பிணந்தின்னியாகவும் தமிழினத்தின் இரத்தம் குடிக்கும் காடேறியாகவும் தன்னை உருமாற்றிக்கொண்டார். தமிழீழ தேசியத் தலைவரின் விட்டுக்கொடுப்ப
ு காரணமாகவே இந்தக் காடேறி ஜனாதிபதியாக மாறியது. மகிந்த ராஜபக்சவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே ஜனாதிபதிக்கான கடும் போட்டி நிலவிய போது, ‘மகிந்த ஒரு ஜதார்த்தவாதியாகத் திகழ்கின்றார். இவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவார் என்று கருதுவதாலேயே சிறீலங்காவின் ஜனாதிபதியாவதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறோம்’ என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படையாகவே பாராட்டினார்.

அவர் ஜனாதிபதியாவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தார். ஆனால் இந்தக் காடேறி இன்று உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ததைப் போல தனக்கு ஜனாதிபதிப் பதவியை வழங்கிய தமிழினத்தையே அழித்தொழித்திருக்கிறது. என்னதான் இருந்தாலும் சிறீலங்கா குடியரசாகிய பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பின் பிரகாரம் பதவியேற்ற முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் இன்றைய மகிந்த ராஜபக்ச வரை அனைத்து ஆட்சியாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத் தலைவருமான பிரபாகரன் அவர்களுடைய நகர்வுகளுக்கு அமைவாகவே தங்கள் ஆட்சி முறைகளை மாற்றியமைத்தனர்.

குறிப்பாகச் சொல்லப்போனால் மேற்படி ஜனாதிபதிகள் அனைவரும் குறிக்கப்பட்ட சில வருடங்கள் மட்டுமே சிறீலங்காவின் ஜனாதிபதிகளாக பதவி வகித்தனர். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முப்பது வருடங்களாக தமிழீழத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறீலங்காவிற்கே ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். இன்றுவரை சிறிலங்காவின் ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக எமது தேசியத் தலைவரே விளங்குகின்றார். ஆனால், இந்த நிலைகளிலிருந்து விடுதலை பெற்று தமிழ் மக்களின் தலையீடுகள் இல்லாத சிறீலங்காவை உருவாக்க வேண்டுமென்பதே மகிந்த ராஜபக்சவின் இன்றைய கனவாக உள்ளது.

இதற்காகவே தமிழ் மக்களை வேரோடு அழிக்கின்ற செயற்பாடுகளில் மகிந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக முன்னெடுத்த ஆயுத ரீதியான போராட்டத்தை சர்வதேச நாடுகளின் உதவியுடன் அழித்தொழித்த அரசாங்கம், தற்போது ஜனநாயக வழியிலான போராட்டங்களையும் அடியோடு நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ் மக்கள் எந்த வகையிலும் துளிர்விடக் கூடாது. அவ்வாறு துளிர்விடும் பட்சத்தில் அவர்களை ஈவிரக்கமற்ற முறையில் அழித்தொழிக்கலாம் என்ற வரலாற்றுப் பாடத்திட்டத்தையே அரசு பின்பற்ற முயல்கிறது. இதற்காகவே மக்கள் தற்போது முன்னெடுத்து வருகின்ற அனைத்துச் செயற்பாடுகளையும் மறைமுகமாக நசுக்கும் செயற்பாட்டில் படைத்தரப்பும் அரசாங்கமும் ஈடுபட்டுள்ளன. தமிழ் மக்கள் கூட்டம் கூடுவதற்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.