(தலைவர் எடுத்த உன்னதமான முடிவுகளில் இதுவும் ஒன்று ) எரிதழல் கொண்டு வா….!- ச.ச.முத்து

(கோபத்தின் பெரு வெளிப்பாடு எரித்தல் என்பது தீ கண்டுபிடித்த காலம் முதல் தொடர்ந்துவரும் ஒரு முறை. தர்மத்தின் பக்கம் நிற்கும் மக்களுக்கோ தர்மத்தின் பக்கம் நின்று சமரிடும் போராளிகளுக்கோ கோபம் ஏற்படும் போதெல்லாம் தீ எரிமலையாக எழுந்து தாண்டவம் ஆடியுள்ளது. இந்த 30.12.2016 அன்று வவுனியாவிலும் கூட நீதிமறுக்கப்பட்ட எம் இன மக்கள்’ தமது கோபத்தை சம்பந்தனின் படத்தை எரித்து வெளிக்காட்டி இருக்கிறார்கள். இதனை போன்றதொரு எரிப்பு ஒன்றை பற்றிய வரலாறு இது……..)

யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த நிமிடம் வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை. அதுவும் பெருந்திரளாக மக்கள்கூடி நின்ற ஒரு பொதுக்கூட்ட இடத்தில் இப்படி நடந்தது இன்னும் அதிர்ச்சியை பலருக்கு கொடுத்திருந்தது. அதனைவிட அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்த இன்னொரு விடயம் ஜீப் எரிக்கப்படுவதற்கு முன்னர் துப்பாக்கி முனையில் சில அரசியல் கோசங்கள் எழுப்பபட்டு அதன் பின்னரே எரிக்கப்பட்டது என்பது.

1981ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வல்வெட்டித்துறையின் கடற்கரை வீதி ஒன்றில் அந்த ஜீப் பலபல செய்திகளை நிகழ்காலத்துக்கும் இனிவரப்போகும் எதிர்காலத்துக்குமாக சொல்லியபடியே பிழம்பாக எரிந்து கொண்டிருந்தது. ஜீப்பை எரித்த சீலன், சங்கர், கிட்டு, லாலா மற்றும் ஒரு போராளி எரியும் ஜீப்பை பார்த்தபடியே அந்த இடத்தைவிட்டு அகன்று கொண்டிருந்தனர்.

(இந்த ஆண்டுடன் 35 வருடமாகிறது. ஆனாலும் சம்பவங்களும் பிண்ணணியும் இப்போதைக்கும் பொருந்துவதுதான்.ஆச்சரியம்) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அந்த நாள் மிக முக்கியமான நாள். எரிந்தது வெறுமனே ஒரு ஜீப் மட்டுமல்ல.அது ஒரு முக்கிய முரண்பாடு ஒன்றின் ஆரம்ப குறியீடாக இருந்ததுதான் முக்கியம்.. பொறுமை என்ற கோட்டுக்குள்ளேயே எப்போதும் இருப்பார்கள் என்ற எகத்தாள எண்ணத்துடன் துரோக அரசியலை தொடர்ந்த மிதவாத தலைமைக்கு இளைஞர்கள் தம் மொழியில் சொன்ன முதல் எச்சரிக்கை அது.

வீர வசனங்களாலும் உணர்ச்சிப் பேச்சுகளாலும் சட்டவாதிகளுக்கே உரிய வாதங்களாலும் அரசியலை முன்னெடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 பொதுத்தேர்தலில் மக்களிடம் மேடைக்கு மேடைக்கு ஒரு உறுதிமொழியை கொடுத்தபடியே இருந்தனர். இந்த தேர்தலில் வென்றால் விரைவில் தமிழீழ தேசிய மன்றை அமைப்போம் என்று சொல்லி வெற்றி பெற்றவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மாவட்டசபை என்ற எலும்புத்துண்டை ஏந்தியபடி மக்களிடம் வந்தபோதுதான் பிரச்சினையே ஆரம்பமானது.

ஒவ்வொரு முறையும் அடிபணிவு அரசியலை கையிலெடுக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு சமயோசிதம் செய்வார்கள். அப்போது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் செயற்பாட்டில் இருந்த ஒரு அமைப்பு கூட்டணியினரை கேள்வி கேட்டால் ஆயுதம் தாங்கிய மறு இயக்கத்தின் தலைவரின் பெயரை சொல்லி அவரின் அனுமதியுடனேயே இந்த முடிவை செய்தோம் என்றோ அவருக்கு அறிவித்துவிட்டுத்தான் இந்த முடிவை எடுத்தோம் என்றோ காரணம் கூறி தப்பித்தபடி இருந்தார்கள்.

ஆனால் இம்முறை எல்லா பக்கத்தாலும் அவர்களால் தப்ப முடியாதபடி இறுகி விட்டிருந்தார்கள். தமிழர்கள் பாராளுமன்ற பாதையை தமது விடுதலைக்கான ஏதோ ஒரு யுக்தியாக பயன்படுத்தலாமே தவிர அதுவே அனைத்து விதமான உரிமைகளையும் பெற்றுத்தர ஒருபோதும் முடியாது என்பதை காலாகாலமான வரலாற்றில் இருந்து கற்றுணர்ந்த இளைஞர்கள் கூட்டணியின் மெத்தனமான போக்குக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் விட்டுவிட்டு சிங்கள பேரினவாதத்துடன் தேன்நிலவு கொண்டாடுவதால் பெருத்த கோபமும் சினமும் கொண்டு அமைதி வழியிலான எதிர்ப்புகளை நடாத்தி வந்த பொழுது அது.

கூட்டணியின் கூட்டங்களில் பகிரங்கமாகவே கூட்டணிக்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்தும், கூட்டணியின் இணக்க அரசியலுக்கு எதிராக, தொழுது விழும் அரசியலுக்கு எதிராக ஊர்வலங்களை நடாத்தியும் இருந்த நிலை கொஞ்சம் மேலெழுந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி கொழுத்தப்படுவது வரை கொழுந்துவிட்டு மேலெழுந்தது. கூட்டணி இம்முறையும் தமது ஆஸ்தான இளைஞர்களை வைத்து இந்த எதிர்ப்பு தீயை அணைக்க மிக முயன்றது. எந்த பல்கலைக்கழககத்துள் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியை கொழுத்தி தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை விற்க வேண்டாம் என்று மாணவ சமூகம் எச்சரித்ததோ அதே பல்கலைக்கழகத்துக்கு மிக அருகில்கூட ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டணி ஏற்பாடு செய்து பார்த்தது.ம்கூம்.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் வீடுகளின் முன்னால் மறியல் நடாத்தப்பட்டது. சிங்கள பேரினவாத அரசின் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள்களாகவும் மறிப்பு போராட்டங்களாகவும் அவை மாறின. ஆனாலும் என்ன வீடுகளின் முன்னால் மறியல் இருந்த தமிழ் இளைஞர்களுக்கு மேலாக நடந்தே அரசு நிகழ்வுகளில் கலந்து புளகாங்கிதம் அடைந்தனர்.

இப்போது நிலைமை எரிபற்று நிலையை நெருங்கி விட்டதை ஆயுதப் போராட்ட அமைப்புகள் அவதானித்தபடி இருந்தன. தமக்கே உரிய முறையில் கூட்டணியின் தலைமையை இதற்கு விளக்கம் கேட்டனர். கூட்டணியும் இதற்கு முன்னர் செய்த அதே பாணியையே இம்முறையும் செய்ய எத்தனித்தது. இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு மிக முக்கிய சந்திப்பு புள்ளி வந்து சேருகின்றது. உலக நாடுகளின் புரட்சிப் போராட்டங்கள், விடுதலைப் போராட்டங்கள் என்பனவற்றில் தவறாது வந்து சேருகின்ற ஒரு மோதல் புள்ளியை காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுள்ளும் கொண்டு வருகின்றது.

இலட்சியம் என்பதை வெறுமனே தமது பதவி சுகங்களுகளை அடைவதற்கான ஒரு பாதையாக நினைத்து இருக்கும் மிதவாத தலைமைக்கும் இலட்சியம் ஒன்றிற்காக உயிரையும் அர்ப்பணித்து போராடும் அமைப்புக்கும் ஏதோ புள்ளியில் மோதல் வந்தே அது அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். இதுவே வரலாறுகள் சொல்லும் சேதி. அந்த சேதி இப்போது தமிழ் மிதவாத தலைமைக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லப்பட முடிவு எடுக்கப்பட்டது. எச்சரிக்கை சொல்லப்படுவதற்கான இடம் மிக கவனமாக தேர்ந்து எடுக்கப்பட்டது. நீங்கள் போகும் பாதை தவறானது, துரோகத்தனமானது, நீங்கள் திருந்த இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது, உங்கள் பேச்சினில், வாக்கினில் சொல்லப்படும் தமிழீழ இலட்சியத்துக்கு துரோகம் செய்யாமல் இருங்கள் என்ற எச்சரிக்கையை முதல் தீயை மூட்டும் இடமாக வல்வெட்டித்துறை தெரிவு செய்யப்படுகிறது.

ஏனென்றால் தமிழீழ இலட்சியம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி 77தேர்தலில் வெற்றி பெற்ற அத்தனை தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களையும் தேர்தல் முடிந்து நான்கு நாட்களில் அழைத்து வெற்றி விழாவை நடாத்திய வல்வெட்டித்துறையிலேயே அந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தெளிவான எச்சரிக்கையின் முதல் செய்தியும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது ஒரு அற்புதமான தேர்வு.

சிங்களதேசத்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் ஜீப் வண்டி அல்லது உத்தியோகபூர்வ வாகனம் எரிக்கப்பட்டு அதனூடு செய்திகள் சொல்லப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1981 மார்ச் 15ம்திகதி மாலை 5மணி அளவிலேயே சீலனும் சங்கரும் லாலாவும் கிட்டுவும் மற்றைய போராளியும் கூட்டம் நடக்கும் இடத்தில் மக்களோடு மக்களாக நின்றிருந்தனர். எதிர்பார்த்த கூட்டணி செயலாளர் நாயகத்தின் வாகனம் வரவில்லை.இதோ வருகிறார். அதோ வருகிறார் என்ற அறிவிப்புகள் காற்றில் பறந்தபடி இருக்கின்றன.

அப்போதெல்லாம் சீலனுக்கும் தலைவருக்கும் உருவ அமைப்பில், மீசையில், கண்களின் அந்த ஒளியில் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு தலைவர் போலவே தோற்றிமளிப்பான் சீலன். சீலனை பார்த்துவிட்டு ‘ என்ன தம்பியும் வந்திருக்கோ கூட்டத்துக்கு’ என்று ஒரு கூட்டணி இளைஞர் பேரவைகாரர் கேட்டதால் வந்தவிடயம் பிழைக்கப் போகுதோ என்ற எண்ணம் போராளிகளுக்கு பற்றிக்கொண்டது.மேலும் அந்த இடம் இராணுவ முகாமில் இருந்து 300 மீட்டர்களுக்கும் குறைவாகவே இருந்தது.

அமிர்தலிங்கம் வேறு ஒரு கூட்டத்தில் நிற்பதால் அவரால் வர முடியவில்லை என்றும் அதற்கு பதிலாக உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் இதோ வருகிறார் என்ற அறிவிப்பு சொல்லப்படுகிறது. மாறிய களச்சூழலில் நிலைமைக்கேற்ப முடிவை எடுக்கும் அதிகாரம் சீலனுக்கு வழங்கப்பட்டதாலும், நினைத்தது தவறும் பட்சத்தில் எப்படி செயற்படவேண்டும் என்ற “பிளான் பீ “களும் சீலனுக்கு தலைமையால் ஏற்கனவே சொல்லப்பட்டதால் சீலனே இறுதி முடிவை எடுக்கிறான்.

சொல்லப்பட வேண்டிய செய்தி தனிமனிதனுக்கு என்பதைவிட தமிழர்களின் இலட்சியத்தை வைத்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை தமது அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தும் சுயநல எண்ணத்துக்கே என்பதாலும் அதிலும் மிதவாத எண்ணங்கொண்ட அனைத்து தரப்புக்குமான செய்தி என்பதாலும் தர்மலிங்கத்’தின் ஜீப்பையே அன்று எரிப்பது என்று முடிவானது. இருள்சூழ தொடங்கி இருந்த நேரம். தர்மலிங்கம் ஜீப்பில் இருந்து இறங்கியதும் சீலன் கூட்டத்துள்ளிருந்து அவரை நெருங்கி துப்பாக்கியை நீட்டியதும் தர்மலிங்கம் ஒரு தூரம் விலகி சென்றுவிட்டார்.

சங்கர் கொண்டு வந்திருந்த பெற்றோல் கானை ஊற்றி தீயை வைக்க முன்னர். ‘தமிழீழம் என்று சொல்லி தேர்தலில் வென்றுவிட்டு மாவட்டசபை என்று எலும்புமாலை போடும் கூட்டணிக்கு எச்சரிக்கை’
‘மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை’ அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த சிறீலங்காவுக்கு துணை போகாதீர்’ என்று கோசம் எழுப்பியபடி ஜீப்பை எரித்தனர். ஒரு மிகப்பெரும் சரித்திர செய்தியாக ஜீப் எரிந்தபடி இருந்தது.

என்றாவது ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு வரலாற்று இடம் அது. விடுதலையை நோக்கி மக்களை அணிதிரட்ட வேண்டிய ஒரு அமைப்பு தனது கடமைகளை செய்யாமல் ஆக்கிரமிப்பாளனுக்காக வக்காலத்து வாங்கும் வக்கீல் நியாயங்களை சல்ஜாப்புகளை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றியபடி இருந்தால் அந்த மக்களின் விடுதலைக்கான உண்மையான நேர்மையான ஒரு அமைப்பு நிச்சயமாக அதனை தட்டி கேட்கும். எச்சரிக்கை செய்யும். முழு உலக விடுதலைப் போராட்டங்களிலும் இத்தகைய நிகழ்வு ஏதோ ஒரு காலகட்டத்தில் நடைபெற்று அதிலிருந்தே அடுத்த கட்டத்துக்கு முன் நகர்ந்தும் இருக்கும் என்பதை சரித்திர பக்கங்களில் காணலாம். அத்தகைய ஒரு சரித்திர நிகழ்வாக அந்த ஜீப் எரிந்து கொண்டே இருந்தது. இன்றைக்கும் அது நிறைய செய்திகளை கூறியபடியே..

– ச.ச.முத்து –

(www.eelamalar.com)