2

தலைவர் கண்களில் சிறிதேனும் நீர்துளி எட்டிபார்க்கும் தருணம்

அண்ணண் பிரபாகரன் ஆன்மா ஒரு கணம் கலங்கி கண்களில் சிறிதேனும் நீர்துளி எட்டிபார்க்கும் எண்டால் அது கரும்புலிகள் கையசைத்து இலக்கை நோக்கி விடைபெறும் அந்த கணம்மாகதானிருக்கும்…..

கரும்புலி சாவுக்கு தேதி குறிக்கும் சரித்திரம்…

கந்தகந்தை மேனியிற் கட்டிய சந்தனம்…

வீதியுலாவுக்காக வெளியே வராத விக்கிரகம்…

ஊயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம்…

அடிமுடி அறியமுடியா அற்புதம்…

தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை…

இவர்களை எழுதத்தொடங்கினால் எந்த மொழியும் தோற்றுப்போகும்,வார்த்தைகள் வறுமையடையும்,உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும் கையோடுதான் வெளியே வருவார்கள்,கற்பனைக் கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள் அடுத்த வார்த்தை வராது, சித்திரக்காரர்களும் தீப்பிழம்பை மட்டும்தானே தீட்டமுடியும் பக்கத்திலிருந்து பழகியவர்கள்கூட குறிப்புகள் மட்டும்தான் கூறமுடியும் ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெறியாது

சமுத்திர நீரை அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா? ??

ஓடும் முகிலை ஏணி வைத்து எட்டி தொட முடியுமா? ??

எதிரியின் எந்த வலுவும் இறுதியில் இவர்களிடம் சரணடையும் இலக்கை அடையும் கடைசி நொடிவரை சிரித்தப்படியே திரிவர் மறுநாள் வெடித்த செய்தி வெளிவரும்போது ஜாதகமும் ஜோதிடமும் தங்களுக்கு தங்களே தீமுட்டிக்கொள்ளும் கிட்டே நெருங்கமுடியாத இலக்குகளைகூட தொட்டு அசைத்திடும் துணிச்சலர் இவர்.முதுகில் வேர்குரு போட்டாலே முண்ணூறு மருந்துகள் தேடும் உலகில் சாவைத் தன் தோள்களில் சுமந்து நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள் காற்றிலும் நீரிலும் இவர்கள் கலக்கும்போது காற்றுக்கு வேர்க்கும் நீர் நெருப்பாகிவிடும் கரும்புலிகளுக்கு சூரியன் கைகெட்டும் தூரம்தான் பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம்தான்.

கரும்புலிகள் தலைவன் தலைவாரிவிடும் புயல்கள் தாயை நேசிக்குமளவுக்கு தலைவனையும் நேசிப்பவர்கள் தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள் ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம் இவர்கள் அகராதியில் அச்சிடப்படுவதில்லை யூலை 5 கருமைக்கு பெருமை வந்தநாள் நெல்லியடியில் மில்லர் புதிய வரலாற்றை தொடங்கியநாள்.கரும்புலிகள் தேவையறிந்து செல்பவர்களேயன்றி சாவை விரும்பி சந்திப்பவர்களல்ல இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ முகில்கள் முத்தமிடத மலைமுகடுகளோஅல்ல பனியாய் உருகும் நெஞ்சுக்கும் பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும் உரிமையாளர்கள்.

நெஞ்சத்தில் நினைவுகளை மூச்சாக்கி செயலில் மட்டும் அதை வீச்சாக்கும் எம் தேசிய பெருந்தலைவனின் வளர்ப்பு உச்சங்கள் கரும்புலிகள்.உயிரின் திரியில் தீமூட்டி உடலை அதிலே வெடியாக்கி தலைவன் கனவை நனவாக்கி எரிவோம் எரிவோம் பகை வீழ்த்தி என்று போகும் இவர்கள் தோள்கள் மீதேறிதான் சாவும் போகின்றது வாழ்வும் சாவும் விடுதலைக்கானால் கரும்புலிகளுக்கு தீ கூட குளிர்கின்றது.வெளியே எத்தனைப்பேர் அறிவார்கள் இந்த அற்புதங்களின் ஆணிவேரை.வர்ணிக்க வார்த்தையற்று செத்துக்கிடக்கின்றோம் தியாகத்தின் சிகரம் தொட்ட கரும்புலிகளின் தியாகங்களை.

வெடித்தபின்னரும் இவர்கள் அனைவரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை சுவரொட்டியில் சிரிப்பவர்களும் சிலர்தான்.பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு கரும்புலிகளின் ஜனனம் மட்டும் மரணத்தில்தான் ஆரம்பம்.

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்

ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்

வேருக்கு மட்டுமே விழுதினை தெறியும்

வெடிமருந்தேற்றிய வேங்கையை புரியும்

-பிரபாசெழியன்

(www.eelamalar.com)