மாசற்ற மதியூக வீரன் !

thalaivaaகல்லில் இருந்து ஆயுதங்கள் தோன்றிய காலத்திலே கல்லைச் செதுக்கி வாள் என்னும் ஆயுதத்தை உருவாக்கியவன் தமிழன் என்று பண்டைய பாடல்கள் கூறுகின்றன. இன்று உயர்ந்த நிலையில் உள்ள இனங்கள் போர்க் கலையென்றால் என்னென்றே தெரியாதிருந்த காலத்தில் போர்க் கலையில் சிறந்தவனாக இருந்த பெருமை தமிழனுக்கு உண்டு. இதை தற்புகழ்ச்சி என்று எண்ணி கூறாமல் இருந்தால் அது அறியாமை.

இன்றுள்ள எல்லா நாட்டு போர்க்கலை அறிஞர்களும் ஒருவருடைய பெயரைக் கேட்டால் ஒரு கணம் நின்று பெரு மூச்செறிந்து, அவருக்கு இணையான ஒருவர் இன்றய உலகில் இல்லையென்று மனதில் எண்ணிச் செல்வார்கள். அப்படி உலகால் மதிக்கப்படும் ஒருவர்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன்.

நவீன ஆயுதங்கள், உலகத்தின் புதிய போர் வியூகங்கள் என்று எத்தனை திட்டங்களைப் போட்டாலும் ஒரே நொடியில் அத்தனையையும் புரிந்து தவிடு பொடியாக்கிவிடும் திறமை வாய்ந்தது அவர் மதியூகம். இப்படி சொல்லி விட்டால் மட்டும் அது போதியதாகி விடாது. அதற்குரிய காரணங்களையும் தருதல் அவசியம். இதற்கு எத்தனையோ உதாரணங்களைத் தரலாம். இருந்தாலும் மேலை நாடுகளின் இன்றைய போர்த் திட்டங்களுடன் அவருடைய மதியூகத்தை நாம் ஒப்பு நோக்கி உணர்ந்து கொள்வது சற்று வித்தியாசமாக இருக்கும்.

ஆயுத விற்பனையை அதிகரிப்பதற்கு மேலை நாடுகள் அறிமுகம் செய்துள்ள இன்றைய போர் உத்தியை வாரோட்டப் போர் முறைமை என்று எளிமையாகக் கூறலாம். போரில் ஒரு முறை ஒரு அணியை முன்னேறச் செய்வது, மறுமுறை எதிரணியை முன்னேறச் செய்வது என்று இரு தரப்பும் வாரோட்டம் போல ஓய்வின்றி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருப்பதை வாரோட்டப் போர் முறை என்று கூறலாம். ஆயுத விற்பனை சீராக நடைபெற மேலை நாடுகள் கண்டு பிடித்துள்ள புதிய போர்க்கள வியூகங்களில் இது முக்கியமானது.

இதை பல நாடுகளில் அறிமுகப் படுத்தி மேலை நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளன. சில மேலை நாடுகளின் ஆயுத விற்பனை வருமானம் கடந்த பத்தாண்டுகளில் ஆரோக்கியமாக உயர்ந்து சென்றமைக்கு உலகில் பல வளரும் நாடுகள் வாரோட்டப் போர் முறைக்குள் சிக்குண்டது முக்கிய காரணமாகும். இதற்கு ஆபிரிக்க நாடான கொங்கோ, மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் வாரோட்டப் போர்கள் சிறந்த உதாரணங்களாகும். பல நாடுகளில் வெற்றி கண்ட இந்த வாரோட்டப் போர் முறை ஒரேயொரு இடத்தில் மட்டும் தோல்வியடைந்து போனது அதுவே தமிழீழம்.

சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் இலங்கையிலும் ஓர் வாரோட்டப் போர் முறையை ஏற்படுத்த எண்ணி சிறிலங்கா அரசுக்கு சிலர் சூரியக்கதிர் என்னும் போர் வியூகத்தை வகுத்துக் கொடுத்தனர். பெரும் ஆயுத தளவாடங்களுடன் கிளர்ந்து வந்தது சிங்கள இராணுவம். இவர்கள் ஏன் இப்படி வருகிறார்கள் ? இவர்களுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை எவரும் கண்டு பிடிக்காத நேரத்தில் கண்டு பிடித்ததுதான் தலைவர் பிரபாகரனுடைய மதியூகம். ஒரே உத்தரவு போராளிகளையும் மக்களையும் இழப்பில்லாமல் பின்வாங்கும்படி கூறினார். இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்து இலட்சம் மக்களும் போராளிகளும் யாழ். குடாநாட்டையே விட்டு வெளியேறி எதிரியின் எண்ணத்தையே ஈடேற விடாது முறியடித்தனர்.

இத்தருணத்தில் மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களை கூர்ந்து அவதானித்தவர்கள் ஒன்றைப் புரிந்திருக்கலாம். அங்கு ஓர் போர் நடக்க வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பது அவர்களின் செய்திகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. உண்மையில் சூரியக்கதிர் இப்படியாகும் என்பதை எவரும் எதிர் பார்த்திருக்க முடியாது. திட்டம் வகுத்த எல்லோர் எண்ணங்களும் ஒட்டு மொத்தமாகத் தவிடு பொடியானது. எதிரிகள் கறுவிக் கொண்டனர். தமது பருப்பு முதல் தடவையாக தமிழீழத்தில் வேகாமல் போய்விட்டதை உணர்ந்தனர். இருந்தாலும் மனதை ஆற்றிக் கொண்டனர். வாரோட்டப் போர் முறையை வெற்றி கொள்வதானால் மறுபடியும் ஓர் வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் இறங்கினால்தான் சாத்தியமாகும். எனவே வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் சிக்குண்டுபோவது தவிர்க்க முடியாதது என்று சூரியக்கதிர் வியூகத்தை வகுத்தவர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் உலகத்தவர் எவரும் எதிர் பாராதபடி அங்கு வேறு காரியங்கள் நடைபெற்றன. ஓயாத அலைகள் மூன்று வவுனியா வீதியில் மோதலை நடாத்தி, ஆனையிறவு முகாமிற்குரிய உணவு, நீர் ,மின்சாரம் என்பவற்றின் வழங்கலைத் தடை செய்து அதை பெரும் போரின்றி வீழ்த்தியது. பின்னர் சாவகச்சேரியைத் தாக்கி, ஊரெழு வழியாக உள்ளே புகுந்து பலாலியில் இருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தொண்டைக் குழியையும் நெரித்தது.

இடி விழுந்ததைப் போல ஓர் பேரோசை ! திருடன் கையில் தேள் கொட்டியதைப் போல உலக நாடுகள் எல்லாமே விழித்து நின்றன. சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற வேண்டுமென்று துடித்துப் பதைபதைத்தன. இவர்கள் ஏன் இப்படித் துடிக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்கியோர் அவர்களிடம் ஏதோ ஓர் உள்நோக்கம் இல்லாமல் இப்படித் துடிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கலாம்.

இதற்கு முன்னரும் பல்லாயிரக் கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். ஜே.வி.பி காலத்தில் அறுபதாயிரம் வரையான சிங்கள மக்களையே சிறிலங்கா இராணுவம் கொன்றதாக கூறுகிறார்கள். அப்பொழுதெல்லாம் சிங்கள மக்களுக்காக கண்ணீர் விடாத நாடுகள் எல்லாம் இப்போது மட்டும் ஏன் துடி துடிக்கின்றன ? இதுதான் முக்கிய கேள்வியாகும்.

அழுது துடித்தவர்கள் யார் என்ற பட்டியலை எடுத்து நோக்கினால் அத்தனை பேரும் சிறிலங்கா அரசுக்கு பெருந் தொகையான ஆயுதங்களை விற்பனை செய்து அந்தப் போரினால் கணிசமான வருமானம் பெற்று வந்தவர்களே என்பது தெரியவரும். இத்தனை ஆயிரம் கோடி செலவழித்து தயாரித்த சூரியக்கதிரை இழப்புக்கள் இல்லாமல் சொற்ப செலவுடன் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டார்கள் என்றால் எதிரிகள் துடிக்காமல் இருப்பார்களா ? சூரியக்கதிர் வியூகத்தை வகுத்து, சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களையும் வழங்கிய நாடுகள் துடித்த துடிப்பில் தங்களை அறியாமலே தங்களை இனம் காட்டிக் கொண்டன.

போர்க் கலையிலும், போரியல் அறிவிலும் தமக்கு இணையானோர் எவரும் இல்லையென மார் தட்டியோர் கட்டிய அத்தனை மனக் கோட்டைகளையும் இடித்து தகர்த்ததுதான் ஓயாத அலைகள் மூன்று. அந்த போர்த் திட்டத்தை வகுத்த மதியூக மூளையே தலைவர் பிரபாகரனின் வெற்றியின் இரகசியம். இந்த மதியூகம்தான் உலகத்தின் அதி சிறந்த ஆயுதம். மதியூகத் தலைவனே உலகத்தின் மாபெரும் படையணி. எத்தனையாயிரம் கோடிகளைக் கொட்டினாலும் ஒரு பிரபாகரனுக்கு இணையாக உலகில் எதுவும் வரப்போவதில்லை என்று உணர்த்தியது ஓயாத அலைகள் மூன்று.

இதை மேலும் சிறப்பாக விளங்க மகாபாரதத்தில் ஓரிடத்தை அவதானிக்கலாம். தன்னிடம் உதவி கேட்டு வந்த அர்ச்சுனனைப் பார்த்து இதோ பார் என்னிடமுள்ள அக்குறோணிக் கணக்கான சேனைகள், பரிவாரங்கள் எல்லாம் உனக்கு வேண்டுமா ? அல்லது கையில் ஆயுதம் இல்லாது தேர்ச் சாரதியாக இருக்கும் தனியனான நான் வேண்டுமா ? என்று கண்ணன் கேட்டான். கண்ணா ! பரந்தாமா ! எத்தனையாயிரம் கோடி சேனைகள் இருந்தாலும் அவையெல்லாம் கால் து}சுக்கு சமானம். நீ ஒருவன் எம்மோடு இருந்தால் அதற்கு இணையாக உலகில் எதுவும் வருமோ ? என்று கூறி கண்ணனை பார்த்த சாரதியாக ஏற்று பாரதப் போரிலும் வென்றான் அர்ச்சுனன்.

எந்த நாடும், எந்த சேனையும் எமக்கு வேண்டாம் ! நீர் ஒருவரே எமக்குப் போதும் ! தமழீழத்தை மீட்டெடுப்போம் என்று தலைவர் பிரபாகரனின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர் தமிழீழ மக்களும் அவரின் அன்புத் தம்பிகளான விடுதலைப் புலிகளும். ஆம் ! தலைவர் பிரபாகரனின் மதியூகமே தமிழினத்தின் வெற்றி ! அவருக்கு இணையான போர்க்கலை வல்லுநர்கள் இன்றைய உலகில் இல்லை என்பதைக் கூற அந்த மாசற்ற மதியூகத்தில் உருவான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையே சாட்சியமாகும்.

(www.eelamalar.com)