தளபதி கிட்டு….விடுதலைப் போராட்ட காலத்தின் மைல்கல்!
தளபதி கிட்டு எழுதிய கடிதம் இது!
காலத்தின் பதிவு இது!
புரட்டாதி 1991
லண்டன்
அன்பின் வாஞ்சி!
உங்கள் அன்பு மகனின் வீரச் சாவுச் செய்தி கேட்டு… வருந்தினேன்.. எப்படி உங்களுக்கு ஆறுதல் சொல்வது? என்று எனக்கு தெரியவில்லை!..
ஆனால்.. உங்களின் மனத்தைப் பற்றி எனக்கு தெரியும்..! வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணங்களையும் மிக இலகுவாக முகம் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உடையவர் நீங்கள்..! உலகுக்கே அறிவுரை சொல்கிற ஓர் எழுத்தாளர்..!
அதனால் .. உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது எனக்குத் தெரியும்..! இருந்தும்.. என்னால் ஜீரணிக்க முடியாத நிகழ்வு இது .. என்பது மட்டும் உண்மை!
புலிச் சீருடையில் நின்று.. ஓர் போராளித் தந்தை.. புலிச் சீருடை அணிந்த தன், போராளி மகனுக்கு கொள்ளி வைப்பது என்பது.. எமது போராட்டத்தின் ஓர் புதிய பரிமாணம் ஆகும்..! அதை தாங்கள் முதன் முதலாக எமது போராட்டத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள்.. இது நிச்சயம் எங்கள் போராட்டத்துக்கு ஓர் உத்வேகம் அளிக்கும்.. வரலாற்றில் நின்று வாழும் என்பது உண்மை..!
உங்கள் அருகில் நான் இந்த வேளையில் இல்லை என்று வருந்துகிறேன்..! ஆனால்.. உங்கள் அருகில் இருப்பதுபோல் தான் இன்று நான் நினைக்கிறேன்..! எங்கள் மண்ணில்
வாழும் பாக்கியம் உங்களுக்கு உண்டு ஆனால்.. எனக்கு இல்லை..!
ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு எங்கள் மண்ணை எண்ணிப் பார்க்கிறேன்..! எங்கள் மண்ணில் கிடைக்கும் அந்த சுகம் எந்த மண்ணிலும் எனக்கு கிடைக்கவில்லை..!
நாங்கள்.. சென்னைச் சிறையில் இருந்தபோது.. கவிதை எழுத எனக்குச் சொல்லித் தந்தீர்கள்..
ஆனால்.. எங்கள் மண்ணில் இருந்தபோது கவிதை எழுத.. எனக்கு நேரம் கிடைக்கவில்லை.. சிறைக்குள் கிறுக்கிய சில கவிதைகளைத் தவிர! ஆனால்.. அந்நிய மண்ணில் இருக்கும்போதுதான் எங்கள் மண்ணின் அருமை தெரிகிறது..! அதை இழந்து விட்ட கொடுமை எப்படி என்று புரிகிறது..!
அதனால்.. இங்கே நிறைய கவிதைகள் எழுதுகிறேன்..அவை கவிதைகளா…. என்பது எனக்குத் தெரியாது..? ஆனால்… கவிதைகளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் .. அவை சிலவேளை கவிதைகள் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால்.. என்.உள்ளக் குமுறல்கள் அவை..! என் மனத்தில் இருந்து.. வந்த நினைவுகளின் சுருதி லயங்கள் அவை என்பது மட்டும் எனக்குத் தெரியும்! அவற்றை நான் எமது மண்ணுக்கு வரும்போது உங்களுக்கு காட்டுகிறேன்!
மீண்டும் சொல்கிறேன்..உங்களுக்கு ஆறுதல் சொல்ல தேவை இல்லை.. ஆனால்.. ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள் உங்களை!
விரைவில் சிந்திப்போம்
அன்புடன்
கிட்டு
பிற்குறிப்பு
***************
தளபதி கிட்டு.. எனக்கு லண்டனில் இருந்து.. எழுதிய இந்த மடல்.. விலை மதிக்க முடியாத ஒன்று..! என் மகனை.. போர்க்களத்தில் இழந்த சோகத்தை இந்த மடல் துடைத்து, ஒத்தடம் கொடுத்த காலம் ஒன்று இருந்தது என்பது மட்டும் உண்மை!
ஒவ்வொரு போராளியுடனும் அவர் எப்படி மானசீகமாக பழகினார்.. வாழ்ந்தார்? என்பதை சொல்லும் மடல் இது!
நான் அவருடன் யாழ் மாவட்டத்தில் இருந்து நீண்டகாலம் போராடியது மட்டும் அன்றி.. சென்னையில் ஒன்றாக இருந்த காலமும்,… பின்னர் அவருடன் சென்னை மத்திய சிறையில் ஒன்றாக இருந்த காலமும் மறக்க முடியாதவை ஆகும்..
தளபதி கிட்டு….விடுதலைப் போராட்ட காலத்தின் மைல்கல்!
அது மட்டும் உண்மை!
– மு.வே.யோகேஸ்வரன்