பகிரப்படாத பக்கங்கள் -04 

திட்டமிட்ட சண்டை திட்டமிடப்படாத வகையில் எதிரியால் தொடங்கப்பட்ட போது…

மணலாறு காட்டுக்குள் ஜீவன் முகாம் தன்னுள் பல நூறு போராளிகளை உள்வாங்கி இருந்தது. அங்கு தான் இறுதியாக சண்டையின் திட்டங்கள் விளக்கப்பட்டு போராளிகள் வழியனுப்பி வைக்கப்படுகிறனர். ஜீவன் முகாமில் இருந்து கிட்டத்தட்ட 7 மணித்தியாலங்களுக்கு மேலான நடைப்பயணம். கொக்குத்தொடுவாய் நோக்கிய திசையில் அடர் காட்டுக்குள் பாதைகளற்ற நிலையில் காட்டு மரங்கள் மற்றும் பற்றைகளை முறித்து பாதையமைத்து செல்கிறது அந்த போராளிகள் அணி. சிறுத்தை படையணி, துணைப்படை என்று சண்டையணிகளை கொண்ட அந்த பெரும் நகர்வுக்குள் மிக குறுகிய ஆளணி மற்றும் வளங்களை முதுகுப்பைகளில் சுமந்தவாறு செல்கிறது மருத்துவ அணி ஒன்று.

கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்ட போது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விடுதலைப்புலிகளால் அந்த தாக்குதல் வெற்றி கொள்ளப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் சில இரகசிய கசிவால் அந்த தாக்குதல் இழப்புக்களோடு வெற்றியடையவில்லை. என்றாலும் பல அனுபவங்களை எம் படையணிகளுக்கு கொடுத்ததை மறுக்க முடியாது.

ஒரு படைக்கட்டமைப்புக்கு இரகசியம் என்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர வைத்த தாக்குதலாக இது அமைந்தது. இந்த சண்டை வெற்றி பெறுமாக இருந்தால் கொக்குத்தொடுவாயில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லும் பிரதான வீதியால் மற்றும் தென்னமரவாடி கடற்பகுதி உள்ளிட்ட 15 கிலோ மீட்டருக்கு மேலான பிரதேசம் எமது கட்டுப்பாட்டுக்குள் வரும் அவ்வாறு வரும் போது, காயமடைந்த போராளிகள் மற்றும் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களையும், சண்டை அணிகளுக்கான வளங்கல்களையும் செய்யக் கூடியதான நிறைவான திட்டம் இடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டது எதுவும் நடக்கவில்லை. வெற்றி பெற்றிருந்தால் இது நடந்திருக்கலாம். எம்மால் திட்டமிடப்படாத முறையில் எதிரியால் திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடங்கிய போது நாம் திணறித்தான் போனோம்.

தாக்குதலுக்காக படையணிகள் தயாராக தமது நிலைகளில் நிற்கின்றன கரி படர்ந்து கிடந்த அந்த காடெங்கும் ஒருவரை ஒருவர் தெரியாத இருட்டு. இராணுவ முகாம் சுற்றிவளைக்கப்பட்டு இருந்ததாய் எம்மவர்கள் நம்பினார்கள். தாக்குதல் வியூகம் எதிரிக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது என்ற உண்மை யாருக்கும் புரியவில்லை. எதிரி எதிர்பார்த்துக் காத்திருந்தான். நாங்களோ அவனை வீழ்த்தி விடுவோம் என்ற முழு நம்பிக்கையோடும் புதிய வியூகம் ஒன்றோடும் காத்திருந்தோம். அதே போலவே அவனும் தாக்குதலை நடாத்த காத்திருந்தான்.

திடீர் என்று ஒரு ஊதா நிறத்து பரா (வெளிச்சக் குண்டு) எழுந்து வானில் எரிகிறது. எம்மவர்களுக்கு அந்த சமிக்கை புரியவில்லை. ஆனால் எம் தளபதியின் சமிக்கைக்காக காத்திருந்தார்கள். முன்னணியில் நின்ற போராளிகளில் இருந்து 300 -400 மீட்டர்கள் தூரத்தில் மருத்துவ அணி தயார் நிலையில் இருந்தது. சண்டை தொடங்கியதும் தமக்கான பணி ஆரம்பமாகும் என்ற உண்மையோடு தாயாராக இருந்தார்கள். இந்த அணியில் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களான மலரவன், தணிகை, மிரேஷ் ஆகி மூன்று தமிழீழ மருத்துவக்கல்லூரியின் முதல்நிலை மருத்துவர்களும் மற்றும் கலை ( யாழ்ப்பாண பல்கலைக்கழக 3ஆம் ஆண்டு மருத்துவ பீட மாணவன்) என்பவரும் அடங்கி இருந்தார்கள். இதே வேளை இராணுவ மருத்துவர்களான ஜோன்சன் மற்றும் புரட்சிமாறன் ஆகியோர் மண்கிண்டிமலைப் பக்கத்தில் இருந்து முன்னேறக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இராணுவத்தினை மறிப்பதற்காக சென்ற அணியோடு செல்கின்றனர்.

அதே நேரம் களமுனையின் பின்னணியில் மருத்துவ சிகிச்சைகளை செய்யும் தயார் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஆரம்பிக்கப்பட்ட போது முதல் அணி மாணவியாக உள் நுழைந்து மருத்துவக் கலாநிதியாக வெளிவந்து அரச மருத்துவராக பணியாற்றி பின்னர் போராளியாகி இராணுவ மருத்துவராக பணியாற்றிய டொக்டர் அன்ரி (திருமதி எழுமதி கரிகாலன் , 2009 ஆயுத மௌனிப்பின் பின் சிங்களத்திடம் சரண்டைந்து காணாமல் ஆக்கப் பட்டுள்ளார். அவரோடு அவரது கணவனான போராளி கரிகாலனும் சரணடைந்தார் ) மற்றும் போராளி மருத்துவர் லெப் கேணல் இசைவாணன் ஆகியோர் தமது பிரதான மருத்துவமனையை நாயாற்றுப்பாலத்தில் இருந்து செம்மலை செல்லும் வீதியூடான பகுதி ஒன்றிலும் “மலைப்பொயின்ட் ” என்று கூறப்படுகின்ற இடத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துபீட 3 ஆம் வருட மாணவனும் போராளியுமான “அடம்ஸ்” பிரதான மருத்துவமனை ஒன்றுடனும் தயாராக இருந்தார்கள். காயங்களை உடனடியாக பின்நகர்த்தி மெயின் என்று கூறப்படுகின்ற இரு பிரதான இராணுவ மருத்துவமனைகளுக்கும் ஒரு மணித்தியாலத்துக்குள் அனுப்பினால் காயங்களுக்கான மருத்துவக்காப்பு நிட்சயமாக உறுதிப்படுத்தப்படும். ஆனால் அங்கு நடந்ததோ தலைகீழானது.

சண்டை நடந்த இடத்தில் இருந்து பிரதான மருத்துவமனைக்கு காயங்களை நகர்த்துவதில் பல இடர்கள் எழுந்தன. திட்டமிட்டபடி சண்டை நடந்திருந்தால் காயங்களை வெற்றிகரமாக காத்திருக்கலாம். ஆனால் சண்டையின் போக்கு எதிரிக்கு சாதகமாக போனதால் எம் மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர் நோக்கியது.

திடீர் என்று எழுந்த ஊதா நிற பராவைத் தொடர்ந்து வெண்ணிற பரா வெளிச்சம் மேலெழ, எதிரி தாக்கத் தொடங்கி இருந்தான். அணிகள் சிதறத் தொடங்கின. திட்டமிட்ட தாக்குதலில் திட்டமிடப்படாத சண்டை தொடங்கியிருந்தது. எமது அணிகள் தொடங்க வேண்டிய சண்டையை எதிரி தொடங்கி இருந்தான்.

இந்த நிலையில் அவசரமாக கொண்டுவரப்பட்ட போராளி ஒருவரின் காயத்தை பரிசோதிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு எழுந்தது. வெளிச்சமற்ற நிலையில் உடலில் எங்கு காயம் என்பதை அறிய கடினமாக இருந்தது ஆனாலும் ஜெமினி மாஸ்டர் என்று அழைக்கப்படும் மணலாறு கோட்டப் படையணியின் தளபதியின் ஒரு கால் சிதைவடைந்ததை இனங்கண்டு அவருக்கான இரத்தப்பெருக்கை கட்டுப்படுத்த முனைகிறார்கள். களமுனைகளில் நிற்கும் எந்த போராளிக்கும் இரத்தக்கட்டுப்படுத்தி துணி ( field comparator) கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் குருதி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி உடனடியாக பின்னே அனுப்புகிறார்கள். அப்போதெல்லாம் மருத்துவ அணியிடம் கைவசம் இருந்ததெல்லாம் சாதாரண நாளத்தினுடாக(Intravenous fluids/IV fluids) ஏற்றும் திரவங்கள்தான். E.g.- Normal Saline, இவற்றினூடாகவே சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.

அந்த காயத்தை பின் அனுப்பி நிமிர்ந்த போது மேனன் என்ற போராளியின் நெஞ்சுக்கு கோல்சரை கிழித்து அதற்குள் இருந்த இரும்பு magazine ஐ பிரித்து சென்ற ஒரு ரவை ஏற்படுத்திய நெஞ்சு காயத்தை கொண்ட ஒரு போராளியை கப்டன் தமிழ்குமரன் தூக்கி வந்தார். (தமிழ்குமரன் பின்நாட்களில் வேறு ஒரு சம்பவத்தில் வீரச்சாவடைந்தார்.) அவருக்கும் இரத்தக் கட்டுப்பாட்டு சிகிச்சையையே செய்தார்கள். அவரை அனுப்பிய மறு நிமிடம் பெண் போராளி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ அணியிடம் கொண்டு வரப்படுகிறார். இதயகீதன் என்ற போராளி கூட வந்திருந்தார். (அவர் பின் நாள் ஒன்றில் கப்டன் இதயக்கீதனாக வீரச்சாவு ) அவருக்கான உடனடி சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். வென்புலோன் ( Venflon ) போட்டு சேலைனோடு கிருமி தொற்று நீக்கி மருந்தும் (Antibiotics )இரத்தமும் (Blood) அவசரமாக போட வேண்டும். இல்லை என்றால் காயப்பட்ட போராளிக்கு எதுவும் நடக்கலாம்.

சண்டை நேரத்து இருட்டில் எதுவமே தெரியாத நிலை. போராளி மருத்துவர் வாமன் பரா வெளிச்சத்தில் அந்த பெண் போராளிக்கு சேலைன் போடுகிறார். இரத்தம் போட முடியாது. உடனடியாக களமுனையில் இரத்தம் ஏற்றும் நிலையில் அன்றைய மருத்துவப்பிரிவின் வளர்ச்சி இருக்கவில்லை. அதை விட இரத்தம் போடுவதாயின் இரு பெரும் பிரச்சனைகளை மருத்துவ அணி எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
1- உடனடியாக காயப்பட்ட போராளியின் இரத்த மாதிரி எந்த வகை இரத்தப்பிரிவு என்று பரிசோதிக்கப்பட வேண்டும். அதற்கு கட்டாயமாக வெளிச்சம் வேண்டும் இல்லையெனில் இரத்த மாதிரி பரிசோதிக்க முடியாது. 
2- உடனடியாக இரத்தம் ஏற்றும் நிலைக்கு அந்த போராளியை நகர்த்த முடியவில்லை. காரணம் பல மணித்தியாலங்கள் காட்டுக்கால் வந்து சேர்ந்த தூரத்தை குறுகிய நேரத்துக்குள் கடந்து தளமருத்துவமனைக்கு அனுப்பி இரத்தம் போடுவது என்பது மிகக்கடினமான ஒன்றாகும். ஆனாலும் அந்த பெண் போராளி காப்பாற்றப்பட வேண்டும்.

மருத்துவ அணி போராளிகள் உடனடியாக அந்த போராளியை தூக்கி கொள்கிறார்கள். காவுபடுக்கையில் வைத்துக் கொண்டு நகர்கிறார்கள். அதற்கு மேல் அந்த இடத்தில் வைத்து சிகிச்சை அழிக்க முடியாத சூழல். திட்டமிட்ட தாக்குதல் எதிரியால் முன்கூட்டியே தொடங்கப்பட்டு அணிகள் சிதறியதால் மருத்துவ அணி தனித்துவிடும் நிலை. காயப்பட்ட போராளியை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு. எதையும் சிந்திக்க நேரமில்லை காவுபடுக்கையில் அந்த பெண் போராளியை கிடத்தி தூக்கி கொண்டு ஐந்து போராளி மருத்துவர்களும் அந்த காட்டுப் பாதையில் நகர்கிறார்கள். நகர்வென்பது நடையல்ல ஓட்டம். ஏனெனில் அந்த காலம் காவலரண் வேலி என்று எந்த நிலைகளும் இல்லை மாணலாறு காடு சிங்களத்தையும் எம்மையும் ஒன்றாகவே தாங்கி நின்றது எமது கட்டுப்பாடு என்று எதுவுமற்ற நிலையில் அவர்கள் ஜீவன் முகாம் கடந்து இராணுவ மருத்துவர் அன்ரியிடமோ அல்லது இராணுவ மருத்துவர் அடம்ஸிடமோ அந்த போராளியை கொண்டு சென்றாலே அவளுக்கான சரியான மருத்துவ காப்பு வழங்க முடியும். உடனடியாக இரத்த மாதிரி பரிசோதிக்கப் பட்டு இரத்தம் போட முடியும். இடையில் வைத்து பரிசோதிப்பதற்கு கூட அவர்கள் தரித்து நிற்க முடியவில்லை. எதுவுமே செய்ய முடியாத சூழல். உடனடியாக வெளியேறியே ஆக வேண்டிய நிலை. அவர்கள் தளபதியின் “எங்க நிக்கிறியள்? வந்தாச்சா? போன்ற அதட்டல் குரலுக்கு பதில் கூற முடியாதவர்களாக நகர்ந்தார்கள்.

ஏனெனின் அன்றைய விடுதலை அமைப்புக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்றான இராணுவ மருத்துவர்கள் இழக்கப்படக் கூடாத ஒரு வளம் என்பது நியம். ஏனெனில் தமிழீழ மருத்துவத் துறை இல்லாத காலம் ஒன்றில் மருத்துவக்காப்பு இன்றி தன் மடியில் தலைசாய்த்து விதையாகிப் போன தமிழீழத்தின் முதல் வித்து சங்கர் அண்ணையின் நிலை எந்த போராளிகளுக்கும் வரக்கூடாது என்பதில் தேசியத்தலைவர் உறுதியாக இருந்தார். ஒரு போராளி மருத்துவரின் இழப்பு பல போராளிகளின் இழப்புக்கு காரணமாகலாம் என்று உறுதியாக நம்பினார். அதனால் தான் எந்த உயிர் சேதமும் இன்றி உடனடியாக அந்த மருத்துவ அணியை வெளி வருமாறு தளபதி கட்டளையிடுகிறார்.

உண்மையில் கவி இரத்தம் போட்டிருந்தால் அந்த பிள்ளையை நாம் காப்பாற்றி இருக்கலாம் என்று நம்புகிறேன். எவ்வாறாயினும் காப்பாற்றும் நோக்கோடுதான் தூக்கி கொண்டு ஓடி வந்தோம் ஆனால் நாம் செய்த சிகிச்சை பலன் தர வில்லை. எம்மால் எதையும் செய்ய முடியவில்லை அடித்த பரா வெளிச்சத்தில் எம்மாலான சிகிச்சையை கொடுத்தோம். என்கிறார் போராளி மருத்துவர் ஒருவர்.

சிறு தூரம் கடந்திருப்பார்கள் மருத்துவர் ஒருவரின் கன்னத்தில் முட்டி சென்ற பெண்போராளியின் கையில் உடற்சூடு இல்லாது இருந்ததை அவர் அவதானிக்கிறார். டேய் நில்லுங்கோ பிள்ளைக்கு ஏதோ நடந்திட்டுது போல கை குளிருது…

உண்மை தான் கவி அவள எங்களால காப்பாற்ற முடியவில்லை. அது சண்டைகளில் வழமையாக நடப்பது தான் என்றாலும் அண்ணையின் எண்ணத்தை அன்று எம்மால் நிறைவேற்ற முடியவில்லை. போராளி மருத்துவர் ஒருவர் இருந்தால் பல போராளிகளை காத்தட முடியும் என்று எண்ணிய அவரின் எண்ணத்தில் மண்ணை போட்டது போல நாம் அன்று ஐவர் இருந்தும் ஒரு போராளியின் உயிரைக் காக்க முடியவில்லை கவி. அவர் மௌனித்துப் போகிறார். விழி கலங்கியருக்கும் அதை துடைத்திருப்பார். டொக்டர் … நான் அழைக்க கலங்கிய மனதோடு ஓம் கவி கப்டன் அல்லி என்ற எம் சகோதரியை உயிரற்ற உடலாக எம் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்து சேர்த்தோம்.

சண்டை தோல்வி ஆனாலும் பல படிப்பினைகளை எமக்குத் தந்திருந்தது. ஒரு போராளி மருத்துவ அணி சண்டைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம். அதன் பின்பான பல கோண விசாரணைகளை முகம் கொடுத்து எம் மருத்துவக் கல்லூரி அமைந்திருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்த போது கப்டன் அல்லி துயிலும் இல்லத்தில் விதையாக விதைக்கப்பட்டிருந்தாள்.

மறக்கமுடியாத நினைவுகளோடு அவரின் தொலைபேசி அணைகிறது நானும் என் நெஞ்சத்தில் அவளின் நினைவை வைத்து நிமிர்கிறேன்…

நன்றி தணிகை அண்ண…

கவிமகன்.இ