தியாக தீபம் திலீபன் சொன்ன- செய்தி என்ன?

‘இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.”

திலீபன் போராடினான்! சாவை சந்தித்தான். ஒரு புதிய விழிப்புணர்வை அவன் எமக்கு ஊட்டினான். அகிம்சைப் போராட்டத்தில் அவன் உண்ணா விரதமிருந்தான்! போராட்டத்திற்கு பசித்தது.-அவனே உணவானான். இலங்கை-இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப்படாது மட்டுமல்ல, எதிர் மறையான விடயங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். சிறிலங்கா அரசிடம் சாத்வீக முறையில் நீதி கேட்டு போராடமுடியாது என்பதை விடுதலைப்புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

தமிழீழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும், தமிழீழ பிரதேசத்தில் சிறிலங்கா அரசு பொலிஸ் நிலையங்களை அமைத்தல் நிறுத்தப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஊர்காவல் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் பறிக்கப்படுவதுடன் தமிழ்க்கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்படவேண்டும்| என்ற கோரிக்கைகளை முன் வைத்து செப்டெம்பர் மாதம் 15ந் திகதி 1987ம் ஆண்டு திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தான். நவஇந்தியாவிடம் நீதி கேட்டு அவன் தன் அகிம்சை போராட்டத்தை தொடங்கினான்.

இந்த ஐந்து கோரிக்கைகள் புதிதானவை அல்ல. ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விடயங்கள் தாம் அவை. இவற்றை நிறைவேற்றுவதற்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய தியாகி திலீபனின் மனஉறுதியை பற்றி கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி! எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ள வரை உறுதியோடு போராடுகின்ற உளவலிமையுள்ள இலட்சிய உறுதி!

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த போது ஒரு சொட்டு தண்ணீரையும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள வேண்டும்| என்று திலீபன் முடிவெடுத்தான். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய அந்த இறுக்கமான முடிவுக்கு தமிழீழ தேசிய தலைவர் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று காரணமாக அமைந்தது.

1986ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது தமிழ் நாட்டிலிருந்து தலைவர் பிரபாகரனின் தொலைத் தொடர்பு சாதனங்களை இந்தியா பறிமுதல் செய்தது. இதனால் தலைவர் கடும் சினம் கொண்டார். தொலைத் தொhடர்புச் சாதனங்களை இந்திய அரசு திரும்பத் தரும் வரைக்கும் ஒரு சொட்டுத் தண்ணீர் அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தலைவர் பிரபாகரன் உடனேயே ஆரம்பித்தார்.

அப்போது நடைபெற்ற விடயங்களை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

உடனடியாகத் தலைவர் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணா விரதப்போராட்டத்தை ஒரு நாள் கழித்தாலாவது ஆரம்பிக்கும்படி இயக்க பிரமுகர்களும் போராளிகளும் தiலைவரை கெஞ்சினார்கள். அந்த ஒரு நாள் அவகாசத்தில் தமிழக மக்களுக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும் இந்த உண்ணாவிரதம் குறித்து அறிவித்த பின்னர் தலைவர் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாமே- என்று கூட அவர்கள் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டமாக மறுத்துவிட்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்குக் கூறிய பதில் இது தான்.

‘இல்லை நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம். எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம் இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத்தண்ணீரும் அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன். இந்திய அரசு எமது தொலைத் தொடர்பு சாதனங்களை திருப்பித் தரும் வரைக்கும் அல்லது எனது உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்”.

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்தியா அரசு பணிந்தது. தொலைத் தொடர்புச் சாதனங்கள், தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே கொண்டு வந்து தரப்பட்டன. தவைர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார்.

இந்த இலட்சிய உறுதிதான் தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை அவன் அடுத்த ஆண்டில் 1987ல் நடாத்தினான். ‘ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போகின்றேன் என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் அவனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். ‘தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தை தொடரலாம்” என்று தலைவர் பிரபாகரன் திலீபனை கேட்டுக் கொண்டார்.

அதற்கு திலீபன் தலைவனிடம் பதில் கேள்வி கேட்டான். ‘அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே நீங்களும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டீர்கள் என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?”.

உயர்ந்தவர்களிடம் மட்டும் காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

தியாகி திலீபனின் சாவும் வித்தியாசமான ஒன்றுதான். அவனுடைய உறுதியான இலட்சியத்தை இயக்கம் உணர்ந்திருந்தது – தமிழ் மக்களும் உணர்ந்திருந்தார்கள். இந்திய அரசு திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில் திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனல்தான் அவன் உண்ணாவிரதம் இருந்தபோதே அவன் மீது இரங்கற்பா பாடப்பட்டது, அவன் உயிரோடிருந்த போதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.

‘திலீபன் அழைப்பது சாவையா-இந்த சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா – அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா” எனக் குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.

விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணேதிரே இந்த கட்டிலிலே முடிகின்றான்
பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு
சொத்தல்லோ – எங்கள் சுகமல்லோ

தாலாட்டுப்பாட்டில் தமிழ்தந்த தாய்க்குலமே
போராட்டவீரன் போய் முடியப்போகின்றான்-
போய் முடியப்போகின்றான்..
போய் முடியப் போகின்றான்..

என்று புதுவை இரத்தினதுரை அவர்களும் கதறிப் பாடியதை கால வெள்ளம் அழித்திடுமா என்ன?

“தேசக்காற்று”

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”