338

நந்திக் கடலில் மிதந்த உடல்களுக்கு மத்தியில் மகளுக்காக காத்திருந்தேன்!

இறுதிப்போரின்போது செல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நந்திக்கடலில் மிதந்தபோது, எனது மகள் உயிருடன் வருவாள் என அங்கேயே காத்திருந்தேன் என்று மகளைப் பறிகொடுத்த தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார். வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிவபாதம் செல்வராணி என்ற தாயார் இவ்வாறு சாட்சியமளித்தார். குறித்த தாய் மேலும் தெரிவிக்கையில்-

‘ நானும் என் கணவரும் ஐந்து பிள்ளைகளுடன் எனது சொந்த ஊரான நெல்வேலிக்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றோம். விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்தின் உக்கிரத்தால் இடம்பெயர்ந்த நாம், அங்காடிகள் போல் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்காலை அடைந்து எமது உயிரை பாதுகாக்க எண்ணியபோதும், செல் தாக்குதலில் அகப்பட்டு என் இரு ஆண் பிள்ளைகளையும் இழந்தேன்.

செல் வீச்சில் சிதறிய என் பிள்ளைகளை எண்ணி அழுவதா அல்லது என் ஏனைய பிள்ளைகளை காப்பதா என்ற மரண போராட்டத்தின் மத்தியில், என் எஞ்சிய பிள்ளைகள் மற்றும் சுகவீனமுற்ற என் கணவருடன் உக்கிர செல் தாக்குதலிலும் உயிரை காக்க முற்பட்டேன். செல் தாக்குதலின் உக்கிரத்தால் என் குடும்பம் சிதறடிக்கப்பட்டு, இறுதியாக எல்லோரும் இணையும்போது என் மகளை தவறவிட்டு விட்டேன். என் மகள் என்னிடத்தில் வந்து சேர்வாள் என்றெண்ணி நந்திக்கடலின் மிதந்து கிடக்கும் சிறு குழந்தைகள் மற்றும் ஏனைய உடல்களுக்கு நடுவில், சிறு மண் திட்டில் ஓர் இரவும் பகலும் காத்திருந்தும் பயனில்லாமல் போய்விட்டது. என் மகள் திரும்பி வர மாட்டாளா என்றெண்ணி ஏங்கி ஏங்கி தவித்து, எனக்கு தற்போது நெஞ்சு நோயும் ஏற்பட்டுள்ளது” என குறித்த தாய் ஆணைக்குழுவின் முன் கதறியழுதார்.

(www.eelamalar.com)