நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்

நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் சிவனேசன் அரசாங்கம் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்து நேற்றையதினம் மக்கள் விளக்கமளித்திருந்தனர்.

கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் இருபத்தேழாவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த முதலாம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் மக்கள் பிரதிநிதிகளை அழைத்த கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டம் தொடர்பில் விளக்கமளித்திருந்தனர். இந்தநிலையில் நாடாளுமன்ற மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.

காணிகளை விடுவிப்பதற்கு ஒருவார கால கோரிக்கையை மக்கள் பிரதிநிகளிடம் கேப்பாபுலவு கிராம மக்கள் முன்வைத்தள்ளதாகவும் உரிய தீர்வு கிடைக்காவிடின் போராட்ட வடிவத்தில் மாற்றம் ஏற்படும் என மக்கள் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

சொந்த நிலங்களிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் போராட்டத்தின் வீச்சு அதிகரிக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மத்தியரசு கொள்கை ரீதியாக ஒரு முடிவினை எடுக்கவேண்டும் எனவும் மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என வடமாகாண சபை மீன்பிடி அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு மக்களின் காணிகளிலுள்ள பலன்களை அனுபவிப்பதற்காகவே காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு வடமாகாண சபை ஆதரவு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் போராட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் கண்டும் காணாதது போன்றும் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன் தெரிவித்தார். இந்த நிலையில் போராட்ட களத்திற்க விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

நல்லிணக்கம் என பேசுகிறார்களே தவிர மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் மக்களுடன் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

(www.eelamalar.com)