டிசம்பர் 28, 1999 அன்று ஈழத்து தமிழ் பெண் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நாள்.

இவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்தது சிறிலங்கா கடற்படையினர் என இந்த பகுதி மக்கள் உறுதியாக கூறுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் சரவணபவானந்தக் குருக்கள் என்பவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளின் தாயுமான 29 வயது சாரதாம்பாளின் இறந்த உடல் சருகுகளுக்கும் இலைகளுக்கும் கீழ் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கிடந்ததை ஊர்மக்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிகழ்வு பலரையும் அதிர்ச்சி கொள்ள வைத்த பொழுதும் இன்றளவும் இந்த படுகொலைக்கோ இதோ போல் ஈழத்தில் தமிழ் பெண்களுக்கு நடந்த கொடிய பாலியல் படுகொலைகளுக்கோ நீதி வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (AHRC) அறிக்கையின் படி, உள்ளூர் இந்துக் கோயில் குருக்களின் மகளான 29 வயது சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்படுவோரால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் புங்குடுதீவு என்ற இடத்தில் அவரது வீட்டில் இருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப் பட்டு சிதைக்கப்பட்டார் என கூறப்படுகின்றது.

பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையின் படி, சாரதாம்பாளின் வீடு கடற்படைத் தளத்தில் இருந்து 500 மீ தூரத்தில் அமைந்திருந்தது. அவரது தந்தையும், சகோதரரும் கறுப்பு உடையில் வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் வீட்டினுள் வைத்து கட்டப்பட்டது.

சாரதாம்பாளின் இறந்த உடல் வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள தரிசு நிலமொன்றில் அடுத்த நாள் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ ஆய்வு செய்யாமல் படுகொலையை மூடி மறைத்து கடற்படையை காக்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு புங்குடுதீவிலும், யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை அடுத்து சாரதாம்பாளின் உடல் மருத்துவ ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

உடலைப் பரிசோதித்த அரசு மருத்துவ அதிகாரி, பெண்ணின் உள்ளாடை அவரது வாயினுள் அடைக்கப்பட்டதில் மூச்சுத் திணறி இறப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

இறப்புக்கு முன்னர் அவர் பலவந்தமாக பலராலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரது அறிக்கை தெரிவித்தது.

சாரதாம்பாளின் இறுதி நிகழ்வுக்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் சென்று உரை நிகழ்த்தினர். பல சிங்கள மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கண்டித்தார்கள்.

அன்று அரசுத்தலைவராக இருந்த சந்திரிக்கா குமாரதுங்க (இன்றைய சமாதான தேவதை வேடம் கொண்டவர்) கண்துடைப்புக்காக 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டார். ஆனால் அது வெறும் நாடகாமாகவே கலைந்து போனது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கவனிக்கும் ஐநா சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு இலங்கை அரசிடம் இருந்து பெருமளவு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

திசம்பர் 1999 பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சிறிதளவு முயற்சியே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

தமது வீட்டுக்கு வந்திருந்த கடற்படையினரின் ஆளடையாளத்தை வெளியிடக் கூடாதென சாரதாம்பாளின் தந்தையும் சகோதரரும் எச்சரிக்கப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை சுட்டி காட்டி தெரிவித்துள்ளது.

இலங்கைக் காவல்துறையின் புலன்விசாரணைத் திணைக்களத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,

“சகோதரர் தமது வீட்டுக்கு வந்திருந்த நால்வரின் ஆளடையாளத்தை நிரூபிக்கத் தவறி விட்டார்”.எனக் குற்றம் கூறினார்.

குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை அதிகாரிகள் வேறு இடங்களுக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தனது அறிக்கையில் தெரிவித்தது.

சாரதாம்பாளின் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கில் சாட்சியங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாதமையால், வழக்கைத் தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மே 2001 இல் விசாரணைக் குழுவுக்குத் தெரிவித்தது.

இதே போல் கிருஷாந்தி குமாரசுவாமி, இளையதம்பி தர்சினி, கோணேஸ்வரி முருகேசபிள்ளை என பல தமிழ் பெண்களின் கொடூரமான படுகொலைகள் இன்றளவும் விசாரிக்கப்பட்டோ நீதியை பெற்றோ உண்மைகளை உலகுக்கு எடுத்து சொல்லாமலே மண்ணுக்குள் கொடும் துயரத்தை புதைத்து ஊமையாய் இருக்கின்றது…

தமிழர்களுக்கு நடந்த இது போன்ற கொடும் அநீதிகள் விசாரிக்கப்படாமல் இருக்கையில் தமிழர் விடுதலைக்காக போராடியவர்கள் தண்டனை கொடுக்கப்பட்டு சிறைகளில் முடக்கப்படுவது என்ன நியாயம்?

தொடரும் அடக்குமுறைகள் நீதி மறுப்பின் வடிவமாக இனப்படுகொலையின் கூறுகளாக இன்னமும் இலங்கை தீவில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதே உண்மை!

-செந்தமிழினி