நாவற்குழியில் சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகன் மாவை சேனாதிராஜா!

நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தை நிரந்தர சிங்களக் குடியேற்றமாக மாற்றியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே பதில் சொல்லவேண்டுமென நாவற்குழி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

கடந்த அரசாங்கத்தினால் நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டனர்.

அவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு விகாரையொன்றுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

அத்துடன் நாவற்குழி என்ற பெயரினை சாந்திபுரம் என மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதற்குத் அப்பிரதேசத்து தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் இதற்கு முக்கிய காரணியாக அமைந்தவர் மாவை சேனாதிராஜாவே எனவும் தெரிவித்தனர்.

நாவற்குழியில் அத்துமீறிக் குடியிருக்கும் சிங்கள மக்களில் 50 பேருக்கு காணிகளும் வீடுகளும் வழங்கப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தி வந்ததாக யாழ்ப்பாண மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே நாவற்குழியில் நிரந்தர சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றதாகவும் அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.