நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் ….

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்… எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை.

அந்தக் குடும்பம் அத்தனை அழகானது, இனிமையானது, அற்புதமானது… போர்க்களம், நிர்வாகப்பணி, அரசியல்பணி, இராஜதந்திரப்பணி என ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளோடு அணுகப்பட வேண்டிய சிக்கல் நிறைந்த நாளாந்தத்தில் தமிழ்ச்செல்வண்ணை சுழன்றுகொண்டிருப்பார். அதனை விடவும், வெளியே அவர் அறியப்பட்டதற்கு அப்பாலும், எமது தேசியத் தலைவரின் பிரத்தியேகமான, வெளிச்சொல்ல முடியாத பாரிய பணிகள் நாளாந்தம் அவரது தோள்களிலிருக்கும்.

நள்ளிரவு தாண்டிய ஒரு நேரத்திலிருந்து அதிகாலை வரையான மிகச்சிறிய மணித்தியாலங்களே அவரது நித்திரைக்கான நேரமாக இருக்கும். இத்தனைக்கும் மத்தியில் ஒரு கருணைத் தாயாக, கண்டிப்பான தந்தையாக, சகோதரனாக, பொறுப்பாளனாக தன் அருகிருக்கும் போராளிகளை அரவணைக்க அவர் தவறுவதே இல்லை. தமிழ்ச்செல்வண்ணையின் அத்தனை இயல்புகளும் அவரின் அருகிருக்கும் போராளிகளை இயல்பாகப் பற்றிக்கொள்ளும். அவர்கள் தேசியத் தலைவருக்குப் படிப்படியாக அறிமுகமாகிப் பெருவிருட்சங்களாகிவிடுவர்.

நினைவுப்பகிர்வு:- அ.பார்த்தீபன்
விடுதலைப்புலிகள் (ஐப்பசி, கார்த்திகை 2007) இதழிலிருந்து

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”