நீதிபதி இளஞ்செழியனுக்கு கடிதம்எழுதி வைத்துவிட்டு தாயும் மூன்று குழந்தைகளும் தற்கொலை!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, அரியாலைப் பிரதேசத்தில் இளம் தாயும் மூன்று பிள்ளைகளும்  நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளனர்.

குறித்த இளம் தாயின் கணவர் சென்றவருடம் தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் மனவிரக்தியுற்றுக் காணப்பட்ட குறித்த தாய், (27.10.17) தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சினைக் கொடுத்துவிட்டு, தானும் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் இன்று காலை 10.00 மணிக்கு நடந்துள்ளது.

குறித்த குடும்பத்தினரின் உடலங்கள் யாழ். போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தாயாரினால் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

தனது கணவரின் சாவுக்குக் காரணமான கடன் கொடுத்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், தனது சாவுக்கு சிறிசங்கர் எனும் நபரும் அவரது மனைவியான சுகன்யா மற்றும் சிறிதரன் (சிறிசங்கரின் சகோதரர்) ஆகியோரே காரணம் என கூறியுள்ளார்.

தனது கணவர் ஒருகோடியே பதினேழு இலட்சம் ரூபா கடனை நம்பிக் கொடுத்து ஏமாந்தபின் இறந்துபோனதால், அப்பா எங்கே எங்கே என்று தினமும் பிள்ளைகள் கேட்பதாகவும் அதற்கு தன்னால் பதில் கூற முடியவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ”எனது கணவர் வீல் கதிரையில் (சில்லுக் கதிரை) உட்கார்ந்து எம்முடன் வாழ்ந்தால் போதும் , அந்தளவுக்கேனும் இறைவன் தந்தால் போதும் என்று வேண்டினேன், ஆனால் பலன் கிடைக்கவில்லை. பிள்ளைகளுக்காக வாழலாம் என்று நினைத்தேன், ஆனால் என் பிள்ளைகள் தினமும் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.