நீலக்கடலில் கடற்புலிகள் – அத்தியாயம் 01

ஆழக்கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகள் மோதிக் குதித்து முடிவில் ஓய்ந்து அடங்குகின்றன. தேசந்தனில் விடுதலைக்காக மோதிக் குதித்த அரசியல் அலைகள் முடிவில் மாய்ந்து மடிந்து ஓய்ந்து அடங்கின. தமிழீழத்தின் அன்றைய சுதந்திரதாக அரசியல்கூட இந்த ஆழக்கடல் அலைகள் போல் ஓய்ந்த நிலையில்; இருந்த காலம் அது.

இந்த வேளையில்தான் ஆழக்கடலில் தேடியெடுக்கும் ஆயிக்கணக்கான சிப்பிகளுக்குள் அகப்படும் ஓரிரு முத்துக்கள் போன்று 1970ம், 1980ம் ஆண்டுகட்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுதந்திர தாகத்துடன் புறப்பட்ட சில இளைஞர்கள் 1970ம் ஆண்டிற்கு முற்பட்ட போலி அரசியல் உணர்வுகளை உடைத்தெறிந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளத் துணிவுடன் இறந்கினார்கள்.

முழுமையான தமிழீழத்தின் சுதந்திரம் வேண்டிநின்ற இவர்கள் தம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை உடைத்தெறியப் புறப்பட்ட காலம் இது. நாளை தமிழீழத்தின் மறுமலர்ச்சிக்காக பல்வேறு துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்காக புதுமெருகு ஊட்டப்படுகின்றது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளின் பயனாக இந்த இளைஞர் கூட்டம் கடலிலும் தரையிலும் தம்மைச் சல்லடைபோட்டு வேட்டையாடத் திரிந்த சிறீலங்கா அரசின் அனைத்துக் காவற்படையின் கண்களிலும் மண்ணைத் தூவித் தமிழீழ நிலப்பரப்பை விட்டு வெளியேறி இந்திய மண்ணில் கால் பதிக்கின்றனர்.

இந் நிலையில் தான் தமிழீழத்தின் இன்றைய போராட்ட சக்தியாக விளங்கும் புலிகளின் அணி விரிவாக்கம் பெற்றுப் போராட்டத்தை முன்னெடுக்கிறது.

இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டைத் தமது போராட்டத் தளமாகவும், இலங்கையைத் தமது போராட்டக் களமாகவும் கொண்டு விடுதலைப் புலிகள் தங்கள் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். ‘முத்துக்குளிக்கும்’ மன்னார் தொடக்கம் ‘மீன்பாடும்’ மட்டுநகர் வரையான நிலப்பரப்பும் இவர்களின் போராட்ட செயற்பாட்டு மையங்களாக உருவாக்கம் பெறுகின்றன.

தமிழீழ மண்ணில் இடம்பெற்ற அடாவடித் தனங்களை முளையில் களைந்து எறிவதற்காக எத்தனையோ கடல் மார்க்கப் பயணங்கள் இக்கால கட்டத்தில் ஆரம்பமாகின்றன. 1975ம் ஆண்டின் யூலை 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொன்னாலைக் கிராமத்தில் துரோகி துரையப்பா மீது மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான தாக்குதல், 1976ம் ஆண்டு மார்ச் மாதம் புத்தூரில் மக்கள் வங்கியில் ஆயுத முனையில் பணம் அபகரிப்பு ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

இப்பயணங்கள் நவீன வசதிகளைக் கொண்ட கடற்கலங்களின் இன்மையால் மிகவும் ஆபத்தானவையாக விளங்கின. நெஞ்சுரமும், நேரிய நோக்கும் வஞ்சகற்கு அஞ்சாத மனத்துணிவும் கொஞ்சமும் குன்றாது இவர்களிடம் இருந்ததால்தான் அஞ்சாது ஆழக்கடல்மீது வஞ்சகர்கள் வலைவிரித்து நின்றபோதும் தங்கள் பயணங்களை மேற்கொண்டனர்.

தேசிய விடுதலைக்காக கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதைவழி நடந்து, 1976 மே மாதத்தின் 5ம் நாள் மாண்புமிகு தலைவர் திரு. வே.பிரபாகரன் தலைமையில் உருவாக்கம் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் 1981ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் நாட்டில் நிரந்தரமாகத் தமது தளங்களை அமைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக கடாரம் வென்ற சோழனின் கப்பலோடிய கடலில் கரிகாலனின் போராட்டப் பயணங்கள் வேகமாகத் தொடர்கின்றன.

இப்பயணம் மேற்கொள்ளப்பட்ட வேளைகளில் ஏற்பட்ட தடங்கல்களும் வேதனை நிறைந்த நிகழ்வுகளும் எம் தேசியத் தலைவரின் சிந்தனையைக் கிளறி விடுகின்றன. தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு முதுகெலும்பாக விளங்கப்போகின்ற கடலில் அன்று ஆதிக்கம் செலுத்திய மாமன்னன் இராஜராஜ சோழனின் புலிக்கொடி ஏற்றிய கடற்படைக்கலங்கள் வீர உலா வந்த காட்சி கண்களில் தெரிகின்றது.

இங்குதான் விடுதலைப் புலிகளின் பரிணாம வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்திற்கும், அன்றைய காலகட்டத்திற்கும் இடையிலான கேள்விக்குறி ஒன்று போடப்படுகின்றது. 1984ம் ஆண்டு கடற்புலிகளின் தோற்றம் எனப் புலிகளின் வரலாற்றில் வர்ணிக்கப்படுவதாயின், இதற்கு முந்திய காலகட்டத்தில் இக் கடற்பயணங்கள் எப்படி மேற்கொள்ளப்பட்டன? இதுவே அந்தக் கேள்விக்குறியாகும்.

திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழன் வாழ்ந்த வரலாற்றைக் கொண்ட மண் தமிழீழ மண். ரங்கூன், பர்மா போன்ற இடங்களில் இருந்துகூட பாய்மரக் கப்பல்கள் வழியாக இயற்கைச் சக்திகளை வழிகாட்டியாகவும், துணையாகவும் கொண்டு கடல்கடந்து வாணிபத்தை மேற்கொண்ட கடலோடிகளை தம்புதல்வர்களாகப் பெற்ற மண் தமிழீழமண். இந்துமா கடல் வழியாக அன்னபூரணி என்னும் பாய்மரக் கப்பலில் அந்திலாந்திக் ஊடாக அமெரிக்காவைச் சென்றடைந்த வீரக் கடலோடிகளை உவந்து அளித்த மண் எங்கள் மண்.

இந்தப் பரம்பரையில் வந்த கடலின் மைந்தர்கள் விஞ்ஞானம் விரிவடைந்து வளர்ச்சியடைந்த போராட்ட காலகட்டத்தில் சிறிய எந்திரங்களின் துணைகொண்டு கட்டுமரங்களிலும், சிறிய கண்ணாடி நூலிழைப் படகுகளிலும் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடல் கடந்த வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்திய அரசும் இலங்கை அரசும் இவர்களுடைய நடவடிக்கைகளைக் கடலிலும், தரையிலும் கட்டுப்படுத்தும் நோக்கங்களில் செயற்பட்டாலும்கூட இவர்கள் தமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்துகொண்டே சென்றனர்.

அன்று விடுதலைப்புலிகளின் கைகளில் தவழ்ந்த ஆயுதங்கள் மிகமிகக் குறைவானவையே. இந் நிலையிற்கூட தமிழீழ மண்ணில் மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளுக்காக ஆயுதங்களோ, வெடிபொருட்களோ இவற்றின் பயன்பாடுகள் என்ன என்பதை முற்றுமுழுதாக அறியாத சாதாரண படகோட்டிகள் மூலந்தான் அனுப்பிவைக்கப்பட்டு வந்தன. தான் கொண்டு செல்லும் தடைசெய்யப்பட்ட பொருட்களால், பிடிபடும் வேளைகளில் ஏற்படும் ஆபத்துக்களையும் அதேவேளையில் இயக்கப் பொருட்களோடு பிடிபடுகின்றவேளை அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நன்கு உணர்ந்து இருந்தாலும், துணிவோடு அவற்றைக் கடத்திக் கரைசேர்த்த மேற்படி கடலோடிகளின் வீரத்தினை என்றும் இந்தத் தமிழிழ மக்கள் நன்றியுணர்வோடு பாராட்டவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இன்று விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு ஆணி வேராகத் திகழ்ந்தவர்கள் இவர்கள். ஆபத்து நிறைந்த வேளைகளில் மேற்கொண்ட இந்தப் பயணங்களின்போது எத்தனையோ நடவடிக்கைகளில் நாம் எமது அரிய பொருட்களையும், அவற்றைச் சுமந்துசென்ற படகோட்டிகளையும் அவர்களின் கலங்களையும் கடல்மடியில் சங்கமிக்கச் செய்த சம்பவங்கள் ஏராளம்.

இந்த வகையில் எமக்குப் பக்கபலமாய் உழைத்த எத்தனையோ படகோட்டிகளின் இழப்பையும் அங்கவீனமுற்ற எத்தனையோ படகோட்டிகளையும் வாழவேண்டிய வயதில் பொட்டிழந்து, பூவிழந்து இன்று விதவைகளாக எம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களினது குடும்பத்தினரையும் நன்றி உணர்வோடு பார்க்கின்றோம்.

விடுதலைப் புலிகளை இந்திய அரசு அனுசரித்து வளர்த்த வேளையிலும் அவர்களுடைய கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட சில செயற்பாடுகளில் அந் நாட்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தம்மால் பெறப்பட்ட வெடிப்பொருட்கள், ஆயுதங்கள்; தளத்திற்குத்தேவையான மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கடத்தித் தமிழீழ மண்ணிற்குக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக்கூட பொறுமையுடன் காத்திருந்து பெறவேண்டியவர்களாக இருந்தார்கள்.

இதற்காகத் தமிழ்நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் அமைந்திருந்த நாகபட்டினம், மல்லிபட்டினம், வேதாரணியம், கோடியாக்கரை, முத்துப்பேட்டை இராமேஸ்வரம் தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் தமக்குத் தேவையான ஆதரவாளர்களைப் பெறுவதற்காகக் கரையோரங்களில் நாளாந்தம் காத்திருப்பார்கள். தமிழீழத்தில் கடத்தல் தொழிலை மேற்கொள்வோர்கள் தமது கேந்திர நிலையங்களாக இவற்றைப் பாவித்ததே இக்கரைகளை விடுதலைப் புலிகள் நாடியதன் காரணமாகும் இப்படியாக வரும் கடத்தல்காரரின் படகு ஒன்று முழுமையாக இனங்காணப்பட்டபின் தாம் அனுப்ப வேண்டிய பொருட்களை அவை மூலம் அனுப்பி தமிழீழத்தில் அவை செல்லும் கரைகளில் அவற்றைப் பக்குவமாய் பொறுப்பேற்கும் ஒழுங்குகளையும் செய்தனர்.

இந்நடவடிக்கையின்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் மேற்படிப்பொருட்கள் மிகச் சிறியளவில்தான் அப்படகுகளில் அனுப்பவேண்டியிருந்தது. ஏனெனில் மேற்படி கடத்தல் படகுகள் கடல்வழி நடுவே கடற்படையினரால் வழிமறிக்கப்படும்பொழுது அவற்றைக் காப்பாற்றி எடுக்கக்கூடிய நிலையில் அப்படகுகளில் சக்திகூடிய இயந்திரங்கள் இணைக்கப் படாமையும் வழிமறிக்கும் கப்பலை எதிர்த்துத் தாக்கித் தப்பியோடக்கூடிய பாதுகாப்பு இல்லாமையுமாகும்.

இந்த நிலையில் தமிழீழ மண்ணில் நடைபெறும் போராட்ட வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்குகின்றன. இவற்றை ஈடுசெய்யும் அளவிற்குப் போர்க் கருவிகளினதும் போராளிகளினதும் எண்ணிக்கை மிகக்குறைவாகவே காணப்பட்டது. மேற்படி காரணிகளை ஈடுசெய்வதாயின் கடல் நடவடிக்கைகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அமையவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு 1984ல் இயக்க உறுப்பினர்களை முழுமையாகக் கொண்ட கடற் போராளிகளின் அணியொன்றை தலைவர் உருவாக்கினார். இவ்வணியில் கடல் அனுபவம் நிறைந்த கடலோடிகள் இணைந்திருந்தனர். இதன் ஆரம்பக்கட்டத்தில் 23 அடி நீளமான மூன்று40 (hp) குதிரைவலுக்கொண்ட படகே பயன்படுத்தப்பட்டு வந்தது இதன்வேகம் சராசரி 20 பேருடன் 15-18 நொட்ஸ் வெறுமையாக 24 நொட்ஸ்.

நொட்ஸ் என்பது கடலில் வேகத்தை கணக்கிடும் அலகு n.m என்பது தூரத்தை அளவிடுவது (1 n.m = 1850 Meter) மேற்படி நடவடிக்கைகளில் கடற்புலிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தமிழீழத்தையே தன் குறிக்கோளாகக்கொண்ட தானைத் தலைவன் என்றோ ஒருநாள் இந்திய அரசு மேற்கொள்ளப்போகும் கபடத்தனமான நடவடிக்கைகளை அற்பசொற்ப இலாபத்திற்காகத் தமிழீழப் போராட்டத்தை முன்னெடுத்த ஏனைய குழுக்கள் சிந்திக்காது நின்ற வேளையில், எம் தலைவர் ஆழமாகச் சிந்திக்கின்றார். போர்த்திறனும், மதிநுட்பமும், தீர்க்கதரிசனமும் கொண்ட எம் தலைவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தமிழீழ நிலப் பரப்பில் மாத்திரமல்ல அதைச்சுற்றியுள்ள கடற்பரப்பிலும் புலிகளின் ஆதிக்கம் முழுமையாகக் கொண்டுவரப்படவேண்டுமென்ற தம் சிந்தனைக்கு வடிவமைப்பைக் கொடுத்து செயல்வடிவில்; இறங்குகின்றார்.

இன்று தேசியத்தலைவரின் போராற்றலை தரையிலும் கடலிலும் அளவிடமுடியாது நிற்கும் உலக நாடுகள் போன்று உலகின் நான்காவது வல்லரசாக விளங்கிய இந்தியாவும் புலிகளைப் பற்றிய தம் மதிப்பீட்டில் தவறைப் புரிகிறது. எதற்கும் தன்கையையே எதிர்பார்த்து நிற்கவேண்டும் என்ற இறுமாப்பில் இந்தியா தமிழீழ பிராந்தியங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தமிழீழ மக்கள் மனதில் மாத்திரமன்றி உலக நாடுகளில் எங்கோ எல்லாம் வாழ்ந்துவந்த மக்கள் மனங்களிற்கூட விடுதலை எனும் நம்பிக்கை ஒளி வீசத்தொடங்குகின்றது. இதன் காரணமாக அண்ணன் கரிகாலனது சோழன் என பெயர் பொறிக்கப்பட்ட முதலாவது கப்பலொன்று இந்துமாகடலில் உலா வரத்தொடங்குகின்றது. தமிழீழ விடுதலைக்கான செயற்பாட்டில் நவீனரக ஆயுங்களுடன் கன்னி உலா வந்தான் சோழன். ஆனந்தக் கண்ணீர் மல்க அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் தானைத் தலைவனும் அன்றைய புலிகளும்.

தமிழீழ மண்ணின் பௌதீக அமைப்பைக் காரணமாகக்கொண்டு இந்தியத்தின் எதிர்ப்பு, எந்தளவிற்குத் தமக்கு வருமென்பதை அவர்களின் அரவணைப்பில் இருந்த காலத்திலேயே தன் தளபதி கிட்டண்ணாவுக்கு சுட்டிக்காட்டியதை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டியுள்ளது

இந்தியாவின் குளிர்ப்பிரதேசத்தில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தமிழ் நாட்டில் வந்திறங்குகிறார்கள் தளபதிகளும் புதிய புலிகளும். தானைத் தலைவனுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில் எமது படையணிகளின் தற்போதைய பயிற்சி ஆசிரியரான ஒருவர் தானைத்தலைவனை நோக்கி கூறுகிறார் கிட்டண்ணா பயிற்சிமுடித்து வெளியேறும்போது அப்பயிற்சி ஆசிரியர் பிரிய மனமின்றி கண்ணீர் மல்கி விடை பெற்றார் எனக்கூற நமது தலைவர் இந்திய இராணுவம் நாளை யாழ்ப்பாணத்தில் வந்திறங்கும்போது கிட்டு தான் முன்னணியில்நின்று சுடுவார் என்று நிதானமாகக் கூறியது அவருடைய தீர்க்கதரிசனமான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதற்கொப்ப தமிழீழ மண்ணில் இந்திய இராணுவத்தினர் புரிந்த அட்டூழியங்களையும், அவர்களை எதிர்த்து இந்த மண்ணில் போராடிய விடுதலைப்புலிகள் அவர்களை வந்த வழியே திருப்பி அனுப்பிய சம்பவமும் விடுதலைப் புலிகளின் சொந்தக்கப்பல் வங்கக் கடல் வழியாகவந்த பொழுது இந்தியத்தின் சூழ்ச்சியால் கடல் நடுவில் செந்தணலாய் மாறி வீரகாவியம்படைத்த கேணல் கிட்டு உட்படபத்து வேங்கையர்களின் சம்பவமும் தேசியத் தலைவரின் முந்திய கூற்றுக்குச்சான்று பகருவதாக உள்ளன.

கடற்புலிகளின் ஒரு அணி

1. பயிற்சிக்காகப் புதிய போராளிகளை தமிழ்நாட்டிற்குக்கொண்டு செல்வதும் தேவைக்கேற்ப இக்கரைக்குகொண்டு வருவதும்.

2. தமிழீப்போராட்ட நடவடிக்கைகளின் போது காயமுற்ற போராளிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுசெல்லுதல்.

3. தேவையேற்படும்போது தற்காப்பை மேற்கொண்டு எதிரியிடமிருந்து தப்பி வருதல்.

மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தமிழீழத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய போரை நீண்டகாலப்பின்னோக்கோடு உற்று நோக்கிய எம் தலைவர் 1985ம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்தியாவில் சென்னையை அண்டிய ஒரு கடற்கரைப் பிரதேசத்தில் ஒருகடற்படை அணிக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளை வழங்கக்கூடிய ஒரு பயிற்சி முகாமை நிறுவினார். பயிற்சிகளை வழங்குவதற்காக சில நிபுணர்கள் அங்கு அமர்த்தப்படுகின்றனர். இப்பயிற்சிக்கு புலிகளின் அணியில் முழுமையாகப் பயிற்சிகளை பெற்றுக் கொண்ட 42 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நீந்துதல் (பல்வேறு முறைகள்) சுழியோடுதல், 55 குதிரைவலு இயந்திரங்களைக் கொண்ட றபர் போட்டுகளை ஒட்டுதல், நீரின் மேலும் கீழும் ஸ்கூட்டர் ஒடுதல் ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சாதாரணமாகத் தரைப்படைக்கு வழங்கப்படும் பயிற்சிகளைப்போல் அல்லாது இவை மிகவும் கடினமானவையாக இருந்ததென்பது, அப்பயிற்சியைப் பெற்ற ஒரு உறுப்பினரால் சொல்லப்பட்ட கருத்தாகும். கடல் நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்றல், காலத்தின் தேவைக்கேற்ப எதிரிகளின் கடற் கலங்களைத்தேடி அழித்தல், வலுக்கூடிய வேகமான இயந்திரங்களின் உதவியோடு கடல் கடந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை மேற்படி கடற்புலிகளின் அணியில் பிரதான நோக்கங்களாக அமைந்திருந்தன. “நாம் அணிந்த சீருடையைப் பார்த்துப் பெருமிதம் அடைந்தோம். அவ்வுடையில் நாம் பயிற்சிகளை மேற்கொண்டபொழுது அத்துறைக்கு வேண்டிய புத்தூக்கமும், உணர்வும் எம்மை அறியாமலே எமக்கு ஏற்பட்டது.” எனக் கூறினார் மேற்படி பயிற்சியைப் பெற்ற உறுப்பினர் ஒருவர்.

மேற்படி பயிற்சியின்பொழுது படகோட்டம், திசையறிகருவி, கடலின் பௌதிக இயல்புகள் ஆகியவை பற்றிய விளக்கவுரைகளும், இக்கடற்புலிகளின் அணியினருக்கு வழங்கப்பட்டிருந்தன. தேசியத் தலைவருடைய நேரடிக் கண்காணிப்பின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியின் கால எல்லை 6 மாதங்களாக இருந்தது. இப்பயிற்சிநெறி முடிந்தபின் பயிற்சிபெற்றவர்கள் இரு துறைகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகின்றனர். வண்டியோடுதல், கடலில் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் ஆகியவைகளே இத்துறைகளாகும்.

இப்பயிற்சிகள் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதேவேளை யில் 1983 இல் ஆரம்பிக்கப்பட்ட கடற்புலிகளின் முதலாவது படகோடும் அணி தொடர்ந்தும் போராட்டத்திற்குத் தேவையான கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றது. மேற்படி நடவடிக்கை ஒன்றின்பொழுது இக்கடற்புலிகள் அணி தமிழீழ அன்னையின் கடல்மடியில் ஒரு பாரிய இழப்பைச் சந்திக்க நேர்கின்றது.

தேச விடுதலைக்காக ஆயுதப் போர் தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டாவது கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்படும் வரை புலிகள் இயக்கம் கடலை ஒரு பேர்ககுவரத்துப் பாதையாகவும், விநியோக வழியாகவுமே பயன்படுத்தியது. ஆனையிறவுச்சமருக்குப் பின்னர் தான் கடற்பரப்பில் புலிகள் ஒரு போர் முனையைத் திறந்தார்கள்.

கடலிலே காவியங்கள் தொடரும்………………

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”