நீலக்கடலில் கடற்புலிகள் – அத்தியாயம் 02

கோடைகாலத்தில் ஒருநாள் என்றுமில்லாதவாறு கருமுகில் கூட்டங்கள் திரள்திரளாக சூரியனை மறைத்தவண்ணம் சென்று கொண்டிருந்தன. வடமராட்சியின் வடக்குக் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் மக்கள் சிறுசிறு குழுக்களாக ஆங்காங்கே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். “அண்டைக்குப்போன பெடியளின்ரை போட் ஒன்றைக் காணவில்லையாம். பெடியள் ஓடித் திரியிறாங்கள்” இதுதான் அவர்களின் வாயால் பரிமாற்றம் செய்யப்படும் செய்தியாக இருந்தது.

1984ம் ஆண்டு கடற்புலிகளின் அணி உருவாக்கம் பெற்றதன்பின், கடல் கடந்த போராட்டங்களில் மேற்படி அணியினரே கூடுதலாக ஈடுபடத் தொடங்குகின்றனர். எந்தவொரு தற்காப்பு ஆயுதங்களுமின்றித் தனியாருடைய வண்டிகளில் தம் செயற்பாடுகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகள், 40 குதிரைவலு இயந்திரங்கள் பூட்டிய படகுகளில் குறுந்;தூர தொடர்பைக் கொண்ட வோக்கி ரோக்கியுடன் சிறு ரக சுடுகலன்களைத் தற்பாதுகாப்பிற்காக எடுத்துச் செல்லும் நிலைக்கு காலடி வைத்ததே கடற்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் படிக்கற்களில் ஒன்றாகப் பிரதிபலிக்கின்றது. இதேபோன்ற நிலையில் தமிழீழப் போராட்டமும் அவற்றின் தாக்குதல் வடிவங்களில் வேக வளர்ச்சியுடன் முன்னேறிக் கொண்டு செல்கின்றது.

அப்படியாயின் படைகளின் நகர்வும் முன்னேற்றமும் ஆயுத, உணவு வளங்களில் தான் தங்கியுள்ளதெனும் கூற்றிற்கு இணைந்த வகையில் களங்களின் தேவைக்கேற்ப வளங்களை வழங்கக் காரணமாக விடுதலைப் புலிகளிற்கு இருந்த பிரதான மார்க்கம் என்ன? விடுதலைப் புலிகள் தளங்களைத் தாக்கும் வேக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, 10.04.1985 இல் நடைபெற்ற வெற்றிகரமான தாக்குதல் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அன்றுதான் கேணல் கிட்டண்ணாவின் தலைமையில் ஜி.பி.எம்.ஜி, ஆர்.பி.ஜி, ஜி 3 உட்பட நவீன ரைபிள்களும், சக்கைக் கான்களும் (ஜெலற்றீன்) தாராளமாக பாவிக்கப்பட்டு யாழ் பொலிஸ் நிலையம் வெற்றிகரமாக விடுதலைப் புலிகளினால் தகர்த்து அழிக்கப்படுகிறது. பாரிய இந்த நடவடிக்கையின்போது வீரர்களின் கைகளில் தவழ்ந்த நவீன ஆயுதங்கள் அதிகளவில் வேகமாக இந்த மண்ணிற்கு வரும் மார்க்கத்திற்கு வழிவகுத்தவர்கள் கடலோடிய கடற்புலிகள். இந்த வகையில் போராட்டத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் புதிய அத்தியாயங்களைப் பொறித்துக் கொண்டிருந்த கடற்புலிகளின் முதல் உறுப்பினரைக் கொண்ட அணி ஒன்று வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பாரிய இழப்பொன்றைச் சந்திக்கின்றது.

அன்றைய நாட்களில் சிறிலங்கா கடற்படையின் கடற்பரப்பைக் கண்காணிக்கும் கட்டளைக் கப்பல்களும், பீரங்கிக் கப்பல்களும் அதிவேக டோறாப் படகுகளும் விடுதலைப் புலிகளின் கடல்கடந்த செயற்பாடுகளையும் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் முக்கிய குறிக்கோளுடன் சுதந்திரமாகச் செயற்பட்டு வந்தன. எனவே, கடற்புலிகளும் தங்கள் செயற்பாட்டு மையங்களை ஒரு இடத்தில் நிலையாக வைக்காது காலத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற வகையில் செயற்படும் நோக்குடன் குடாநாட்டின் பல்வேறு கரையோரக் கிராமங்களிலும் தம் துறைகளை அமைத்துச் செயற்பட்டு வந்தனர். இந்த வகையில் அமைக்கப்பட்ட துறைகளில் ஒன்று வடமராட்சி கிழக்கில் உள்ள உடுத்துறை என்ற கிராமத்தில் அமைந்திருந்தது. இப்படியான துறைகளை அண்டிய பகுதிகளில் புதிய முகங்கள் யாராவது காணப்பட்டால் அதைப் பற்றிய விபரங்களை விடுதலைப் புலிகளுக்கு உடன் அறிவிக்கும் செயற்பாட்டைக்கூட அம்மக்கள் மிகக் கவனமாகச்செய்து தம் ஒத்துழைப்பைப் புலிகளுக்கு வழங்கி வந்தனர். தேவைக்கேற்ற வகையில் கிராமத்தின் மிக நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களை உதவிக்காகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் அந் நாட்களில் இருந்து வந்தன. மேற்படி ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சித்திரை வருடப்பிறப்பான அன்றைய நாளில் தம் சுற்றத்தோடு சில மணித்துளிகளைச் சந்தோசமாக செலவிடுகின்றனர் கடற்புலிகளின் அணியினர். இவர்களில் சிலர் அடங்கிய குழு ஒன்று அன்று, வண்டியைத் தமிழ் நாட்டு மண்ணிற்குக் கொண்டு செல்லும் பாரிய வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்தது.

மேற்படி தெரிவு செய்யப்பட்ட குழுவுடன் அன்று அப்படகில் செல்லவேண்டிய மற்றவரும் உடுத்துறையில் அமைந்திருந்த துறைக்கு பருத்தித்துறையிலிருந்து பயணத்தை மேற்கொள்கின்றார்.

1983ம் ஆண்டு காலப்பகுதியைப் போலல்லாது இன்ற பயணத்தை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் படகு விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் புதுப்பொலிவுடன் கரையில் தயார்ப்படுத்தப்படுகின்றது. 40 குதிரை வலுக்கொண்ட மூன்று வெளியிணைப்பு இயந்திரங்கள் ஒரே நேரில், கடையார்ப்பகுதியில் 23 அடி நீளமான நீலநிற வண்டியில் பொருத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் 100 லீற்றர் கொண்ட 06 பைபர் கான்களில் பெற்றோல் நிரப்பப்பட்டு கடையார் பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டு ஒன்றோடொன்று பிணைக்கப்படுகின்றது. நீர் புகாதவாறு உறையிடப்பட்டு 5 மைல் சுற்றாடலில் தொடர்பை மேற்கொள்ளக்கூடிய வோக்கி ரோக்கி வண்டிப் பொறுப்பாளரின் கைகளில் காணப்படுகின்றது.

இரண்டு ஜி 3 துப்பாக்கிகளும் கடல் நீர் புகாத வண்ணம் உறையிடப்பட்டு வண்டிப் பாதுகாப்பு வீரர்களின் கைகளில் கம்பீரமாகக் காணப்படுகின்றன. கதிரவனின் மறைவைக் காத்து வெண்ணிற மண்பரப்பில் தம்மை வழியனுப்ப வந்த தோழர்களுடன் அமர்ந்து உற்சாகத்துடன் உரையாடிக்கொண்டிருக்கின்றனர் கடற்புலிகளின் வீரமறவர்கள். அதேவேளையில் கடற்பரப்பின் மேல் எதிரிகளின் நடமாட்டத்தை அவதானிப்பதில் கண்ணும் கருத்துமாக நிற்கின்றனர். துறையில் உயர்ந்து ஓங்கி வளர்ந்த தென்னை மரம் ஒன்று இவர்களின் அவதானிப்பு நிலையமாக (Observation point) தற்காலிகமாகச் செயற்படுகின்றது. தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொறுப்புமிக்க பொருட்களையும் அதே மாதத்தில் 10ம் நாள் யாழ் பொலிஸ் நிலையத் தகர்ப்பின்போது விழுப்புண் அடைந்த வீரமறவனையும் புலிகளின் அணியில் புதிதாக இணைவதற்கு பயிற்சிக்குச் செல்லும் வீரர்களையும் கொண்டு சென்று, தமிழ்நாட்டின் கரையில் பாதுகாப்பாகச் சேர்க்கும் பாரியபணி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. மாலை 6.30 மணி. என்றும்போல் அன்றும் வழியனுப்பும் சம்பிரதாயம், வண்டி புறப்படும் சம்பிரதாயம் ஆகியவை கரையிலும் கடலிலும் நடைபெறுகின்றன.

ஒவ்வொருவரும் தங்கள் மனங்களில் வெற்றிகரமாக இப்பயணம் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர். இப்படிப் பிரார்த்திப்பது விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் உண்டாகும் ஓர் உணர்வல்ல. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்ய கடற்படையணி ஒன்று தன் நீண்ட பயணத்தை மேற்கொண்ட வேளையில் ஜார் மன்னர் இரண்டாம் நீக்கிலஸ்கூட தன் நாட்குறிப்பில் “ஆண்டவரே இப்பிரயாணத்தை ஆசீர்வதியுங்கள். இவர்கள் சென்றடைய வேண்டிய இடத்தைப் போய்ச்சேர அனுமதிக்கவும். ரஷ்யாவின் பாதுகாப்பிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் இவர்களின் நடவடிக்கைக் குழுக்கு வெற்றி கிட்டட்டும்” என்றும் எழுதியிருந்ததை வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். (ஆதாரம்- சூஷிமா கடல் யுத்தம் – The Battle Of Tsushima)

ஒன்றன்பின் ஒன்றாக இயந்திரங்களின் உறுமல்கள்… தொடர்ந்து நீலக்கடல் மேல் வெண்ணிற நுரைகள்…. கடலைக் கிழித்து நீரைத் தெறித்து வேகமாக ஓடி மறையும் பறவை இன மீனைப்போல அந்தக் கடல் வேங்கை மைந்தர்களின் படகு ஓடி மறைகின்றது. வழியனுப்பும்போது ஏற்பட்ட ஆயாசத்தைப் போக்க அந்த மணற்பரப்பில் அமர்ந்து ஆறுகின்ற நேரத்தில்கூட வோக்கியில் தொடர்பு மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றனர் கரையில் நின்றோர். 05 மைல் கடந்ததும் தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. ஆனால் கடலின் நடுவே வெடி ஓசைகளின் மத்தியில் பாரிய வெளிச்சம் ஒன்று …. எல்லாம் முடிந்தன.

இன்றுபோல் அன்று கடற்புலிகளின் கைகளில் போதிய கலங்களும், இயந்திரங்களும், ஆளணிகளும் இருந்திருக்குமானால், சம்பவம் நடந்த இடத்திற்கு நொடிப் பொழுதில் விரைந்து சென்று நடந்ததைத் தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் …. மேற்படி சோகம் நிறைந்த சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள் தீபன் என்ற போராளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஊர் திரும்புகிறான். இவன் 14.04.1985 அன்று சிறிலங்காப் படையினரால் அழித்தொழிக்கப்பட்ட அதேவண்டியில் சென்ற ஒருவன். இவன்மூலம் நடந்த சம்பவம் பற்றிய உண்மைகள் தெரியப்படுத்தப்பட்டன. வண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்த வேளையில் கானாவின் (சுக்கான்) பொறுப்பு சுதாவிடம் இருந்ததாகவும் அதேவேளை தவேந்திரன் துப்பாக்கியை ஏந்தியவண்ணம் எதிரியின் கப்பல்களை நோட்டமிடும் பணியை மேற்கொண்டு இருந்ததாகவும் கூறினான்.

ஆனால் எதிர்பாராத வகையில் சிறீலங்காக் கடற்படையின் அதிவேக டோறாப் படகொன்று வண்டியின் பின் பகுதியில் 20 mm கனொன் பீரங்கியால் குண்டுமாரி பொழிந்தபோது எஞ்சின் சேதமடைய, வெடிபட்டு காயமுற்ற சுதா தூக்கிவீசப்பட. கணேஸ் மாமா கானாவின் பொறுப்பை ஏற்று வண்டியை ஒழுங்கிற்குக் கொண்டுவந்து ஓடத் தொடங்கியதாகவும் ஆனாலும் தொடர்ந்து வந்த குண்டுகள் வண்டியையும் கணேஸ் மாமாவையும் தாக்க, கானா கட்டுப்பாடில்லாத நிலையில் படகு சுற்றத் தன்னைக் கடற்படையினர் தண்ணீரிலிருந்து தூக்கி டோறாவில் ஏற்றியதாகவும் மற்றையோர் அதிலேயே மாண்டு இறந்து போனதாகவும் கூறினார்.

அந்த நிகழ்வில் கடற்புலிகளின் படையணியைச் சேர்ந்த லெப். தவேந்திரன், வீரவேங்கை சுதா, வீரவேங்கை கமல், வீரவேங்கை கணேஸ் மாமா உட்பட 16 மறவர்கள் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டனர்.

கடற்புலிகளின் வரலாற்று வளர்ச்சியின் ஆரம்ப காலத்திலேயே தமிழீழ மண்ணின் விடிவிற்காக எத்தனையோ சேவைகளையும், தியாகங்களையும் மேற்கொண்டு கடற்புலி வீரனுக்குரிய இலட்சியத்துடன் கடலிலே முதன்முதலாக காவியமான இம் மறவர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகின்ற அதேவேளையில், தமக்கு ஏற்பட்ட இழப்பினைப் படிப்பினையாகக் கொண்டு கடற்புலிகள் தொடர்ந்தும் தம் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

கடற்புலிகளின் அணியை சகல துறைகளிலும் தொழில் நுட்ப ரீதியாகவும் தற்காப்பை மேற்கொள்வதற்காகவும் பலப்படுத்த வழி வகைகளை மேற்கொண்டார் எம் தேசியத் தலைவர். இதற்காக முதல் படகு இழப்பிற்குப் பின், 25 அடி குதிரைவலு மேக்கூறி இயந்திரங்களை (Mercury engines) வெளியிணைப்பாகக் கொண்ட மணித்தியாலத்திற்கு 35 கடல்மைல் வேகத்தில் ஓடக்கூடிய நவீன படகொன்றைக் கொள்வனவு செய்தார். இப்படகில் பொருத்தப்பட்ட மேக்கூறி இயந்திரங்களே இன்றும் உலகிலே முன்னணியில் உள்ள இயந்திரங்களாகும். இது அமெரிக்கத் தயாரிப்பாகும்.

கடலிலே காவியங்கள் தொடரும்………………

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”