பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 63 ஆண்டுகள் பூர்த்தி!

வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து செல்வதைக் காண்பர்.

ஒருபுறம் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுத முனையி லும் வெடித்த போராட்டக் களங்களாகவும், மறுபுறம் அமைதி முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற சமாதான அரங் குகளாகவும் இரு முனைகளில் அந்த வரலாற்றுத்தடம் நகர்ந்து சென்றிருக்கின்றது.

அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளோடு தமிழர் நடத்திய அமைதிப் பேச்சுகள், சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் நம்ப வைத்து ஏமாற்றிய நம்பிக்கைத்துரோக நாடகங்களின் அத்தியாயங்களாகக் கழிந்திருக்கின்றன.

அத்தகைய பெரும் வரலாற்றுத் துரோகத்தின் முக்கிய கட்டம் அரங்கேறியதன் 63 வது ஆண்டை இன்று நாம் பூர்த்தி செய்கின் றோம்.

ஆம். பண்டா செல்வா ஒப்பந்தம் என்ற நம்பிக்கையைத் தமிழருக்கு சிங்களம் வழங்கி இன்று சரியாக 63 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அன்றிலிருந்து சரியாக எட்டரை மாதத்தில் அந்த ஒப்பந்தம் சிங்களத் தலைமையினால் கையொப்பமிட்டு உறுதியளித்த அப்போதைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண் டாரநாயக்காவினாலேயே கிழித்து வீசப்பட்டது. ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்ட சரித்திரத்தில் மீண்டும் ஒரு தடவை பேரினவாதிகளினால் அவர்கள் ஏமாளிகளாக்கப்பட்டனர். பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகி சரியாக அரைநூற் றாண்டு பூர்த்தியாகும் இச்சமயத்தில் அந்த வரலாற்றுப் பின்னணியை ஒரு தடவை மீட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

இந்த அரசியல் குளறுபடிகளுக்கு எல்லாம் மூலகாரணரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தமது கொள்கை நிலைப்பாட்டில் அவ்வப்போது குத்துக்கரணம் அடிக்கும் சராசரி மூன்றாந் தர அரசியல்வாதி போன்றே நடந்துகொண்டவர். இலங்கைத்தீவு இத்துணை மோசமான கட்டத்தில் தவிப்பதற்கு மூலகர்த்தா அவரே என்றால் அது மிகையாகாது.

1925, 26 களில் இளம் அரசியல்வாதியாக பொதுவாழ்க்கைக்குள் நுழைந்த சமயம் இலங்கையில் சமரசம் பேணப்படுவதற்கு சமஷ்டியே உகந்த உயர்ந்த வழிமுறை எனத் துணிந்தும், வலுவாகவும் குரல் எழுப்பிய பண்டா, முப்பது ஆண்டுகள் கழித்துத் தாம் ஆட்சித் தலைவராக வந்தபோது பௌத்த சிங்களப் பேரி னவாத மாயையின் பிடிக்குள் முற்றாகச் சிக்குண்டு, அதற்கு சர ணாகதி அடைந்து, தாம் வலியுறுத்திய சமஷ்டிக் கோட்பாட்டைத் தாமே நிராகரித்தார். ஆட்சியைப் பிடிப்பதற்கு வசதியாக இனவாதத்தை அப்போது அவர் கையிலெடுத்தார்.

நாடு முழுவதிலும் சிங்களம் மட்டுமே அரச மொழி என்ற சட்டத்தை 24 மணி நேரத் தில் கொண்டுவருவேன் என்ற அவரது பேரினவாதக் கூச்சல் தென்னிலங்கையில் நன்கு எடுபட்டது. 1956 தேர்தலில் அவரது தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அதனால் தெற்கில் வெற்றிவாகை சூடியது. அத்தேர்தலில் தென்னிலங்கை ஒருபுறமாகவும் வடக்கு கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழர் தாயகம் மறுபுறமாகவும் இனமுரண்பாட்டு அடிப்படையில் துருவமயப்பட, தமிழர் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலுக்குக் குரல் எழுப்பிய தமிழரசுக்கட்சி பெரு வெற்றியீட்டியது.

ஆட்சிக்கு வந்த பண்டா அரசு சிங்கள மட்டும் சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அதற்குப் பதிலடியாகத் தமிழரசுக்கட்சி தமிழ் இனம் தன்னாட்சியுடன் இயங்கக் கூடியதான சமஷ்டி ஆட்சி வடிவத்தைத் தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்தக் கோரி வெகுசனப் போராட்டங்களைப் பரவலாக நடத்துவதற்குப் பொங்கி எழுந்தது.

தமிழ் மக்களின் தன்னாட்சி சமஷ்டி வடிவக் கோரிக்கைக்கு 1956 பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் தெளிவான ஆணை கிடைத்ததால் வீறுகொண்ட தமிழரசுக்கட்சி அதற்காகத் தனது சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் சட்டமறுப்பு இயக்கங்களையும் தீவிரப்படுத்தத் தீர்மானித்தது.

இவ்வாறு தமிழினம் அரசியல் தன்னாட்சிக்கான உரிமை யைக் கோரி தமிழ்த் தேசிய உணர்வோடு எழுச்சி பெற்றமை பண் டாரநாயக்காவின் சிங்கள ஆட்சிப்பீடத்தை அதிரவைத்தது. மடை திறந்த வெள்ளமாக பீறிட்டுப் பாய்ந்து சீறி வரும் தமிழரின் எழுச்சிமிகு வெகுசனப் போராட்டத்தை அரண்கட்டி, மறிக்க எண்ணிய பண்டாரநாயக்கா அதற்காகத் தந்திரம் செய்தார். தமிழர் ஏமாற்று நாடகம் அரங்கேறியது.

தமிழர் தந்தை செல்வநாயகத்துடன் பிரதமர் பண்டாரநாயக்கா நேரடியாகப் பேசினார். சமரச உடன்பாட்டுக்கான இறுதிப் பேச்சுகள் 1957 ஜூலை 25 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின. அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு அதாவது இற்றைக்கு சரியாக 63 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 26 ஆம் திகதி இணக்கம் எட்டப்பட்டது.

முழு சமஷ்டி வடிவம் இல்லாவிட்டாலும் பிரதேச மன்றங்கள் ஊடாகத் தமிழருக்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரங்களை வழங்கவும், தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும் இணங்கித் தந்தை செல்வாவுடன் ஒப்பமிட்டார் பண்டா. ஆனால் அதன்பின் நடந்தது என்ன? தமிழருக்கு சற்றேனும் அதிகாரம் பகிரப்பட வாய்ப்பு ஏற்பட்டதைக் கண்டு சிங்களம் பொங்கிக் கொதித்து எழுந்தது. இனவாத சக்திகள் பேரெதிர்ப்புக்காக ஒன்று திரண்டன. ஜே. ஆர். ஜெய வர்த்தனா தலைமையில் மேற்படி ஒப்பந்தத்துக்கு எதிராக “கீர்த்தி மிக்க’ கண்டியை நோக்கிய கால்நடை ஊர்வலம் நடத்தப்பட் டது. அதனால் தூண்டப்பட்டு, எழுச்சி பெற்ற சிங்களப் பேரினவாதம் 1958, ஏப்ரல் 9 ஆம் திகதி பிரதமர் பண்டார நாயக்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டது. சுமார் இருநூறு பிக்குகள் உட்பட ஐநூறு இனவெறி ஆதரவாளர்களைக் கொண்ட அந்தப் பேரணி பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பிரதியை சவப் பெட்டி ஒன்றில் வைத்து இறுதி ஊர்வலமாக பண்டாவின் இல் லம்வரை கொண்டு சென்றது. அங்கு வைத்து சவப்பெட்டித் தக னத்தை உணர்ச்சி ஆரவாரத்தோடு அது நிறைவேற்றியது.

அந்தப் பேரினவாதக் காட்டுக்கூச்சலுக்கு அடிமையாகி, அடிபணிந்த பிரதமர் பண்டாரநாயக்கா, அந்தக் கூட்டத்தின் முன்னால் வந்து நின்று, பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஒரு பிரதியைக் கிழித்தெறிந்து ஒப்பந்தம் செத்துவிட்டது எனப் பிரகடனம் செய்தார்.

சிங்களத் தலைமை அன்று புரிந்த இந்த மாபெரும் நம்பிக்கைத் துரோகமே இத்தீவில் இன ஒருமைப்பாட்டுக்கும் தேசிய நல்லிணக்கத்துக்கும் நிரந்தரமாகவே சாவுமணி அடித்தது. தமிழர் தேசம், சிங்களவர் தேசம் ஆகியவற்றுக்கு இடையே நிரந்தரப் பகை உண்டாக அதுவே காரணமாயிற்று.

பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட கையோடு, அதனால் பீறிட்டு எழுந்த பேரினவாத உணர்வு பெரும் வன்முறைக் கலவரமாகத் தமிழர் மீது பொறிந்தது.

அதன் தொடர் அங்கங்களே இப்போதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

-செந்தூரன்-