பிரபாகரனின் எண்ணத்தைப் புதிய அரசியலமைப்பினூடாக நிறைவேற்ற முயற்சி – மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பிரபாகரனின் எண்ணத்தைப் புதிய அரசியலமைப்பினூடாக நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தை அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எவ்வித மானியமும் வழங்கப்படவில்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தும் மூக்குக் கண்ணாடிக்குக்கூட வரியை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பியரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்புகளையும் மீறி பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமையின் விளைவே இது.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மக்கள் போராடிப் பெற்றதாகும். இந்தத் தேர்தலில் அரசாங்கத்துக்கு தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சமஷ;டி அரசியலமைப்பொன்றைக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.