பிரிட்டன் நாடாளுமன்றக் குழு சுமந்திரனை கொழும்பில் சந்தித்தது

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை 04.01.17 மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள், நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள், நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்திப்பதற்கு முன்னதாக இந்தக் குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.