பிரித்தானியாவில் துப்பாக்கி சூடு: 2பேர் பலி, 12பேர் படுகாயம்!

பிரித்தானியாவில் நாடாளுமன்றம் அருகே மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் உள்ள பாலத்தில் (22.03.17) மர்ம நபர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 12-க்கும் மேற்பட்டோ காயமடைந்தனர். 2 பேர் இறந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய நபரை காவல் துறை சுட்டுக் கொன்றதாகவும் மந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதற்கு முன், அங்குள்ள காவல் துறைகளுடன் ஒரு நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு கருதி நாடாளுமன்ற பணிகள் நிறுத்தப்பட்டு, நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டது. அங்குள்ள அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

பிரதமர் தெரசா மே பாதுகாப்புடன் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான காவல் துறை நாடாளுமன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.