பிரித்தானியாவில் நடைபெற்ற விளையாட்டு விழா 2019
விளையாட்டால் அனைவரும் ஒன்றினைவோம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக, 5வது தடவையாக பிரித்தானியாவிலே ROUNDSHAW PLAYING FIELD, HANNIBAL WAY,  CROYDON, CR0 4RW எனும் இடத்தில் மிக பிரமாண்டமாக 04.08.2019 அன்று காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் சுமந்துவரப்பட அதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதை அணிவகுப்புடன் பறை இசை முழக்கத்துடனும் விளையாட்டு விழா ஆரம்பமாகியது.

அதனைத்தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் திரு சொக்கலிங்கம் யோகலிங்கம், ஆர்ச்வே முருகன் கோவில் திரு வாமதேவக்குருக்கள் வாமராஜக்குருக்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான திரு கார்த்தீபன் யோகமனோகரன் மற்றும் திரு குஜியந்தன் சிவபாலன் ஆகியோர் மங்கள விளக்கை ஏற்றிவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பிரித்தானியக் கொடியினை முன்னாள் மேஜரும், கவுன்சிலருமான தயா தயாளன் அவர்கள் ஏற்றி வைக்க, காவலர்களின் கொடி மரியாதையுடன் தமிழீழத் தேசியக்கொடியினை திரு கணபதிப்பிள்ளை கார்த்திகரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயகப்போரில் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும், அரச படைகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளான பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை திரு திரு மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி வைக்க திருவுருவ படத்திற்கான மலர்மாலையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் திரு தேவராஜா நீதிராஜா அவர்கள் அணிவித்தார். இதனைத்தொடர்ந்து அனைவரும் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் திரு வேதநாயகம் சஞ்சீவதனுசன் தலைமையுரையினை வழங்கியதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினர் திரு வீரேந்திர சர்மா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகளின் அமைச்சர் திரு மகிந்தன் சிவசுப்பிரமணியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் திரு கலையழகன் கார்த்திகேசு அவர்களும் சிறப்புரை வழங்கி இருந்தனர்.

இவ் விளையாட்டு விழாவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் திரு கணேசலிங்கம் குகறூபன் அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார். பல்வேறு வயதுப்பிரிவுகளில் நடைபெற்ற உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கூடைப்பந்து, வலைப்பந்து, கிளித்தட்டு, சிறுவர் விளையாட்டுகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றில் விளையாட்டு வீரர்கள் உச்சாகத்துடன் பங்குபற்றி சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக்கோப்பைகள், பணப்பரிசில்களையும் பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டம், கிளித்தட்டு மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் அணி சிறப்பாக பங்குபற்றியிருந்ததுடன் 2ஆவது இடத்தையும் தட்டிச்சென்றனர்.

காலை தொடக்கம் இரவு வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் TGTETV நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்துடன் அதிட்டலாபச்சீட்டுகளில் அதிட்டம் பார்க்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

வெற்றியாளர்களின் விபரங்கள்
1) முதற் பரிசு – 3 பவுண் தங்கம்
இலக்கம் 06004

2) இரண்டாவது பரிசு – 42″ TV
இலக்கம் 02308

3) மூன்றாவது பரிசு – மடிக்கணனி
இலக்கம் 01940

5 ஆறுதல் பரிசுகளை பெற்றுக் கொண்ட வெற்றியாளர்கள்
1) வெற்றியாளர் இலக்கம் – 04428
2) வெற்றியாளர் இலக்கம் – 04134
3) வெற்றியாளர் இலக்கம் – 05579
4) வெற்றியாளர் இலக்கம் – 05393
5) வெற்றியாளர் இலக்கம் – 05881

நிகழ்வுகள் யாவும் இரவு 7மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு கொடி கையேந்தலுடன் இனிதே நிறைவுற்றது.

“விளையாட்டால் ஒன்றிணைவோம்” என்ற மகுட வாசகத்திற்கிணங்க புலம்பெயர் தேசங்களில் இவ்வாறான விளையாட்டு விழாக்களின் மூலம் சிதறிக்கிடக்கின்ற மக்களை ஒன்றிணைத்து, தேசியப் பிரச்சனைக்கான தீர்வை அரசியல் மூலம் வென்றெடுக்கலாம் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

வெளியீடு :
நாதம் ஊடகசேவை,
ஊடகம் மற்றும் தகவலும் மக்கள் தொடர்பாடல் அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்