பிரித்தானிய நாடாளுமன்றில் தமிழர்களை அச்சுறுத்திய சிங்கள பேரினவாதிகள்.!

சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது மேற்கொண்ட இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலையும் அதனை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் போர்க்குற்றங்கள் சர்வதேச
தரப்பால் விசாரணைக்கு உட்படுத்தினால் தான் உண்மையான நீதி பாதிக்கபட்ட தரப்புக்கு கிடைக்கும் என பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றின் பிரதான கட்டிடத் தொகுதியில் கொமிற்றி ரூம் 10 என்ற மண்டபத்தில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர் தரப்பால் 15.05.19 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இதனை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இலங்கையில் தற்போதும் சித்திரவதை தொடர்வதாகவும், பிரித்தானியாவுக்கு தமிழ் இளைஞர்கள்
தற்போதும் அகதி தஞ்சம் கோருவதாகவும் அதனை தாம் கரிசனையில் எடுத்துள்ளதாகவும் இந்த நிகழ்வில்
கலந்து கொண்டிருந்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நினைவேந்தல் நிகழ்வில் தொழிற்கட்சியின் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின், நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனெல், நிழல்
வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி, நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர் உட்பட பல தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆகியோர்
கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் சிறிலங்காவை பிரதிநித்துவ படுத்துகின்ற ஒருசிலர் கலந்து கொண்டார்கள் .அங்கு தொழிற் கட்சியிடம் இலங்கை அரசுக்கும் அதன் படைகளுக்கும் பிரித்தானிய அரசு இனி வரும் காலங்களில்
உதவிகளை வழங்க கூடாது என கோரிக்கை விடுத்ததை தனது தொலைபேசியல் காணொளி எடுத்து அச்சுறுத்தி கொண்டிருந்தனர்.