புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம்

அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயனடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை அமைப்பது குறித்து முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த அரசியல் சாசனம் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மலையகத்தில் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் மலையக மக்களின் தேவைகள், விருப்பங்கள், அபிலாசைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.இதன் மூலமே மலையக மக்கள் வாழ்வில் ஆரோக்கியமானதோர் சூழலை அனுபவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழல் ஏற்படவேண்டும். நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும், சுவீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் உருவாக்கப்படும் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்த அரசியல் சாசனம் உருவாவதற்கு மலையகத்தை சார்ந்த சிறுபான்மை அமைப்புக்களும் வடக்கு கிழக்கு அமைப்புக்களும் பூரண ஆதரவை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(www.eelamalar.com)