புத்தாண்டிலாவது என்னைப் பழிவாங்குவதை நிறுத்துங்கள் – மகிந்த!

புதிய ஆண்டிலாவது மைத்திரி – ரணில் அரசு என்னைப் பழிவாங்குவதை நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். என்னைப் பழிவாங்குவதை நிறுத்திவிட்டு அரிசித் தட்டுப்பாட்டுக்கு சிறந்த தீர்வினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் உள்ள சிறீவர்த்தனாராமய விகாரையில் நேற்று நடைபெற்ற சமய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் ஒரு தூண் இன்று விலகிச் சென்றுள்ளது. வருட ஆரம்பத்திலேயே ஒரு தூண் விலகிச் சென்றுள்ளது. காலப்போக்கில் ஒவ்வொன்றாக விலகிச் செல்லும். புதுவருடத்தில் ஒன்றைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த வருடத்திலாவது என்னைப் பழிவாங்குவதை நிறுத்தவேண்டும். நான் நாட்டை அரிசியினால் தன்னிறைவடையச்செய்தேன். இன்று வெளிநாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் அரிசி வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

புதிய வருடத்தில் கிருமிநாசினி மற்றும் மருந்துகள் கலப்படமற்ற அரிசியை 250 ரூபாவிற்கு வாங்கி பாற்சோறு சமைத்து புதுவருடத்தைக் கொண்டாடுமாறு ஜனாதிபதி செயலகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. சிறந்த திட்டம் தான். மருந்துகள், உரங்களை வழங்கியிருந்தால் கலப்படமற்ற அரிசியைப் பெற்றிருக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

(www.eelamalar.com)