புனர்வாழ்வு பெற்றுத்தருவதாக சுமந்திரனால் ஏமாற்றப்பட்ட அரசியல் கைதிக்கு 5 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதி ஒருவரிற்கு இன்று நீதிமன்றம் ஐந்து வருடம் சிறைத்தண்டனையளித்து தீர்ப்பளித்தது.

சில மாதங்களின் முன்னர் அநுராதபுரத்தில் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமயத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேச்சு நடத்தியபோது, புனர்வாழ்விற்குட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த இராசதுரை ஜெகன் (யாழ்ப்பாணம்) என்ற அரசியல்கைதிக்கே 10.01.19 தண்டனை அறிவிக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் அன்டனோவ் ரக விமானத்தை ஏவுகணையால் சுட்டு விழுத்தினார், அதில் பயணம் செய்த 37 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தார் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அரசியல் தீர்மானத்தை அவர் எதிர்நோக்கியிருந்தார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நடத்திய பேச்சில், உடனடியாக புனர்வாழ்விற்குட்படுத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குறிப்பிடப்பட்ட இருவரில் இராசதுரை ஜெகனும் ஒருவர். கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுமந்திரனும் புணர்வாழ்வுடன் உங்களுக்கு விடுதயை பெற்றுத்தரலாம் என உறுதி மொழியை இவருக்கு வழங்கியிருந்தார்.

எனினும், அதன்பின் தனது விடுதலை தொடர்பான விவகாரத்தில் எந்த அரசியல் தலைவர்களும் அக்கறை செலுத்தவில்லையென அவர் குற்றம்சாட்டியுள்ளார்.