புரட்சிக்காரனின் உள்ளம் மென்மையானது.

“தம் உயிர் ஈந்து இம் மண்ணிலே விடுதலைப் உரம்பெறச் செய்துவிட்ட தியாகிகளை நாம் என்றும் மறக்க முடியாது. மறந்தால் நாம் மனிதம் அற்றவர்களாகின்றோம்.

எம் தோழர்கள் நாம் எப்போதும் ஒரே குடும்பமாக வாழ்பவர்கள். இனிய உறவுகளைத் துறந்த நாம், எம்மை நேசித்து, நம்மோடு நாமே ஐக்கியமாகி, இறுகப் பிணைந்துவிட்ட ஜீவன்கள், நமக்கு நாமே தாயாகி, தந்தையாகி, இனிய உறவாகி இணைந்திருக்கின்றோம்.

எமக்கிடையே ஏற்படும் இழப்புக்கள். எமக்கு மிக நெருக்கமானவர்கள் நிரந்தரமகாவே பிரிந்துவிடும் போது, எம்மோடு ஒன்றான,எம்மிலே ஒன்றான, அவர்களின் பிரிவுகள் எம்மை நிலைகுலையச் செய்கின்றன. உதிர்வை நினைத்தும் நாம் அழவில்லைத்தான். அழமுடியாதுதன். ஆனால் நாம் அடையும் வேதனை சொல்ல முடியாதது. சொன்னாலும் யாராலும் புரிந்துகொள்ள முடியாதது.

புரட்சிக்காரர்கள் என்றால் கடினமானவர்கள் என்று எண்ணுகிறது இந்த உலகம். மனிதர்களுக்குள்ளே மிகவும் மென்மையானவன். மிருதுவான உணர்வுகளைக் கொண்டவன். அதனால்தான் புரட்சிக்கே புறப்பட்டவன் என்பதை உணரவில்லை. அந்த மென்மையான இனிய உள்ளங்களோடு நாம் உறவாட, வாழ இன்னுமொரு பிறவி கிடைக்காதா என்று ஏங்குகின்ற ஏக்கங்கள் யாருக்கும் புரியாமலிருக்கலாம். ஆனால் எம்மைச் சார்ந்தவர்கள் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும்.

அந்த தியாகிகள் கடந்துவந்த பாதை கடினமானதுதான். அந்தக் கடினங்கள் எம்மோடு இறுதிவரை பகிர்ந்துவந்த எம் இனியவர்கள் இடையிலே உதிர்ந்துவிடும்போது, எம் தாயை இழந்த துயர், எம் தந்தையை இழந்த துயர், இவைகளையும் கடந்து துயர் உண்டு என்றால் அவற்றையும் கடந்து துயரடையும் எம்நிலை யாருக்கும் புரியாது.

தம் இனிய கனவுகளை இம் மண்ணிலே புதைத்துவிட்டு இந்த மண்ணின் விடுதலைக்காகப் பாடுபட்ட உயிர்களை இந்த மண் மறந்துவிடக்கூடாது. அவர்களின் ஆத்மாவின் கீதங்கள் இன்னும் எம் உள்ளங்களில் ஒலித்துக்கொண்டு இருப்பதை இம் மண்ணின் மைந்தர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.”

_மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள்._