புலனாய்வின் உயிர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உதித்த கதை…!

ஒருமுறை தேங்காய் வியாபாரம் செய்பவர்கள் என்று சொல்லி அரியாலைப்பகுதியில் ஒரு வீட்டின் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார்
கள்.
ஒரு சிறிய பச்சைநிற வாகனத்தில் தேங்காய்களை வாங்கி உரித்து சந்தையில் விற்பவர்கள்போல சீலனும், அப்பையா அண்ணையும், சங்கரும் வேறும் ஓரிரண்டு போராளிகளும் அங்கு இருந்தார்கள். ஆனாலும் வீட்டு உரிமையாளரின் பையனுக்கு இவர்கள்மேல் ஏதோ ஒரு சந்தேகம் அல்லது ஈர்ப்பு. அவனின் கண்ணுக்கு எதுவும் தவறாக தெரியாது வண்ணமே சீலன் தனது நடவடிக்கைகளை தினமும் மேற்கொண்டிருந்தான்.

வீட்டு உரிமையாளரின் பையனுக்கு இவர்கள் யாரொன்ற விபரம் தெரிந்துவிட்டால் அதன் பின்னர் அங்கு தொடர்ந்து இருப்பது சாத்தியமில்லை. பாதுகாப்பானதுமில்லைதான். இதனால் சீலனும் தோழர்களும் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் மிகஅவதானமாக இருந்தார்கள். எந்த நேரமும் அறையின் ஜன்னல்கள் திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும். ஒருநாள் சீலனும் தோழர்களும் துப்பாக்கிகளை கழற்றிப்பூட்டும்போது திரைச்சீலை விலகிவிட வீட்டு உரிமையாளரின் பையன் பார்த்துவிட்டான்.
சீலன் இதை கவனிக்கவில்லை. ஆனால் மறுநாள் சீலனும் நண்பர்களும் கிணற்றடியில் துணிதுவைத்துக்கொண்டு இருக்கும்போது அந்தப் பையன் ‘நீங்கள் இயக்கமா..?’ என்று கேட்டுவிட்டபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

எல்லாம் பிழைச்சுப்போட்டுது. இனிமேல் இவன் போய் தகப்பனுக்கு சொல்லுவான். அவர் வந்து வீட்டால் எழுந்துபோய்விடும்படி கேட்கபோகிறார் என்றே சீலன் பயந்தான். அந்த நேரம் அரியாலைப்பகுதியில் இயக்கத்துக்கு அனுசரணையாக இருந்த காராத்தேமாஸ்டர் ஒருவரிடம்தான் வீட்டு உரிமையாளரின் பையனும் காராத்தே பழகிக்கொண்டு இருந்தான். சீலன் அவரிடம்போய் அந்த பையனிடம் மெதுவாக பேசும்படி கேட்டுக்கொண்டார். மறுநாள் அந்த காராத்தேமாஸ்டர் வந்து சீலனிடம் அந்தப்பையன் இயக்கத்தில் இணைந்துகொள்ள ஆர்வமாக இருப்பதை சொல்லியபோது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதுபோலவே அனைவரும் மகிழ்ந்தனர்.

அந்த வீட்டு உரிமையாளரின் பையன்தான் பின்வந்த நாட்களில் ‘பொட்டு’ என்றும் பொட்டு அம்மான் என்றும் அழைக்கப்பட்ட பெருவீரன் ஆவார். வாடகைக்கு இருக்கப்போன இடத்தில் ஒரு வரலாற்றுப்பெருவீரனை உள்வாங்கிய பெருமை தளபதி சீலன் அண்ணாவை சாரும்…………

-ராஐ் ஈழம்