புலிகள் யாரை நம்பி போராட்டத்தில் இணைந்தார்கள்?
பொறுப்பாளர்களையா, அல்லது தளபதிகளையா?
ஈழத்து துரோணர்.!!

இந்த பதிவுக்கு காரணம் சிலரது தலைவர் மீதான, உண்மைக்கு புறம்பான விமர்சனங்களுக்கான பதில்.

1990களின் ஆரம்பத்தில் இந்திய உளவுத்துறையினருடன் இணைந்து மிகப்பெரும் சதியை மாத்தையா அவர்கள் , தலைவருக்கும், அமைப்புக்கும் எதிராக முன்னெடுத்திருந்தார். அதனால் 1993ம் ஆண்டு மாத்தையா அவர்களின் துரோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு புலிகள் ஆயத்தமான போது, (இந்த கைதுபற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்) பெரும் சிக்கல் ஒன்று அன்றைய நேரத்தில் புலிகளுக்கு உருவானது.

மாத்தையா அன்றைய நேரத்தில் தலைவருக்கு அடுத்தநிலையில் இருந்த ஒருவர் என்பதால், தலைவருக்கு இணையான பாதுகாப்பு கட்டமைப்பு இருந்தது. அதனால், மாத்தையா அவர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் ஒருவேளை, மாத்தையாவை கைத்துசெய்ய விடாது, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தாக்குதலில் இறங்கினால், மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பமும், புலிகள் மீது அவநம்பிக்கையும் உருவாகியிருக்கும். இதனை தவிர்ப்பதற்காகத்தான், சுரேஷ் அல்லது கேடி என்று அழைக்கப்பட்ட, மாத்தையா அவர்களின் மெய்ப்பாதுகாவல் அதிகாரி விடுமுறையில் செல்லும்வரை காத்திருந்தனர் புலிகள்.

ஏனென்றால் மாத்தையாவின் சதியோடு நேரடியாக சம்பந்தப்பட்ட ஒருவர் சுரேஷ். சிலவேளை அவரது உத்தரவின் பேரில் சண்டை நடக்கலாம்? என்பதை கருத்தில் எடுத்தனர் புலிகள். இதனால் மாத்தையாவின் கைதுக்கான நாட்கள் தள்ளிப்போனது. சுரேஷ் விடுமுறையில் சென்றதும் மாத்தையாவை கைதுசெய்வதற்கு, புலிகள் சுதுமலையில் இருந்த மாத்தையாவின் முகாமை சுற்றிவளைத்திருந்தனர். அன்றைய நேரத்தில், மூன்று வளையமாக மானிப்பாய், ஆனைக்கோட்டை, கொக்குவில், சுதுமலை என அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கி, சுற்றிவளைத்திருந்தனர் புலிகள்.

காரணம், சில வேளை சண்டை ஆரம்பித்தால், கிடைக்கும் அவகாசத்தில், மாத்தையா தப்பிப்போகலாம் அல்லது இவர்களின் தொடர்பின் ஊடாக, இந்திய அரசின் உலங்குவானூர்தி உதவி மாத்தையாவிற்கு கிடைக்கலாம் என எதிர்பாக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினர், உலங்குவானூர்தி மூலமான மீட்பு ஒன்றை செய்வார்கள் என்ற கோணத்தில், விமான எதிர்ப்பு ஆயுதங்களும் புலிகளால் நிலைநிறுத்தப்பட்டன.!

மணியம்தோட்டத்தில் வைத்து முழுவிபரமும் புலிகளுக்கு கூறாது, செய்யப் போகும் நடவடிக்கை பற்றி மேலோட்டமாக, போராளிகளுக்கு சொர்ணம் அண்ணையால் விளங்கப்படுத்தப்பட்டு, இரவோடு இரவாக புலிகள் நகர்த்தப்பட்டனர். அம்மான் தொடங்கி, புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரும், மாத்தையாவின் முகாமின் அருகிலேயே தொடர்பில் நின்றனர். பால்ராஜ் அண்ணையுடன் சில போராளிகளும், சூட்டண்ணையுடன் புலனாய்வுத்துறைப் போராளிகளும் மாத்தையா அவர்களின் முகாமினுள் சென்றனர்.

அப்போது வாயிலில் காவல் நின்ற போராளிகளிடம், பால்ராஜ் அண்ணை கூறினார், நாங்கள் தலைவரால் அனுப்பப்பட்டு வந்துள்ளோம், மாத்தையா அண்ணையை கூட்டிசெல்லப் போகின்றோம் என்றார். எதிர்பாத்தது போலவே, அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, பால்றாஜ் அண்ணை, அந்த போராளிகளைப் பார்த்து கேட்டார்” நீங்கள் யாரை நம்பி போராட்டத்தில் இணைந்தீர்கள்” தலைவரையா அல்லது மாத்தையாவை நம்பியா என்றார்” உடனே அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து “தலைவரை நம்பித்தான் போராட வந்தோம்” என்பதை நிருபித்தனர்.

இரத்தக்களரி ஒன்றை எதிர்ப்பாத்து சென்ற எமக்கு, அமைதியாக அவரது கைது முடிவுக்கு வந்தது. புலிகளின் அணிகளும் வந்தவழியே அமைதியாக முகாம் திரும்பினர். இருண்டது விடிஞ்சது தெரியாமல் (சிலரைத்தவிர) மக்கள், தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் எமக்கு ஒரு செய்தியை அன்று ஆணித்தரமாகக் கூறி நிக்கின்றது. எமது “போராளிகள் யாரையும் நம்பி போராட்டத்தில் இணையவில்லை, அவர்கள் தலைவரை மட்டுமே நம்பி வந்தனர்” இதுவே அந்தச் செய்தி.! எங்களை வழிநடத்தி செல்லும் “தலைவரை நாம் எவ்வளவு தூரம் நம்பவேண்டும் என்பதை” இந்த சம்பவம் சுட்டி நிக்கின்றது. “வரலாறே எமக்கு வழிகாட்டி”

நினைவுகளுடன் துரோணர்.!!

(www.eelamalar.com)