புலி வேஷம்…கவனம்!

-இதயச்சந்திரன்-

எதிரிகளும் எம்மை அழித்தவர்களும், விடுதலைப்புலிகளின் பெயரைச் சொல்லாமல் யாழ்ப்பாணத்தில் காலூன்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

மறைந்த மகேஸ்வரனின் தம்பியாரும், விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடனே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தோம் என்கிறார்.
ஐதேகவில் இருந்தவாறே புலிப்புராணம் பாடுகிறார் விஜயகலா மகேஸ்வரன்.

இவர்களுக்கு விடுதலைப் புலிகள் மீது ஏன் திடீரென்ற பாசம் பொங்கிக் கொண்டு வருகிறது என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இவர்களின் ஆட்சிதான் யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது.
இராணுவம் காவல்துறை எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டிலுள்ளது.
ஆகவே ‘ஆவா’ வாள்வெட்டுக் குழுக்களின் ரிஷிமூலத்தை இவர்கள் அறியமாட்டார்களா?.

புனர்வாழ்வு பெற்றதாகக் கூறப்படும் புலிப்போராளிகளின் நடமாட்டத்தினை ஒவ்வொரு கணமும் அவதானிக்கும் அரச புலனாய்வாளர்களுக்கு, சமூக விரோதக்கும்பல்களையும் ஆவா குழுக்களையும் கண்டு பிடிப்பது அவ்வளவு கடினமான விடயமா?.

சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதென ஆட்சியின் பங்காளர்கள் கூறுவது நகைப்பிற்கிடமானது.

அதுவும் நல்லாட்சி அரசின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைச்சர், புலிகள் மீண்டும் வரவேண்டுமென பேசியிருப்பது பலத்த சந்தேகத்தையும், அதன் பின்னணியில் வாக்கு வேட்டைக்கான உள்நோக்கமும் இருப்பது போல் தெரிகிறது.

அண்மைக்காலமாக மைத்திரி மற்றும் ரணிலின் யாழ் விஜயங்கள், ஆட்சி புரியும் கட்சிகளின் மீது சந்தேகத்தினை தோற்றுவிக்கின்றன.

தென்னிலங்கை பேரினவாதிகள் பெருங்குரலில் விஜயகலா மீது விமர்சனங்களை முன்வைத்தும், அவரோ இன்னமும் கட்சியை விட்டு விலகவில்லை. கட்சியும் அவரை நீக்கவில்லை.

புலிகள் மீதான புகழாரத்தினால் , தமிழ் மக்கள் மத்தியில் விஜயகலாவின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ள விவகாரம் மிக ஆபத்தானதொன்றாகத் தென்படுகிறது.

கொலையாளிகளுடன் கூட்டுச் சேர்ந்தவாறே, கொலையானவர்கள் சார்பில் பேசும் அரசியல்வாதிகள் குறித்து மிகுந்த அவதானமும் எச்சரிக்கையும் தேவை.

83 ஜூலை படுகொலைகளை நடாத்தியது ஐக்கிய தேசியக் கட்சி என்பதையும், அதன் யாழ் பிரதிநிதி விஜயகலா மகேஸ்வரன் என்பதையும் மறந்துவிடக் கூடாது.