மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு விதித்துள்ள தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதோடு, அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவேந்தல் இடத்தில்  இருந்த திலீபனின் திருவுருப்படம் மற்றும் பதாதைகளை இரவோடு இரவாக தனது காவல்துறையினைக் கொண்டு அகற்றியுள்ளது.

தியாகி திலீபனை நினைவுமூகூருதல் என்பது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை நினைவுகூரும் செயல் என இன்று செவ்வாய்கிழமை யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா அரச கட்டமைப்பின் இத்தகையை தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென்பதனையே மேற்படிச் சம்பவங்கள் மீண்டும் வெளிக்காட்டி நிற்பததாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாகி தீலீபனின் முழக்கம், இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை  உணர்த்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளது.

பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரப்பு செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பானது, அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழத் தேசியத்தினை நீக்கம் செய்ய முனைவதோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் செயலிலே ஈடுபட்டு வருகின்றது. சிறிலங்காவின் நீதித்துறையினாலோ அல்லது அதன் கட்டமைப்புக்கள் ஊடாகவோ தமிழர் தேசம் இதனை எதிர்த்துப் போராடிவிட முடியாது.

மக்கள் போராட்டத்தின் ஊடாகவே சிறிலங்காவின் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும் என்ற நிலையினையே விடுதலைப்பசியோடு தியாகி தீலிபனின் இருந்த இன்றைய முதன்நாள் நினைவுகள் உணர்த்தி  நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.