ஒரு போராளியின் நினைவு பகிர்விலிருந்து…….

●மதம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடுதலைப்புலிகளின் கொள்கைத்திட்டப் பிரகடனம்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும்.அதேவேளையில் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எமது இயக்கம் உத்தரவாதம் அளிக்கும்.அனைத்து மதத்தினரும் தமது ஆன்மிக வேட்கைகளை நிறைவு செய்யவும்,மத,கலாச்சாரப் பண்புகளைப் பேணிவளர்ககவும் எமது இயக்கம் ஊக்கம் அளிக்கும்.

தமிழீழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் இயக்கம் என்னும் முறையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது.
இதில் வழிபாட்டுச் சுதந்திரமும் ஒன்றாகும்.இந்த உரிமையை விடுதலைப்புலிகள் இயக்கம் மதிக்கின்றது.
எந்த வழியிலோ,எந்த வடிவத்திலோ மெய்ப்பொருளைத்தேடும் உரிமை மனிதனுக்கு உண்டு.இது அவனுடைய ஆன்மிக உரிமையாகும்.தனது ஆன்மிக வேட்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் ஒரு மனிதன் சிந்திப்பதும்,செயற்படுவதும்,நம்புவதும்,நம்மால் இருப்பதுவும்,வழிபடுவதும்,வழிபடாமல் இருப்பதுவும் அவனுக்கே உரித்தான தனிமனித உரிமையாகும்.அந்த வகையில் மனிதனின் இந்தச் சிந்தனை உரிமையை விடுதலைப்புலிகள் இயக்கம் மதிக்கின்றது.

மதவழிபாடு என்பது மக்களின் பண்பாட்டு வாழ்வுடன் இழையோடிக் கலந்திருக்கிறது.
பண்பாட்டு வாழ்வு தேசிய வாழ்வுக்கு ஆதாரமானதாகும்.எனவே தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஒரு விடுதலைப்போராட்டத்தை நடத்திவரும் இயக்கம் எனும் முறையில் மக்களை தேசிய அடிப்படையில் ஒரு சக்தியாக அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் மக்களின் பண்பாட்டு வடிவங்களைப் பேணிப்பாதுகாப்பது இன்றியமையாதது.

[]=புலவர்….