i love tamil eelam

“மலரும் தமிழீழம் மரணத்தில்தான் மலருமென்றால் மரணத்திற்கு முத்தம்தர நாம் தயார்”

ஆவி கொடுக்க அசையாத்திடம் கொண்ட மாவீரர் வாழும் நாடு எமது நாடென்பது கவிஞர் முருகையனின் விடுதலைக் குறள். ஒரு தேசியம் எல்லாவித நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வாழ்வதற்கும் இறுதியில் அது வெல்வதற்கும் எத்தனை அக, புறக்காரணிகள் காரணமாக விருந்தாலும், அவை யாவற்றிலும் முதன்மையானது அதற்காக உயிர்கொடுக்கவும் ஆயத்தமாகவுள்ள அணியொன்றிருப்பதே என்பது இன்றைய அரசறிவியலாளர் அடித்துக் கூறும் கருத்தாகும். மறு வார்த்தையில் சொன்னால், தேசிய வீரர்களை அது கொண்டிருந்தல் வேண்டும் என்பதாகும். எனவே இத்தகையதொரு வீரமரபினைப் பேணிப் போற்றிடும் நாடு எம் நாடென்பதில் எமக்கும் பெருமையே. இதன் வெளிப்பாடே மாவீரர் நாள்.

இதுவொரு உயிர்ச்சான்று. ஏனெனில் மாவீரர் நாளிலும் மாவீரராகும் வரலாறு தொடரும் நாடிது. 27-11-1982 தொட்டு 31-10-2008 வரை இருபத்திரண்டாயிரத்து நூற்றுப் பதின்நான்கு மாவீரரைக் கொண்டுள்ளோம் என்கிறது மாவீரர் பணிமனைக் குறிப்பு.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை நியமமே நினைவுகூர்தலென்பதே என்கிறார் மிலன்குந்தோரா என்கிற செக் நாட்டறிஞர். அவர் சொல்கின்றார், குறிப்பாக அதிகாரத்திற்கு எதிரான மனிதப் போராட்டமென்பது ஞாபக மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டமே. செவ்வியில் இசை, ஓவியம், வலிமை, வேதனையை நினைவுகளாக உயிர்ப்பிக்கின்றன. வரலாற்றில் படிந்த கருமை இசைவழி வெளிப்படும்.

இத்தகைய வழிகளில் நினைவுகூர்தலை நாம் மேற்கொண்டாலும் மாவீரர்நாளே எமது முதன்மை வழியாகின்றது. அத்தினத்தில் நாமோ பெரும் எழுச்சியைப் பெறுகின்றோம். நாம் சார்ந்திருக்கும் இனத்திற்காக உயிர் கொடுத்தோரைப் பெருமிதத்துடனும் உள்ளார்ந்த வேதனையுடனும் நினைவிற்கொள்வது வரலாற்றின் சிறப்புப் பக்கம் என்பதில் ஐயமேயில்லை. நன்றி சொல்லல், துயர் பகிர்தல், துன்பத்தினை இறக்கிவைத்தல், ஆற்றுப்படல் எனப்பலவகை உளவியல் பரிமாணங்களையும் எம் மாவீரர்நாள் தன்னகத்தே கொண்டதாகவே தகவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாவீரர்நாள் இம்முறை மிக வேறுபட்டதொரு சூழலில் நடப்பது சகலராலும் உணரப்படுகின்றது. எத்தகைய சூழலிது?

2,500 ஆண்டுகாலச் சிங்கள பௌத்த பேரினவாத வெறியினர் வெகுண்டு நிற்கும் சூழல், குடும்ப ஆட்சியை நிலைநாட்டத் துடியாகத் துடிப்போர், எதையும் செய்ய எப்போதும் தயாராகவிருக்கும் சூழல், பிராந்திய மேலாதிக்கர்கள் தமது பிழையை நிலைநாட்ட முயலும் சூழல், சர்வதேச நாட்டாமைக்காரர் தமது மேலாதிக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சூழல் இவ்வாறாக இப்பக்கம், அப்பக்கம் என்றில்லாமல் எல்லாப் பக்கமும் ஒரே பக்கமாக இனமேலாதிக்க வெறியூட்டப்பட்ட சிங்கள இராணுவப் பொறியமைப்பிற்கு இடைவிடாது வலுவூட்டும் சூழல். இத்தகைய சூழலில் கடந்த இரண்டரை வருடகாலமாக எமது போராளிகள் உயிரை உருவியெடுத்து வேலியாக நட்டுப்போராடி மாவீரரான சூழல். இதன் மூலம் சிங்களம் தொடுத்த பெரும் போரை மந்தப்படுத்தி அதன் இலக்கை அடையவிடாமல் தடுத்துச் சிங்கள இராணுவத்தைத் தேவையாக்கும் சூழல். இத்தகைய நிலையில் இற்றைவரை மாவீரரானோர் ஈக ஒளியில் நாம் பாதை தேடிப் பயணிக்கும் சூழல். இத்தயை நிலையில் தமிழக உடன்பிறப்புக்கள் எமக்காகக் கொந்தளித்துக் குமுறியெழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சூழல், இச்சூழல்களுக்குள் ஏற்பட்ட பின்னடைவுகளை, மாற்றங்களைத் தாக்கி மலையென எழும் பளுக்களைத் தாக்கி இன்னமும் வாழ்விற்கான பற்றுதலைத் தமது ஆன்மாவை இருப்பிற்கான விருப்பை எம் மக்கள் இழக்காதிருக்கும் சூழல். இத்தகைய சூழல்களின் தொகுப்பின் பின்னணியிலேயே இம்முறை மாவீரர் நாள் மாண்புற நினைவிற்கொள்ளப்படுகின்றது. இதனால் இந்நாள் எல்லாவகையிலும் வேறுபடுகின்றது. மிகவும் கவனிக்கத்தக்கதாகின்றது.

இச்சூழலின் உட்பொருளை நாம் புரியவேண்டுமாயின் மாவீரர் விரிப்பை எடுத்து நோக்கல் வேண்டும். அதில் எமது விடுதலைப்போராட்ட வரலாறு தொகுப்பாக விரிவதை நாம் காணலாம். விடுதலைப் போராட்ட இயக்கத்தின் படிமுறை வளர்ச்சி, நெருக்கடிகளின் தீவிரத் தன்மையென எல்லாமே புலப்படுகின்றன. வரலாற்றின் வளர்நிலைகளை ஒவ்வொரு பத்தாண்டு காலமாக நாம் பகுத்துப் பார்க்கலாமா?

முதற் பத்தாண்டு 1982இல் ஒற்றைப் படைமாவீரர் தொகையோடு தொடங்குகின்றது. கரந்துறைப் போர் முறையின் தொடக்க காலத்தில் கூற்கின்றன. 1982ஆம் ஆண்டில் ஒன்றாகி, 1983இல் ஐந்தாகி 1984இல் முப்பத்தாறாகின்றது. கரைந்துறைப் படை நிலையின் வளர்ச்சியாகத் தொடர்ந்து அதிகரிக்கும் மாவீரர் தொகை மூன்றிலக்கங்களைத் தொடுகின்றது. முதல் பத்தாண்டின் இறுதிக் காலகட்டங்கள் இந்தியப் படையோடான மோதலைக் குறிக்கின்றன.

1990இல் 965 ஆகிய மாவீரர் தொகை இப்பத்தாண்டின் ஒரு வருடத்திற்கான ஆகக்கூடிய தொகையான 1622ஐ 1991 இல் எட்டுகின்றது. அடுத்த பத்தாண்டு தொடக்கத்தில் இந்தியப்படை மோதலில்லாத நிலையிலிருந்தபோதும், சிங்களப் படையுடன் மோதல் தொடர்வதைச் சற்றுக்குறைத்த மாவீரர் தொகை விளக்குகின்றது. சிங்களப் படையுடனான மோதல் இரண்டாம் பத்தாண்டின் இறுதி ஐந்தாண்டுகளில் வெகுவாக அதிகரிப்பதை மாவீரர் தொகை அதிகரிப்பு விளக்குகின்றது. 1995ஆம் ஆண்டு மூன்றாம் கட்ட ஈழப்போரோடு மாவீரர் தொகை 1,500க்கு மேலாகியது. அதுபோல உச்ச நெருக்கடிதந்த 1997ஆம் ஆண்டு என்பதனை 2112 என்கிற மாவீரர் தொகை குறிக்கின்றது. அதன் பின்னும் நிலவிய நெருக்கடியை 1998 -1806, 1999-1549, 2000-1806 என நான்கு இலக்கங்களில் பயணிக்கும் எமது மாவீரர் விரிப்பு விளக்கி கூற்கின்றது. அடுத்த மூன்றாம் பத்தாண்டு தொடக்கத்தில் 2001 இன் பின்பு மாவீரர் தொகை திடீரென வெகுவாகக் குறைந்து இரட்டைப் படைத்தொகையாகின்றது.

இ;ங்கே நாம் பதிவுசெய்ய விரும்பும் செய்தியிதுதான். எவ்விதம் நாம் இற்றைவரை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துப் பயணித்தோம்? மாவீரர்களாக எம் போராளிகள் உயர்ந்தநிலை அடைவதன் மூலம் நெருக்கடிகளுக்கு நாம் முகம்கொடுத்து அதிலிருந்து மீண்டிருக்கின்றோம். அவர்களின் உயிரே எமதினத்தின் காப்புக் கவசமாக உள்ளது. இப்பொழுது மூன்றாவது பத்தாண்டின் இறுதிக் காலகட்டத்திற்குள் நாம் உள்நுழையும் காலம் ஒரு விடுதலைப்போராட்டத்தில் முப்பதாண்டுகள் என்பதே பொதுவில் ஒரு தீர்க்கமான காலகட்டமாகக் கணிக்கப்படும். அவ்வகையில் 2006ஆம் ஆண்டு மீண்டும் நெருக்கடிகள் வளர்ந்துசெல்வதை மாவீரர் தொகை அதிகரிப்பிலிருந்து அறியமுடியும்.

2005 இல் 57 மாவீரர் எனக் குறிக்கும்நிலை மாறி 2006 இல் ஆயிரத்து ஆறு 1006 என உயர்கின்றது. 2007ஆம் ஆண்டின் மாவீரர் தொகை ஆயிரத்து இருநூறு 1200 ஆகின்றது. இவ்வருடம் பத்தாம் மாதம்வரை மாவீரர் தொகை 1974 என்றாவதால் 1997 ஆம் ஆண்டு போல இவ்வருடமும் மாவீரர் தொகை இரண்டாயிரம் என்கிற எண்ணிக்கையைத் தாண்டும் என்பது தெரிகின்றது. இங்கேயுள்ள செய்தி மிகத் தெளிவானது. இவ்வருடத்தில் நாம் சந்தித்த, சந்திக்கப்போகின்ற நெருக்கடிகளிலிருந்து மீள நாம் உயிர்விலை கொடுக்கின்றோம். அதன் வழியேதான் நாம் எமது மீட்சியைப் பெறமுடியும் என்றாகின்றது. அதனாலே இம்மாவீரர் நாள் என்றுமில்லாதளவு பாரிய மாற்றங்களை உருவாக்கிய நாளாகப் பின்னாளில் கருதப்படப் போகின்றது. இப்பாரிய ஈகப் பளுவினைத் தமி(ழத் தேசம் எவ்விதம் பகிர்ந்துகொள்கின்றது? யாழ் மாவட்டத்தின் மாவீரர் தொகை 7,861, மட்டு – அம்பாறை, திருமலை மாவட்டங்களின் மொத்த மாவீரர் தொகை 7,390, அதுபோல முல்லைத்தீவு, மன்னார், வன்னியென விரியும் வன்னிப்பெருநிலப்பரப்பின் மாவீரர் தொகை 6,863 என்றாகின்றது. இத்தேசம் எவ்வித வேறுபாடுமற்று விடுதலைப் பளுவினைச் சுமக்கும் பாங்கு மிகவும் கவனிக்கத்தக்கது. இவ்வாறாக எமது இற்றைவரையிலான விடுதலைப் போராட்டம் நகர்கின்றது. எனவே எத்தகைய பெரும் வெற்றிகளைத் தாமடைவதாகச் சிங்களம் தம்பட்டமடித்தாலும், இறுதியில் இவையெல்லாம் பயனற்ற இராணுவ வெற்றிகள் என்பது சான்றளிக்கப்படும். வரலாற்றினை நகர்த்தும் ஆன்ம சக்தியை நாம் இழக்காதிருக்கும் வரை எம் மக்களின் இறுதிவெற்றி உறுதிப்படுத்தப்பட்டதே. இதனைச் சான்றளிக்கக் கரும்புலிகள் சிலரின் கூற்றுக்களை இங்கே பெரும் எழுச்சி வரிகளாகப் புனித ஆன்மத்தின் ஒளிக்கதிர்களாகப் பதிவுசெய்கின்றோம். “நான் சாவதற்காகப் போகவில்லை” சாதிக்கவே போகின்றேன். சாதிப்பதற்காக நான் போவதால், என் சாவே ஒரு சாதனை. சாவை வென்றவர் வரிகள் இவை.

சாவிற்கே அஞ்சாத நிலையில் வேறு எவைக்கும் எவரும் அஞ்சார். வரலாற்றின் சில்லுகளை நகர்த்தும் மகத்தான உணர்வுகளின் கலவை இவ்வரிகள். “சாவதற்குக் கூட எத்தனை தடைகள் எமக்கு” “எமக்குக் கிடைக்கும் உச்ச மகிழ்வினை அந்தக் கணத்தில்தான் நாம் அடைகின்றோம்”, “எங்கள் எல்லோரையும் தாங்கும் அந்தப் தேவிக்குள் போய்வர வேண்டும்” என்கிற கூற்றுக்கள் சாலைக்கூடப் பகுத்துப் பார்க்கும் பற்றற்ற மனநிலை எவ்வளவு தெளிவாகப் புலப்படுகின்றது. “மரணம் எங்கள் மரபாகப் போனபின் மரணம் எங்களை என்ன செய்யும்? மலரும் தமிழீழம் மரணத்தில்தான் மலருமென்றால் மரணத்திற்கு முத்தம்தர நாம் தயார்”.

“மரணம் எங்கள் மரபாகப் போனபின் மரணம் எங்களை என்ன செய்யும்? மலரும் தமி(ழம் மரணத்தில்தான் மலருமென்றால் மரணத்திற்கு முத்தம்தர நாம் தயார்”.

-2008 மாவீரர் நாள் குறித்து க.வே.பாலகுமாரன் எழுதியது02_02_07_family_05