மாவீரர்களின் ஆன்மபலத்தை அழிக்கும் ஆயுதபலம் சிங்களத்திடம் கிடையாது …!

இந்தப் பூமிப் பந்தில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தாங்கள் விட்டுவிடுதலையாகிச், சுதந்திரமாக உயிர்வாழ வேண்டும் என்றே விரும்புகின்றன. சாதாரணமாக கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு பறவைகூட, தான் சிறகு விரித்துப் பறக்க, அந்தக் கூண்டின் கதவுகள் எப்போது திறக்கும் என்றே காத்துக்கிடக்கின்றது.

இந்த உயிரினங்களில் மனித இனம் மட்டுமே தனது விடுதலையைத் தானே தீர்மானிக்கக்கூடிய சக்தியாக உயர்ந்திருக்கின்றான். ஆனாலும், மனித இனம் தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே மனிதர்களுக்குள் உள்ள பல்வேறு இனப் பிரிவுகளும் தமது விடுதலைக்காப் போராடிக்கொண்டே இருக்கின்றன.

விடுதலை என்பது யாசகம் அல்ல. அது இரத்தம் சிந்தும் ரணகளம் என்பதைத் தெரிந்துகொண்டும், உயிரை அர்ப்பணித்துப் போராடுகின்றன. இதில் தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஒரு இனம் தான் விடுதலை பெற்ற இனமாக வாழவேண்டும் என்று விரும்புவதை, எந்தவொரு மனிதனும் தவறென்று கூறிவிடமுடியாது. ஆனால், தமிழினம் விடுதலை பெற்ற இனமாக வாழ்வதற்குச் சிங்களதேசம் தடை போடுகின்றது என்றால், அதற்குத் துணையாக இந்த உலக வல்லரசுகளும் முண்டுகொடுத்து நிற்கின்றன.

சிங்களப் பேரினவாதத்தின் இந்தக் கொடுஞ்செயலைத் தட்டிக்கேட்க இந்த உலகம் இன்னமும் தயாராக இல்லை. இழந்துபோன தங்கள் உரிமையை, விடுதலையை மீளப்பெறத் தமிழினம் அனைத்து வழிகளையும் கையாண்டு பார்த்துவிட்டது. இதில் ஆயுத வழிப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நடத்திவிடவில்லை. 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைத் தீவை மேற்குலகம் ஆக்கிரமிக்கும் வரை தமிழினம் சுதந்திரமிக்க, விடுதலைபெற்ற தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஒரு தனித்துவமிக்க இனமாகவே தமது தாயகத்தில் வாழ்ந்திருக்கின்றது.

ஆனால், ஆக்கிரமிப்பாளர்களால் அந்தச் சுதந்திரம் பறிக்கப்பட்டபோத
ு, அதனை மீளப்பெறுவதற்காக ஆயுத ரீதியாகவும், அமைதி வழிப் போராட்டங்கள் மூலமும் தொடர்ந்து முயன்றுகொண்டே வந்திருக்கின்றார்கள். இதில் அமைதி வழியில் போராடியவர்களை அந்த மக்களும் மறந்துவிட்டார்கள், வரலாறும் அவர்களை மறந்துவிட்டது.
ஆனால் எல்லாளன், பண்டாவன்னியன், சங்கிலியன்… என ஆயுத வழியில் எதிரியோடு நேருக்கு நேர் நின்று உயிரை அர்ப்பணித்துப் போராடியவர்களை தலைமுறைகள் பல கடந்தும் தமிழ் மக்கள் தங்கள் மனங்களில் வைத்துப் பூசிக்கின்றார்கள். இப்போதும் அவர்களுக்குத் தலைவணங்குகின்றார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றார்கள்.
அப்படித்தான் எங்கள் மாவீரர்களும். தலைவரின் வழி நின்று, தமிழினம் விடுதலை பெற்ற இனமாக வாழவேண்டும் என்பதற்காக தங்கள் உயர்வான உயிர்களை அர்ப்பணித்தவர்கள் எங்கள் மாவீரர்கள். 30 வருடகால விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு மாவீரனும் செய்த சாதனைகளும், அர்ப்பணிப்புக்க
ளும் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாதவை. விடுதலைப் பயணம் ஒரு நெருப்பாறு என்று தெரிந்தும் அதனைத் துணிவோடு நீந்திக்கடக்க முனைந்தவர்கள். தங்களது உயிரைவிட தமது இனத்தின் எதிர்கால வாழ்வை உயர்வாக நினைத்தவர்கள். அவர்களது அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்களே இன்று இரும்புச் சுவராக தமிழினத்தைக் காத்து நிற்கின்றது. அவர்கள் தந்த ஆன்ம பலமே, எதிரியின் அச்சுறுத்தலுக்க
ு அடிபணியாது மக்களை இன்னும் உறுதியோடு வைத்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக எதிரி இறுமாப்படைந்தாலும், இன்னமும் தமிழினத்தை அச்சத்துடனே பார்ப்பது அதனால்தான். 2009ம் ஆண்டிற்கு முன்னர் மாவீரர் நாட்களை சிங்களப் பேரினவாதம் எவ்வாறு அச்சத்துடனும், கெடுபிடிகளுடனும் கடந்து வந்ததோ, அதேபோன்றே 2009ம் ஆண்டுக்குப் பின்னரும் அந்நாட்களை அது எதிர்கொள்கின்றது.
உயிரிழந்த தங்களது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், அவர்களுக்காக வாய்விட்டு அழுவதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையிருக்கின்றது. இதனைத் தடுப்பதுகூட மனித உரிமை மீறல்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால், தமிழர்களுக்கு அந்த உரிமை முற்றாக மறுக்கப்படுகின்றது. அந்த வீரப் புதல்வர்களின் நினைவுகளைக்கூட தமிழர்கள் மீட்டுவிடக்கூடாது எனச் சிங்களப் பேரினவாதம் அச்சுறுத்துகின்றது.

கல்லறைகளுக்குள் இருந்த வித்துடல்களைக்கூட, கிண்டிக்கிளறி தெருவில் வீசியெறிந்து கொடூரத் தாண்டவம் ஆடியது. தாயகத்து மக்களின் உணர்வுகளை அடக்கிவிட்டு, உலகெங்கும் எழுச்சிகொள்ளும் மாவீரர்கள் நிகழ்வுகளையும் குழப்பிச்சிதைக்க முனைந்தது சிங்களம். ஆனால் அதில் தோற்றுப்போன சிங்களம் இப்போது மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றது.
தமிழினத்தின் ஆழம்வரை ஊடுருவிட்ட மாவீரர்களின் ஆன்மாக்களை சிங்களப் பேரினவாதத்தால் அத்தனை இலகுவில் அகற்றிவிட முடியாது. தமிழர்களின் மனங்களில் இருந்து அவர்களை அகற்றுவதற்கும், அழிப்பதற்கும் சிங்களப் பேரினவாதத்திடம் மட்டுமல்ல இந்த உலகத்திடமும் எந்தவொரு வலுவான ஆயுதமும் இல்லை.

எனவே, எங்கள் விடுதலையைச் சுமந்து சென்ற அவர்களின் கனவுகளைச் சுமந்தபடி நாம் உறுதியோடு நடப்போம். இந்த உலகத்தைத் தமிழர்களின் போராட்டத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் எங்கள் மாவீரர்கள். தமிழினத்தின் விடுதலைக்கான அவசியத்தை இந்த உலகத்திற்குப் புரியவைத்து, விடுதலையை வென்றெடுப்பதே, அந்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கமுடியும்.