மாவீரர் போற்று மானச்சுடர் ஏற்று

கார்த்திகை நாயகரை
கல்லறை மேனியரை
காந்தள் பூத்தூவி 
காலடி கீழ்வீழ்ந்தேயாம்
கனிவுடனே வணங்கி
காரிருள் போக்கிடவே – வீரக்
காவியமாகியவர்
கனவது மெய்செய்வோமென்றே

மாவீரர் போற்று…. மானச்சுடர் ஏற்று….

காடைய பேரினத்து
கொடுமைதனை நினைந்து
காலமெல்லாம் அழுத
கையறு நிலைமாற்ற
கரும்புலியென வெடித்தக்
கடவுளராம் நன்றே – வீரக்
காவியமாகியவர்
கனவது மெய்செய்வோமென்றே

மாவீரர் போற்று…. மானச்சுடர் ஏற்று….

கன்னியர் படைசேர்ந்தே
காடையரோட வைத்து
காரிகையரணி கண்ட
களப்பெரு வெற்றியூடே
காளையர் நிகராகி
கனிவொடு உயிரீந்து – வீரக்
காவியமாகியவர்
கனவது மெய்செய்வோமென்றே

மாவீரர் போற்று…. மானச்சுடர் ஏற்று….

கரிகால் பெருவளத்தான்
காட்டிய வழியெல்லாம்
கடற்புலி தரைப்புலியாய்
காடைய வேரறுக்க
கைகாலிழந்தும் துணிந்தே
கந்தகப் புகையூடே – வீரக்
காவியமாகியவர்
கனவது மெய்செய்வோமென்றே

மாவீரர் போற்று…. மானச்சுடர் ஏற்று….

_கவிஞர் தம்பியின் தம்பி__