முதுகெலும்பு இல்லாத ஜனாதிபதி -சுமந்திரன்

எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று கூறுபவனே முதுகெலும்பு உள்ளவன், விசாரணைக்கு பயந்து ஓடும் ஜனாதிபதி, தனக்கு முதுகெலும்பு உள்ளது கூறமுடியாது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆம் ஆண்டு, இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் மற்றும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவிவகித்த செங்கலடியைச் சேர்ந்த, எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளையில் நடைபெற்றது

குறித்த நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன் போது அவர், “2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி போரின் இறுதிக்கட்டத்தில் பாரிய மனித உரிமை மீறல்களும் பாரிய சர்வதேச குற்றங்களும் இந்த நாட்டிலே இழைக்கப்பட்டன எனப் பல குற்றச்சாட்டுகள் மனித உரிமைப் பேரவையை சென்றடைந்தன.

இலங்கையில் நடந்த இந்த சம்பவங்கள் தொடர்பாக, ஒரு விஷேட கூட்டத்தொடரை நடாத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு மே மாதமே போர் முடிவடைந்து ஐந்து நாட்களுக்குள்ளே கூட்டத்தொடர் ஆரம்பமானது.

அந்த வேளையில் இலங்கை பல வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. இலங்கைக்கு பான்கீமூன் வந்தபோது மூன்று வாக்குறுதிகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அவற்றையெல்லாம் அவதானித்து உறுப்பு நாடுகள் இலங்கையின் பக்கம் சாய்ந்தன.

இலங்கையை கண்டிப்பதற்கென கூட்டப்பட்ட விஷேட கூட்டத்தொடரிலே பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக இலங்கையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் அது நடைபெற்றது.

மகிந்த ராஜபக்ஸவும் மக்களுக்கு தாராளமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்களா? என்பது தெரியாது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் யுத்தக்குற்றசாட்டுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன.அரச படைகளினால் மனிதாபிமான சட்டத்திற்கு எதிராக ஐந்து குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆறு குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டிருந்தன.அதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றது.இது தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையையோ சர்வதேச ஆதரவுடனான விசாரணையோ செய்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று கூறியதன் காரணமாக 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் என்பது ஒரு சபையாகும்.அங்கு வழக்கு நடாத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படமாட்டாது.47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும்.ஐ.நா.சபை மூலம் மகிந்தவை சிறையில் அடைக்கலாம் என கருதுகின்றனர்.அவ்வாறு அடைக்கமுடியாது.இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தல் வேண்டும்.

2012ஆம் ஆண்டு அமெரிக்கா தீர்மானித்தை கொண்டுவருவதற்கு முன்பாக 2011ஆம் ஆண்டு கனடா ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அதனை திரும்பபெற்றுக்கொண்டது. உறுப்பு நாடுகளின் ஆதரவு குறைந்த நிலையில் இருந்தன் காரணமாக, அது திரும்ப பெற்றுக்கொண்டது.

அதில் அந்த தீர்மானம் தோல்வியடைந்திருந்தால் இலங்கையின் கை ஓங்கிவிடும் என்பதற்காகவே கனடா அந்த தீர்மானத்தை திரும்பப்பெற்றுக்கொண்டது.

அமெரிக்கா 2012 ஆம் ஆண்டு எங்களை சந்தித்து நாங்கள் பிரேரணையொன்றை கொண்டுவருகின்றோம்.நீங்கள் யாரும் அந்தப்பக்கம் வரவேண்டாம் என்று கூறினார்கள்.நாங்கள் வல்லரசாக உள்ளபோது இலங்கையில் உள்ள சிறிய கட்சியின் செயற்பாடுகளுக்கு இணங்கி நடந்துகொள்வதாக எழும் விமர்சனங்களை தவிர்த்துக்கொள்வதற்கே அந்த பணிப்புரையை எங்களுக்கு விடுத்தனர்.அதனை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் நாங்கள் இதனைக்கூறினோம். இதன்போது, சம்பந்தனும் சுமந்திரனும், துரோகம் செய்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டனர்.எனக்கு கொடும்பாவி எரிக்கவிடப்பட்டது.யாழ் பல்கலைக்கழகத்தின் கறுப்பு கோட்டு போடப்பட்டு தொங்கவிடப்பட்டது.

இலங்கை உள்நாட்டு விசாரணை நடாத்தவேண்டும் என்று ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.இலங்கை அதனை செய்யவில்லை.2013ஆம் ஆண்டு மீண்டும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மீண்டும் அதனை இலங்கை அரசாங்கம் நிறைவெற்றவில்லை.இதுவே சர்வதேச பொறிமுறையாகும்.

கம்போடியாவில்30 வருடத்திற்கு பின்பே போர்க்குற்ற விசாரண ஆரம்பித்தது என்ற உதாரணத்தை நான் கூறியதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இரண்டு தடவைகள் அவகாசம் வழங்கியும் இலங்கை தனது சுயாதீனத்தை பிரயோகித்து ஒரு விசாரணையை நடாத்ததன் காரணத்தினால் 2014 ஆம் ஆண்டு உள்நாட்டு விசாரணையொன்று நடைபெறவேண்டும் அதற்கு சமாந்தரமாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.இது தான் சர்வதேச முறை.” என்று அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.