தமிழர் தரப்பு தன்னை புதுப்பித்துக்கொள்ளுமா? – இளையவன்னியன்

முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை கண்ணீரோடுதான் காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் . போரை தவிர்த்து நோக்கின் ஒப்பீட்டளவில் ஒட்டுமொத்த தமிழர் தேசம் எதிர்நோக்கிய பிரச்சனையின் தன்மை என்பது அதன் வேகத்தில் முள்ளிவாய்க்காலுக்கு பின் ஆர்முடுகளிலேயே இருந்து வருகிறது அதனை தடுப்பதற்கான வேகம் என்பது பூச்சியத்தில் இருந்து நகராமலேயே இருந்துகொண்டிருக்கிறது.

தமிழர் மீதான அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் அழிப்பு நடவடிக்கைகளும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களின் கொள்கை அல்ல அது ஸ்ரீலங்கா அரசின் கொள்கை. ஸ்ரீலங்கா அரசின் மாற்றப்படாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட ஒன்று . எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரசின் தமிழின எதிர்ப்பு பொதுக்கொள்கையை நிறைவேற்றுவதில் அவர்கள் பின் நிற்பதில்லை ஏனெனில் அதனை அவர்கள் அவர்களது பார்வையில் பௌத்த அறமாகவே பார்த்து வருகிறார்கள் . அதற்கு அடிப்படையான மூலகாரணமும் முதற்காரணமுமாய் அமைவது பௌத்தமதமாகும். அறத்தை கருவாக கொண்டு உருவான பௌத்தம் இத்தீவில் மறத்தின் அடிப்படையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு வருவது கூட பௌத்த அறமாகிவிட்டது.

இன்றைய அரசானது பௌத்தசிங்கள மேலாண்மை சிந்தனை மேல் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும் அது திடீர் என்று உருவாக்கப்பட்டதல்ல அது பல கட்டங்களை தாண்டியே இன்று பல லட்சம் மக்களை கொலை செய்யும் அளவு இந்த கூர்மையான நிலையை அடைந்திருக்கிறது. கூர்மையாக்கப்பட்டிருக்கும் இந்நிலைக்கு அடிப்படையான சிந்தனை ஒரு ஐதீக கதையில் இருந்தே உருவாக்கம் பெறுகிறது.

கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்துகொண்டிருந்த விசாகபௌர்ணமி தினத்தில் வியனும் தோழர்களும் இலங்கையில் காலடி எடுத்துவைத்தனர் , இவ்வாறு காலடி எடுத்துவைத்துக்கொண்டிருந்த வியனும் அவனது வழித்தோன்றல்களுமே பௌத்தத்தை பேணி காக்கப்போகின்றனர் என்று பரிநிர்வாணம் அடைந்துகொண்டிருந்த கௌதம புத்தர் கூறியதாக மகாவம்சம் கூறுகிறது.

அதன் படி அவன் ஆண்டு பௌத்த சிங்கள அரசமைப்பை நிறுவினான் என்றும் மஹாவம்சம் கூறுகிறது. இதனையே தம்ம தீப கோட்பாடு என்று அழைக்கின்றனர். புத்தரால் ”தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு ” என்பதே அதன் பொருள். அதாவது இந்த தீவு பௌத்தத்துக்குரியது , வியனும் அவனது சந்ததியுமே இந்த தீவுக்கு உரித்துடையவர்கள் என்ற பொய்யான நிறுவல்களை இந்த பொய்யான கதை உருவாக்கி விட்டது அத்தோடு ஒரே இனம் , ஒரே மதம் , ஒரே மொழி , ஓர் அரசு என்ற கருத்தியலையும் தோற்றுவித்தது. இதன் வழியே மகா சங்கமும் அரசும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒன்றை ஒன்று பாதுகாத்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறார்கள். இதன் வெளிப்பாடுதான் ஆளில்லா ஊரில் டீ கடை போடுவது போல் ஆங்காங்கே முளைக்கும் புத்தர் சிலைகளும் , அகல கால் வைத்து தமிழர் நிலத்தை விழுங்கும் குடியேற்ற திட்டங்களும்.

இந்த தம்ம தீப கோட்பாட்டின் நவீன புத்திரர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள் , அதற்கு மைத்திரி மட்டும் விதிவிலக்கானவர் அல்ல , அதனாலேயே பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி மொழி வழங்கப்பட்டு வருகிறது , அதே நேரம் பௌத்தம் தனது மேலாண்மையை இத்தீவு முழுவதும் நிலை நிறுத்த ஒற்றை ஆட்சி அவசியமானதாகிறது . அதன் காரணத்தினாலேயே ஓர் அரசு அது ஒற்றை ஆட்சி அரசு என்கிற தீர்மானத்தில் சிங்கள தேசம் விட்டுக்கொடுப்பின்றி நடந்து வருகிறது.

ஆனால் தமிழர் தரப்பு கற்பனையில் காதல் கோட்டை கட்டி இதயத்தால் இணைந்து மானசீகமாக காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீண்ட கால அடிப்படையில் தமிழரின் உரிமை குரலை நசுக்குவதற்காக ஸ்ரீலங்காவும் சர்வதேசமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் இதில் மிக முக்கியமாக இரண்டு அடிப்படைகளில் தமது செயற்பாடுகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்

1. பயன்படுத்துதல் 2. துண்டாடுதல்

பின் முள்ளிவாய்க்கால் காலத்தில் ஆயுத ரீதியாக தோற்கடித்த தமிழரை அரசியல் ரீதியாகவும் தோற்கடித்து வலுவிழக்க செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது அதற்காகவே இந்த நடவடிக்கையை அவர்கள் செய்ய தொடங்கினார்கள் , அதாவது தமிழரை பயன்படுத்துவதன் ஊடாகவும் அவர்களை துண்டாடுவதன் ஊடாகவும் நீண்டகால அடிப்படையில் தமிழர் விடுதலைக்கான உரிமைக்குரலை நசுக்குவதும் காலப்போக்கில் அதனை நீர்த்து போக வைப்பதுமே அவர்களின் திட்டமாக இருந்து வருகிறது.

சரி எப்படி பயன் படுத்துகிறார்கள் என்று பார்ப்போம் .

தமிழ் தலைமைகளையும், இலக்கியவாதிகளையும் , புத்தி ஜீவிகளையும் களத்திலும் புலத்திலும் தேர்ந்தெடுத்து அவர்களை பயன்படுத்துவதன் ஊடாக இதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். கடந்த கடந்த சனாதிபதி தேர்தலின் போது எந்த வித பேரம் பேசலும் இல்லாமல் ஸ்ரீலங்கா தமிழர்களை பயன்படுத்தி சிங்கள பௌத்த மேலாண்மையை புதுப்பித்துக்கொண்டது , அரசியல் ரீதியாக தன்னை மீறி வெளி உலகில் எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது . சர்வதேசமும் தனது பூகோள புவிசார் நலன்களை அடைந்திருந்தது.

இன்றைய தமிழர் அரசியலில் அவர்கள் சார்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஸ்ரீலங்காவாலும் சர்வதேசத்தாலும் பயன்படுத்தப்பட்டுகொண்டே இருக்கிறார்கள். அதோடு இலக்கியவாதிகளையும் புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவோரையும் தேர்ந்தெடுத்து அவர்களை ஆயுத போராட்டத்துக்கு எதிராக எழுத வைத்து அதனை பரப்புரை செய்து ஆயுத போராட்ட நியாயப்பாடுகளை நீர்த்துப்போக செய்வதே அவர்களின் இலக்காக இருக்கிறது. அவர்கள் நடுநிலை வாதிகள் என்ற பெயரிலேயே இன்று களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் .

ஈழ விடுதலைப்போராட்டத்தில் உச்ச பட்ச பற்றும் , தியாகமும் அதிகம் வெளித்தெரிந்தது ஆயுத போராட்ட காலத்தில் தான் அதனை தலைமை தங்கியவர்கள் விடுதலைப்புலிகள் , ஆகவே அவர்களை பிழையானவர்கள் என்று நிறுவ முற்படுவதன் ஊடாக ஒட்டு மொத்த ஈழ விடுதலை ஆயுத போராட்டமும் பிழையானது என்று வரலாற்றை பதிவு செய்து பரப்புரை செய்வதே இவர்களின் வேலை.

ஒரு ஆறு ஓடும் போது ஆங்காங்கே ஒரு சில குப்பைகளும் சேர்ந்து ஓடும் , அதற்காக ஆறு ஓடவில்லை குப்பை ஓடுகிறது என்று சொல்ல முடியாது. இந்த இலக்கியவாதிகள் ஆறு ஓடவில்லை குப்பை ஓடுகிறது என்னும் முட்டாள் தனமான உண்மைக்கு புறம்பான முடிவை தீர்மானமாக வைத்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆயுத போராட்டத்தில் இராணுவ ரீதியில் தீர்மானங்கள் எடுக்கிற போது ஆங்காங்கே சில தவறுகள் இடம்பெற வாய்ப்புக்கள் இருந்திருக்கும் அந்த ஒரு சில தவறை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த ஆயுதப்போராட்டமே பிழையானது என்று நிறுவுவது ஒரு இனத்தின் விடுதலை போராட்டத்தை குழி தோண்டி புதைக்கும் படு பாதக செயலாகும் . இது அவர்கள் உண்மையில் நடு நிலை வாதிகளா அல்லது அவர்கள் யார் என்பதை தோலுரித்து காட்டுகிறது.

மற்றையது துண்டாடுதல் அதாவது தமிழர்களிடையே பல்வேறு கட்சிகளையும் , குழுக்களையும், அமைப்புக்களையும் உருவாக்கி எப்போதும் தம்மால் இலகுவாக கையாளக்கூடிய சக்தியாக வைத்திருப்பதே அவர்களின் நோக்காகும் . தீவிர , மற்றும் மித வாத போக்கு கொண்ட எல்லா இடங்களில் இருந்தும் நபர்களை தெரிவு செய்து தமது நலன்களை அடையும் பொருட்டு தமிழர் நலனை பலியாக்க முற்படுகின்றனர். இதற்காக பல மில்லியன் டொலர்களில் பேரங்கள் பேசப்பட்டு கொண்டு இருக்கின்றன , சில திட்டங்கள் நடைமுறைக்கும் வந்து விட்டது. சர்வதேச சக்திகளை பொறுத்த வரையில் இத்தீவில் கொழும்பை கையாள்வதற்கு தமிழர்கள் அவர்களுக்கு எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். காலத்துக்கு காலம் அதனை பல்வேறு வடிவங்களில் அமுல் படுத்தி வருகிறார்கள் . இன்று ஏற்பட்டிருக்கும் சூழலை வெளிச்சக்திகள் நன்கு பயன் படுத்தி மிகவும் ஆழமாக தமது செயற்பாடுகளை வேரூன்ற செய்து வருகின்றனர்.

மேற்குறித்த விடயங்கள் மேலோட்டமாக பார்ப்பதற்கு தமிழர்க்கு நன்மை பயப்பது போல் தோன்றலாம் அல்லது மிகச்சாதாரணமானதாக தோன்றலாம் ஆனால் கால ஓட்டத்தில் ஈழத்தில் தமிழரின் இருப்பை வேரறுக்க செய்ய கூடிய செயல்கள் என்பதை தமிழர்கள் ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும். இனியாவது தமிழர் தரப்பு தன்னை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் . ஒரு பிரமிட்டை போல தேசிய அரசியலை கீழிருந்து மேல் நோக்கி பலமானதாக கட்டி எழுப்ப வேண்டும் . அப்போது தான் வேகமாக விழுங்கி வரும் ஸ்ரீலங்காவில் இருந்து தமிழர் தம்மை காத்துக்கொள்ள முடியும்

(www.eelamalar.com)