மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது?

அழைத்தாலா வருவாய்
யார் யாரை அழைப்பது
அறியத் தருவாயா
ஊரூராய் பிணக்காடாய்
உன் உறவும் பிணமாக
போனதந்த நாளினிலே
எதுவும் கேட்காதே
புறப்பட்டு வாவென்று
சொல்ல வேண்டுமெனில்
வினாவொன்று இருக்கிறது
நீ தமிழனா!

வெற்றியிலே பங்கேற்று
வீரமுடன் வீறுகொண்டாய்
வீழ்ச்சியிலே யாரென்று
விலகி நிற்பதென்ன
காலத்தின் நகர்வுகளோ
காட்சிகளாய் விரிகிறது
அன்னை மண்ணிருந்து
அழகாய் வளர்ந்தவனே
உன்னை உருவாக்கி
உலகில் வாழவைத்த
அன்னை மண்பட்ட
அவலம் உரைப்பதற்கு
அழைப்பு உனக்கெதற்கு
அழைப்பு வேண்டுமெனில்
வினாவொன்று இருக்கிறது
நீ தமிழனா!
நீ தமிழனா
இல்லை
மனிதனா
மனிதமொன்று
உன்னுள்ளே
மக்காதிருக்கிறதா
மக்காதிருக்குமெனில்
மக்கள் துயருரைக்க
ஒன்றுகூடும் பலரிலே
நானும் ஒருவனென
நிற்கும் உறுதியுடன்
நாளைய தலைமுறைக்கு
நாடுகாணுமுறுதிகொண்டு
வரவேண்டும் திடலுக்கு
ஒற்றிணையும் கரங்களிலே
உன் கரங்கள் இணையட்டும்!

மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி