ராஜிவ்காந்தியின் சுயவாக்குமூலம்…!

யூன்மாதம் வந்துவிட்டது பிறகென்ன தொடங்கிவிடுவார்கள் நமது அறிவுசீவிகள், சாய்வுநாற்காலி சிரஞ்சீவிகள் எல்லோரும்…

ராஜிவ் அப்போது கொண்டுவந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த அழிவு வந்திருக்காது அது இது என்று….!
இந்த தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து பதிவதில் தமது மேலான பெயர்களும் வரலாற்றில் இருந்துவிட வேணுமென்ற பெரும் எத்தனத்தில் அவரவர் தத்தமது நிறைகளுக்கேற்ற தராசுகளில் இவற்றை எடைபோட்டு காரணங்களை எழுதி குவிக்கிறார்கள்.
பல்லாயிரம் காரணங்கள்.. மாட்டுக்கறி சாப்பிட்டதால்தான் தோற்றார்கள் என்பது முதல் பூகோளஅரசியல் வகுப்புகள் வரை இந்த காரணங்கள் நீளுகின்றன. எல்லா காரணங்களிலும் ஒரு காரணம் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கும்.

அதுதான் ராஜிவ் கொண்டுவந்த ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் இந்த அழிவு ஏற்பட்டிருக்காது..
இந்தியதேசத்தின் உள்நாட்டுஅமைச்சர், நிதிஅமைச்சர் போன்ற பெரும் பொறுப்புகளில் இருந்த ப.சிதம்பரம் முதல் புலிக்காய்ச்சல் புனைவு எழுத்தாளர்வரை கொட்டித்தீர்க்கும் காரணம் இதுவே.
ஏதோ ராஜிவ்காந்தி கொண்டுவந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு எல்லாவித நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்று என்பதுபோல இவர்கள் கதைப்பதற்கு அதே ராஜிவ்காந்தியின் ஒப்பந்தசரத்துகளின் ஓட்டைகளை நாம் காட்ட முடியும்.
அல்லது பலாலிக்கு தலைவர் பிரபாகரன் வரும்போது அவரை சுட்டுக்கொல்ல டெல்லியில் இருந்து வந்த உத்தரவை பற்றி வடபகுதி இந்தியதளபதி சொன்னதை மேற்கோள் காட்டி இந்த ஒப்பந்தத்தின் உள்நோக்கம் பற்றி சுலபமாக புரியவைக்கமுடியும்.
ஆனால் அது எல்லாவற்றையும்விட ஒப்பந்தத்தை தயாரித்து அதில் ஒப்பமிட்ட ராஜிவ்காந்தி 1990 ஓகஸ்ட்மாதம் 19ம்திகதி இந்தியா ‘சண்டே’இதழுக்கு கொடுத்த பேட்டியில்
1987 ல் ஏன் விடுதலைப்புலிகளுடன் இந்தியா யுத்தத்தில் ஈடுபட்டது என்ற கேள்விக்கு
‘ அது சிறீலங்காவின் இறையாண்மை ஒருமைப்பாடு என்பனவற்றை காப்பதற்காகவே இந்தியப்படை விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டது என்று கூறியுள்ளார்.
ஆக ஒப்பந்தம் தமிழர்களின் உரிமைக்காக அல்ல.. சிறீலங்காவின் இறையாண்மையை காக்கவே.

– ச.ச.முத்து-