லெப்.கேணல் ஜெரி………

“யூலியட் இந்தியா” என்று தான் இவரை அழைப்பார்களாம். வன்னிக்களமுனைகளில் பெரும்பாலான சண்டைகளில் பங்குபற்றியிருக்கிறார். பலருக்கு இவரை தெரியவாய்ப்பில்லை என்றே சொல்லலாம். கேணல் ஜெயம் (யூலியட் மைக்) விசேட வேவுப்படையணியினை பொறுப்பெடுக்கும் போது தலைவர் அவர்களால் ஜெரி அவர்களை இராணுவமுகாம்களின் நிலமை அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது இவரை றோமியோ 2 என்றே அழைப்பட்டிருக்கிறார்.

இவரைப்பற்றி நிறைய தகவல்களை எழுதமுடியாதுள்ளது. மிகச்சுருக்கமாக எழுதுகிறேன். நான் என்னுடைய நினைவு தெரிந்த நாளில் இவரிடம் இரண்டு தடவைகள் தான் கதைத்திருந்தேன். எனது அண்ணாவை பற்றி வேறு போராளிகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இவரது வீரச்சாவடைந்த பின்னரே இவரைப்பற்றி அறிந்துகொள்ளகூடியதாக இருந்தது. 
எதனையும் இலகுவாக கடந்து செல்லமுடியாது என்பது இவரது போரட்டபயணம் ஒரு மிகச்சிறந்த பாடமாகும்.
லெப்.கேணல் குணா அவர்களின் நட்புடன் ஆரம்பமாகிய இவரது போரட்ட வாழ்க்கை இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும் போது தலைவர் அவர்களோடு மணலாற்று காட்டிற்கு சென்றிருக்கிறார். (புகைப்படம் -01)

அந்தக்காலப்பகுதியில் எங்களுடைய வீடு போராளிகளிற்கான ஒரு காப்பரண் என்றே சொல்லலாம். இந்திய இராணுவம் துரத்திக்கொண்டு வரும் பொழுதெல்லாம் எங்கள் வீடும் அவர்களுக்கு ஒரு மறைவிடமாக பல தடவைகள் பயன்பட்டிருந்தன. 
“எங்களுக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ அவர்களுக்கு கட்டாயம் சாப்பாடு அம்மா சமைத்துக்கொடுப்பார்”. “வருகின்ற போராளிகள் எல்லாருக்கும் சாப்பாடு செய்து கொடுங்கோ” என்று குணா அண்ணா சொன்னத்திற்காகவே அம்மா சமைத்துக்கொடுப்பார்” குணா அண்ணாவின் சொல்லு அம்மாவிற்கு வேதவாக்காக இருக்கும். அடிக்கடி காலைவேளைகளில் தான் குணா அண்ணா வீட்டிற்கு வருவார். அவருக்காகவே பழஞ்சோறும் சம்பலும் தயாராக இருக்கும். அம்மா குழைச்சுகொடுக்க சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு தான் போவார். “இந்திய இராணுவ காலப்பகுதியில் போராளிகளையும் போராட்டத்தையும் எங்கள் குடும்பம் நம்பினதோ இல்லையோ எனக்கு தெரியவில்லை. வருகின்ற போராளிகள் அனைவரும் எங்கள் குடும்பத்தை நம்பினார்கள்.” ஒரு போராளி கூட இந்திய இராணுவத்திடம் அகப்படாமல் காப்பாற்றுவதில் அம்மா மிகவும் கஸ்ரப்பட்டிருக்கிறார். எத்தனையோ பேருக்கு சாப்பாடு கொடுத்து இராணுவப்பிடியிலிருந்து காப்பாற்றி அதன்பிற்பட்ட காலத்திலும் வீட்டிற்கு வருகின்ற போராளிகளை அரவணைச்சது எங்கள் குடும்பம் என்றே சொல்லலாம். கடைசியில் முள்ளிவாய்க்காலில் இறுதிநாளில் காயமடைந்த போராளிகள் “எங்களையும் கூட்டிப்போங்கோ இல்லாட்டி சாப்பாடாவது தந்திந்திட்டு போங்கோ” என்று கெஞ்சி கதறியபோது எல்லாரையும் கைவிட்டு வந்தது என்பது தான் நாங்கள் செய்த பச்சை துரோகம். நான்கு பேரையாவது எங்கள் குடும்பம் காப்பாற்றியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

ஜெரி அவர்கள், மணலாற்றில் இருந்து 1990 ஆம் ஆண்டு சாவகச்சேரிக்கு வந்திருந்த போது அடிக்கடி இவரைக் காணகூடியதாக இருக்கும். அப்பொழுது இவருக்கு கேணல் சொர்ணம் (பை பை) அவர்கள் தான் பொறுப்பாக இருந்தார். ஜெரி அவர்கள் இருந்த சைபர் படையணியின் செயற்பாடுகள் பற்றி நான் இதில் எழுதுவது என்பது கடினம். அது மிகவும் நீண்டது. கேணல் சொர்ணம் அவர்களோடு பேசும் போது நிறைய விடயங்களை சொல்லிருந்தார். முழுமையாக எழுதமுடியவில்லை.

ஆனையிறவு தாக்குதல், கட்டைக்காடு தாக்குதல், பூநகரி படைமுகாம் தாக்குதல், இடிமுழக்கம் நடவடிக்கை, சூரியகதிர் நடவடிக்கை என தொடர்ச்சியாக தனது அணிகளுடன் பங்குபற்றிய இவருக்கு மீண்டும் காட்டுச் சண்டைகளிற்காக திருகோணமலைக்கு கேணல் சொர்ணம் அவர்களோடு சென்றிருந்தார். அங்கும் பன்குளம் தாக்குதல், புல்மோட்டை மினி முகாம் தாக்குதல், மொறவேவ தாக்குதல் என தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பின்னர். 
மீண்டும் வன்னியில் கேணல் ஜெயம்(யூலியட் மைக்) விசேட வேவுபடையணியினை பொறுப்பெடுக்கும் போது தலைவர் அவர்களால் லெப்.கேணல் ஜெரி அவர்கள் றோமியோ 2 என்ற சங்கேதப்பெயருடன் நேரடி இராணுவ முகாம்களின் நிலமை அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதாவது படைமுகாம்களிற்கு உள்ளே சென்று வேவு நடவடிக்கைகளை அவதானித்து நேரடியாக உறுதிப்படுத்தி பின்னர் தாக்குதல் ஒத்திகை வரைக்கும் இவரது பணி நீண்டு செல்லும்.

கேணல் ஜெயம் என்ன சொல்கிறார்…என்றால்….. 
“றோமியோ 2” போராட்ட இலட்சியத்தில் ஊறிவளர்ந்தவன். அவன் மனதில் போராட்ட இலட்சியம் பற்றியதும் தனது கடமையயை செய்து முடிக்கவேண்டும் என்ற திடமான போர் வல்லமைகளை கற்றறிந்தவன். தனக்கென ஒரு வரைமுறைகளை ஏற்படுத்தி தன்னைப்போல் ஏனைய போராளிகளும் உழைக்கவேண்டும் என்ற சிந்தனையுடையவன். இவனின் செயற்பாடு சிலருக்கு பிடிப்பதில்லை. ஒரு இராணுவ வீரனிடம் இருக்கவேண்டிய அத்தனை செயற்பாடுகளும் இவனிடத்தில் காணலாம். எந்த நேரமும் இராணுவ சீருடையுடனே இவனை காணலாம். இவனின் முன்மாதிரியான செயற்பாடு தான் தலைவர் அவர்கள் முக்கிய பணியினை அவனுக்கு வழங்கியிருந்தார். இராணுவ முகாம்களிற்கு உள்ளேயும் நிதானமாக பதட்டமடையாமல் தனது அணிகளை வழிநடத்தி செல்லும் திறமை அனுபவமும் அவனிடத்தில் நிறையவே உண்டு.”

“ஜெயசிக்குறு எதிர்சமரினை மிகப்பெரிய சவாலாக எடுத்துக்கொண்ட நாங்கள். எதிரியின் முகாம்களை ஊடறுப்பு சமர்கள் ஊடாக தாக்கி அழிப்பதன் மூலம் இராணுவத்தின் முன்னேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்கு றோமியோ 2 வின் அணி தயாரானது. இந்தசந்தர்ப்பத்தில் தான் “றோமியோ 2 வின்” அணி உள்ளே இறங்கியது. வடகாட்டுப்புளியங்குளம், புளியங்கும் மத்தி, இளமருதங்குளம், சின்ன பூவரசங்குளம், குறிசுட்டகுளம் என “றோமியோ 2 வின்” அணி தொடர்ச்சியாக ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு தொல்லைகொடுக்கும் தாக்குதல்களை செய்திருந்தது.”

இத்தனை தாக்குதல்களையும் விட இன்னொரு பணி வான்வழிமூலமான விநியோக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தான் இதன் திட்டமாக இருந்தது.

“வவுனியா ஜோசப் இராணுவமுகாம் பகுதியினை அண்டிய பகுதி ஒன்றில் விநியோக நடடிவக்கைகளில் ஈடுபடும் உலங்குவானூர்தி மீதான தாக்குதலுக்கான வேவு நடவடிக்கைக்கு இவனது அணி தயாரானது. றோமியோ 2 வின் அணியானது முதற்கட்ட வேவுதரவுகளுடன் தளம் திரும்பிய நிலையில், இத்தாக்குதலுக்கான வேவுதரவுகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தலாமா? இல்லையா? என்பதற்கான சாதக நிலைகளை உறுதி செய்வதற்காக நேரடியாகவே லெப்.கேணல் ஜெரி (றோமியோ 2) இராணுவ முகாம் பகுதிக்கு உள்ளே சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் இராணுவத்தினரின் மின்சாரம் தாக்கி வீரச்சாவினை தழுவிக்கொண்டார்.”

“அவனது நல்லொழுக்கமும் இயக்க கட்டுப்பாடுகளை மதித்து நடக்கும் பண்பினை உடைய போராளி என்பதை விட நீண்டகால சண்டை அனுபவமும் சிறந்த வேவு அனுபவமும் உடையவன். எந்த வேலைகளையும் நிலமைக்குகேற்பவாறு முடிவெடுத்து செயலாற்றக்கூடிய இயக்க விசுவாசமானவன்” என்று கேணல் ஜெயம் அவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

நினைவுத் தடம்
“சுரேன் கார்த்தி”