வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதில் குழம்பத்தேவையில்லை!

வன்னிப்போரில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாளை தாயகப் பகுதிகளிலுள்ள மக்கள் அனுஷ்டிப்பதையிட்டு தெற்கிலுள்ள மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

சமஷ்டி தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கினால் அதனை வைத்துக்கொண்டு புலம்பெயர்ந்த பிரிவினைவாத சக்திகள் வேறுவிதங்களில் பயன்படுத்த இடமளிக்கக்கூடாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் சிரதமானப் பணிகள் நேற்றைய தினம் முதல் ஆரம்பமாகியிருக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நடவடிக்கைகள் ஓரளவு சுதந்திரமாக மேற்கொள்ளக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது.

இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியான அமரர் ரிச்சட் பத்திரணவின் புதல்வரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பத்திரண, மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பாக கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“உண்மையில் மாவீரர்களை நினைவுகூரும் விடயம் கடந்த வருடங்களில் சிறிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டிருக்கின்றோம். மாவீரர்களை நினைவுகூர்வதை விடவும் சில இடங்களில் தமிழீழ விடுதலபை் புலிகளின் உயிர்த்தியாகம் செய்த உறுப்பினர்களை அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவுகூர்ந்தார்கள். அதுகுறித்து நாங்கள் அவ்வளவாக குழப்பமடையத் தேவையில்லை. அரசியல் நிர்வாக மட்டத்தில் அவர்களுக்கு சமஷ்டி அதிகாரம் வழங்கப்பட்டால் அதனூடாக சாதாரண தமிழ் மக்களுக்கு அவசியம் இல்லாவிட்டாலும் சில புலம்பெயர்ந்த இனவாதக் குழுவினருக்கு அது சாதகமாக அமைந்துவிடும் என்பதே எனது கருத்தாகும்” என்றார்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டதோடு அரசியலில் ஈடுபடுவது தொடர்பாகவும் ஊடகவியலளார்கள் இதன்போது வினா தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண, முன்னாள் போராளிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொண்டதை வரவேற்று கருத்து வெளியிட்டார்.

“அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் இணைந்து கொண்டதை நாங்கள் வரவேற்கின்றோம். ஜே.வி.பி கலவரத்தின் பின்னர் அதன் உறுப்பினர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை சிறந்த சமிக்ஞை என்பது போல பல வருடங்களாக நாங்கள் கண்ட ஆயுதங்களை தூக்கிப் போராடியவர்கள் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டதை நாங்கள் நல்ல நேரம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இனவாத பிரிவினைவாதத்தை கைவிட்டு அரசியல் செய்வது சிறந்தது. தெற்கில் சிங்கள மக்களைப் போன்றே வடக்கில் தமிழ் மக்களும் இனவாதத்தை கைவிட்டு மத்தியஸ்த அரசியல் கட்சிகளாக செயற்பட்டால் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யவே விரும்புகின்றோம்” என்று தெரிவித்தார்.