வரலாற்றுவழியில் முதலாவதுவேட்டும் முடிவானபோரும்!…

வல்வெட்டித்துறையின் போராட்ட வாழ்வு!…. அத்தியாயம் -1

வரலாற்றுவழியில் முதலாவதுவேட்டும் முடிவானபோரும்!…

எழுத எழுத தொடர்ந்து செல்வதே வரலாறு. வரலாறுகள் மறைந்து போவதில்லை அவை மறந்து போகின்றன. சில வேளைகளில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. காலங்கள் சிலசம்பவங் களை பதிவு செய்கின்றன. அவைகளில் சிலவே பின்னர் சரித்திரங்களாகி விடுகின்றன. அதுபோலவே ஈழத்தமிழினத்தின் இன்றைய நிலையும் கால மாற்றத்தின்; கட்டளையானது.

1619ம் ஆண்டு யூன் 5ம் திகதி போர்த்துக்கேசருடன் யாழ்ப்பாணத்தின் மன்னனான சங்கிலிகுமாரன் நடத்திய மரபுப்போரில் மன்னன் தோல்வியுற்றான் அத்துடன் ஓய்வு பெற்ற எமது மரபுப்போரானது மீண்டும் எமது மண்ணில் சங்கிலியனின் தாய்வழி மரபில்வந்த தலைவர் பிரபாகரானால் 1991ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘ஆகாயம் கடல்வெளிச்சமர்’ என ஆரம்பித்து பின்னர் ‘ஜெயசிக்குரு’விற்கு எதிரான ‘செய் அல்லது செத்துமடி’ என விரிவு பெற்று வெற்றிகரமாக புலிப்பாய்ச்சலாக வேர்விட்டு அடங்காப்பற்றான வன்னி மண்ணை விடுதலை செய்ததுடன் ஓயாதஅலைகளாக ஆனையிறவையும் அடித்து தமிழீழ மண்ணை பெருமைப்படுத்தியபடி முழுவிடுதலையை நோக்கி தொடர்ந்தது.

இதோபோல் மன்னன் சங்கிலிகுமாரனின் களமுனைத் தளபதிகளில் முதன்மையானவனும் பின்நாட்களில் சரித்திர ஆராய்சியாளர்களினால் கரையாரத்தளபதி என அழைக்கப்பட்ட கரையோரத்தளபதி வருணகுலத் தானாகும். இவரால் எம்மை அடக்கிஆளவந்த அந்நியருக்கெதிராக (போத்துக் கேயர்) முதன் முதல் எமதுமண்ணில் 1619இல் ஆரம்பிக்கப்பட்ட போர்முறை கெரிலாத்தாக்குதல் ஆகும். இக்கரந்தடிமுறையிலான போர் 1621ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம்திகதி வல்வெட்டித்துறை யில் அவனது வீரமரணத்துடன் எம்மண்ணில் ஓய்விற்கு வந்தது. எனினும் இதே வருணகுலத்தானின் வழிவந்த எமது சமகாலத்தளபதியான கேணல்கிட்டுவினால் அதே அதிரடிப் போர் மீண்டும் சரியாக முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடராக யாழ்ப்பாணக் குடாநாட்டை அடிமை கொள்ளவந்த சிங்களப் படையினரை அவர்களின் முகாமிற்குள்ளையே சிறைவைத்து 1985ம் ஆண்டு ஏப்ரல் 10ம்திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணக் குடாநாடானது முழுமையாக பத்துவருடத்துக்கு மேல் 1995 ஒக்டோபர்வரை எமதுஅதிகாரத்து உட்பட்டிருந்தது வரலாறு.

இரண்டாவது மூன்றாவது ஈழப்போர் ஆரம்பமாகிய இந்த சித்திரை மாதத்திலே தமிழீழத்தில் சிங்கள இனவெறிப்படை யினருக்கு எதிராக பொது மக்களால் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலும் நடைபெற்றது ஈழத்தமிழர்களில் வாழ்வில் புதுவருடத்தின் பிறப்பாக மட்டுமல்லாமல் தமிழின விடுதலை ப்பேராட்டத்திற்கு முதன்முதல் புதுவழியைக்காட்டிய மாதமாகவும் இச்சித்திரை மாதமே திகழ்கிறது.

ஏறத்தாழ 350 வருடங்களுக்கு மேலாக போர்த்துக்கேசர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் சிங்களவர் எனும் நால்வகை அன்னியர்களினால் ஆளப்பட் எமது மண்ணில் சுதந்திரதாகம் மேலிட்டது எவ்வாறு? அன்னியனின் அடக்குமுறை எமது மண்ணில் பலபகுதிகளில் வேரேடுகளைந்து எறியப்பட்டது எவ்வாறு? மண்ணின்மைந்தர்களால் போர்க்களங்களில் மகத்தான சாதனை படைக்கப்பட்டதும் அவை உலகப்போரில் வல்லுனர்களினால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதும் எவ்வாறு? இவை எவ்வாறு நடந்தன? வரலாற்றின் கதவுகளைத்திறந்து திரும்பிப்பாhத்த போதுதான் உத்வேகத்தின் உயிரோ ட்டமும் சொந்த மண்ணின் சுதந்திரதாகமும் பொங்கிப்பிரவாகிக்க தொடங்கிய இடத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

1974ம் ஆண்டு தைத்திங்கள் 10ம் நாள் தமிழனின் மண்ணில் தமிழுக்கு விழா எடுக்க முடியாது அவலத்தில் முடிந்த தமிழா ராட்சி மாநாடு படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து பழிவாங்கஎழுந்த ‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு’ எனும் தியாகி சிவகுமாரனின் நினைவுகளையும் காலம் பதிவு செய்து வைத்துள்ளது. எமதுஇனத்திற்கு புத்தொளிஊட்டியவன் பொன். சிவகுமாரன் அவனின் போராட்டகாலத்தின் உச்சமான 1974ம் ஆண்டில் உத்வேகம்கொண்ட தமிழினஉரிமைப் போராட்டம் தமிழீழவிடுதலைப்போராட்ட மாக உருமாறி இன்றுவரை தொடர்கிறது. அவனின்குறியாகவும் தமிழரை அடக்கிவந்த காக்கிச்சட்டைகளின் அடையாளச்சின்னமாகவும் விளங்கிய வன் சந்திரசேகரா எனஅழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரதிப்பொலிஸ் அதிபராகும். இவனின் தலைமையிலேயே தமிழாராச்சி மகாநாட்டின் போது மக்கள்தாக்கி துரத்தப்பட்டனர். பெருமைமிகு தமிழரின் விழாவும் அலங்கோலப்பட்டு பொலி சாரின் துப்பாக்கிச்சூட்டினால் பத்து அப்பாவித்தமிழரும் உயிரி ழந்தனர். இந்தமண் எங்களின் சொந்தமண் இதன் எல்லை யைமீறி வந்தவன் எமது உரிமைகளிற்கு எல்லையிட வந்த போதுதான் தமிழாராட்சி மகாநாட்டுபடுகொலைகள் நடந்தன. போராட்டம் புதியபரிணாமம் பெற்று ‘புதியபுலிகள்’ களத்தில் காலூன்றினார்கள்.

தமிழாராய்சி மாநாட்டு சம்பவத்திற்கு ஏழுவருடங்களிற்கு முன்னர் தமிழீழமண்ணில் முதன்முறையாக வல்வெட்டித் துறையில் ஆயுதப்படையி னருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்ததுடன் ஆயுதத்தை ஆயுதத்தால் எதிர்கொண்டார்கள். வெறுமனே உணர்வுபூர்வமாக சொந்தமண்ணில் தமது நடமாட் டத்தையும் பொதுமக்களின் ஒன்றுகூடலையும் திட்டமிட்டு கலைக்க முயன்ற சிங்களப்படைகளின் காடைத்தனத்தை எதிர்கொண்ட மண்ணிலிருந்து பின்னாட்களில் ஆயுதப்போரா ட்டம் ஆரம்பமாகி அதுவேபின்னர் பெரும்பிளம்பாகி முழுமையாக தம்மை சுட்டெரிக்குமென அன்றைய சிங்கள ஆட்சியா ளரோ அல்லது அவர்களின் அடிவருடிகளோ ஏன் ஆயுதப்படைகளோ கூட எள்ளளவும் எண்ணவும் இல்லை!…. எதிர்கொள்ள தயாராகவும்; இல்லை!…. நாலுதசாப்த்தங்கள் கடந்தும் அதற்கான விலையை இன்றுவரையும் சிங்கள அரசு வழங்கிவருவது தொடர்கதையாகின்றது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே எமது உரிமைப் போராட்டத்தில் விளைந்த ஈழத்தேசியம் தென்னாசியபிராந்தியத்தை கடந்து சர்வதேசம்வரை வியாபித்துக் கொண்டது. ஒருசமூகத்தின் உயிர்நாடியான வாழ்கைப் போராட்டம் அதில் பொதுமக்களுடன் பொலிசாருக்கு ஏற்பட்டிருந்த உரசல்.அதனால்உருவாகிய மோதல் அதில்விளைந்த தீப்பொறியே பின்னைய நாட்களில் ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு உந்துசக்தியாகி ஈழத் தமிழரின் விடுதலைப்போராட்டமாக பெருந்தீப்பற்றி எரிந்;தது.

தமிழீழத்தின் ஆயுதப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திய தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை உருவாக் கிய காரணிகள் என்ன? சுதந்திரஇலங்கையில் தொடர்ந்துவந்த சிங்களஅரசுகள் உருவாக்கிய தமிழர் விரோத சட்டங்கள் மட்டுமா? சட்டங்கள் மனிதனை கட்டுப்படுத்த மனிதர் களால் உருவாக்கப்பட்டவை. ஆனால் ஒருமனிதனை உருவாக்குவது அவனது பரம்பரை அலகுகளும் அவனது சமூகப்பின்புலமே என்பது வரலாறு மற்றும் சமூகஆய்வாளர்களின் ஒட்டு மொத்தமான கருத்தாகும். இவ்வகையில் பிரபாகரனது சமூகப்பின்புலம் என்ன? அங்கு என்ன நடந்தது? எப்படி? அத் தீப்பொறி கிளம்பியது? எவ்வாறு அது தீப்பிளம்பாகியது? எல்லோரையும் எப்போதும் வியக்கவைக்கும் கேள்வியது?……

‘வல்வெட்டித்துறை’ என்றும் உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பி வைத்திருக்கும் புலிகளின் பிறப்பிடம். தமிழீழ விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிக்கொண்ட புண்ணியபூமி. கிறிஸ்துவிற்கு ஒரு நூற்றாண்டுக்குமுன்பிருந்த சுதேசநாகர்களும் சோழவளநாட்டின் வடபகுதியானதொண்டை மண்ட லத்தில் இருந்து குடியேறிய தேவர்குலமக்களும் கலந்து வாழும் வளம் கொண்டமண். ஆண்ட அவர்களது பூமி. யாழப்பாணஅரசினை போத்துக்கேயரிடம் பறிகொடுக்காது போராடிய மன்னன் முதலாம் சங்கிலி யையும்(7ம் செகராச சேகரன்) களத்திலே எமது இறமையை பறிகொடுத்தபின்னரும் இடைவிடாது உயிரிருக்கும்வரை போராடிய கரையாரத்தளபதி வருணகுலத்தானினையும் தாலாட்டிய தொட்டிலது. வங்கக் கடலின் தழுவலினால் என்றுமே கிளர்ச்சி கொண்டு தலை நிமிர்த்தும் மண். அலைதாண்டிக் கடலோடும் கடலோடிகளின் காலடிபட்டு எப்பொழுதும் சிலிர்த்துநிற்கும் மண்ணது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத கடல்போல அம்மண்ணின் மக்களும் தம்மையாரும் கட்டுப்படுத்துவதை மறுத்தார்கள் அதேபோல் தாமும் மற்றவர்களை கட்டுப்படுத்துவதை வெறுத்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில்மட்டுமல்ல அதற்கு முன்னரும்கூட அவர்களின் சுதந்திரத்தில் யாரும் கை வைக்கவும் இல்லை அவ்வாறு கை வைக்கமுயன்றபோது வல்வெட்டித்துறை மக்கள் கைகட்டிக் கொண்டு வாழாவிருந் ததும் இல்லை.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் அஸ்தமித்துப்போனது ஆங்கிலேயரின் உலகளாவிய காலனித்துவ ஆட்சி. அதனால் அங்காங்கே மறைந்துபோனது சூரியமறையாத அவர்களின் காட்சி. வெறுமனே பிரிட்ட னுக்குள் சுருங்கிப்போனது அவர்களது ஆட்சி. இதனால் தென்னாசியாவில் மட்டுமன்றி தென்கிழக்கு மற்றும் தூரகிழக்கு ஆசியநாடுகளிலும் கடல்கள் எல்லை யிடப்பட்டு இந்தியா இலங்கை மலேசியா யாவா சுமத்திரா என பலநாடுகளும் சுதந்திரம் அடைந்தபோது வல்வைக்கடலோடிகளின் கால்களும் கட்டப்படத் தொடங்கின. ‘யாதும் ஊரே யாபேரும் கேளிர்’ என வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்காவின் பொஸ்டன்;(BOSTON) நகரம்வரை பாய்விரித்து படகோட்டியவர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லை யிடப்பட்ட கடலில் எதிர்நீச்சலிட்டார்கள். இவர்களின் கடல்கடக்கும் மகத்தான சேவையின் மகத்துவம் அறிந்த அன்றையஆட்சியாளர் பலரும் இவர்களின் தேவையறிந்து தமது ஓரக்கண் பார்வையில் இவர்களை வைத்திருந்தனர். இக்காலத்தில்தான் வல்வெட்டித்துறை பொலிஸ்நிலைய அதிபராக வந்துசேர்ந்தான் ‘பத்திரானா’ காக்கிச்சட்டையுடன் சிங்களஇனவெறியும் சேர்த்தே அவனுக்கு ஊட்டப்பட்டு இருந்தது. அதனால்போலும் அந்த புண்ணியபூமியின் மக்கள் அனைவரும் கள்ளத்தோணி களாகவும் கள்ளக்கடத்தல் க்காரர்களாகவும் அவனது கண்களிற்கு தெரிந்தது. விளைவு கண்ணில்க்கண்ட அம்மண்ணின் மைந்தர்களை தாக்கியதுடன் நில்லாமல் பெண்களையும் தாக்கத்தொடங்கினான். அவனின் அடாவடித்தனங்களை சகிக்கமுடியாதமக்கள் மேலதிகாரி களிடம் முறையிட்டபோதும் எதுவும் பலனளிக்கவில்லை.

1967ம் ஆண்டு சித்திரைமாதம் 8ந்திகதி சனிக்கிழமை வரப்போகும் புதுவருடப்பிறப்பிற்கு வல்வெட்டித் துறைமண் தயாராகிக்கொண்டிருந்தது.அதேநேரம் எமதுகுலதெய்வமான அருள்மிகு முத்துமாரியம்மனின் பக்திபூர்வமான பதினைந்து நாள் இரவும்பகலுமான உற்சவநாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்திரவிழாவும் நெருங்கிக் கொண்டிரு ந்தன. ஆனாலும் இனவெறியன் பத்திரானாவும் அவனிற்கு அடங்கிய சிற்றதிகாரிகளாக மட்டுமன்றி அடியாட்கள்போல் விளங்கிய எடுபிடித்தமிழன் ‘பனையன்’ இராஜரத்தினம் மற்றும் சிங்களவெறியனான திசநாயக்கா உட்பட ஏனைய பொலிசாரின் அடாவடித் தனங்களினால் குறிப்பிட்ட திருவிழா நாட்களும் வல்வெட்டித்துறை மக்களின் இயல்புவாழ்கையும் கேள்விக்குறியாகியகியது.

எனினும் வெட்டவெட்டதளைக்கும் வல்வெட்டித்துறை மக்கள் தமது நிலையினை அதாவது பொலிசாரின் அடாவடித்தனங்களை மேலும் சகித்துக் கொண்டு அடங்கிஇருப்பதா அல்லது அதனை நிறுத்த என்ன செய்யலாம்? என பொதுமக்களின் கருத்தினை அறிந்து செயற்படமுனைந் தனர். பொது மக்களின் வாசிகசாலையாக பட்டினத்தின் மத்தியில் விளங்கிய சனசமூக சேவாநிலையத்தின் முன்ற லில் அன்றைய சனசமூகசேவா நிலையத்தின் தலைவராக விளங்கிய திருவாளர் சண்முகம்பிள்ளை ஞானமூர்த்தி அப்பாவின் தலைமயில் இயங்கிய நிர்வாகசபையினரால்

‘தொடரும் பொலிஸ் இராணுவ அட்டூழியங்களை நிறுத்துவதற்கான பொது மக்களிற்கான ஆலோசனைக்கூட்டம்’

என பொதுமக்களிற்கான அறிவித்தல் கொடுக்கப்பட்டு மாலை மயங்கியதும் பொதுக்கூட்டம் ஆரம்பமாகியது. ஊரில் வாழும் ஆண்களில் கணிசமான பகுதியினர் அக்கூட்டத்தில் சமூகம் அளித்தி ருந்தனர். எனினும் போக்குவரத்திற்கு தடங்க லின்றி மக்கள் உள்ளே போகவும் வரவும் வழிவிட்டு அடைக்கப் பட்ட வாசிகசாலை முன்றலிற்கு உள்ளேயே கூடியிருந்தனர். ஒரு சிலர் மைதானத்தை சுற்றிய வீதியோரங்களில் ஆங்காங் கே நின்று கூட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் பலவிதகருத்து க்களும் பகிரப்பட்டுக்கொண்டிருந்தன.

மேற்படி பொதுக்கூட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக் கையில் ஊரின் இன்னோர்புறத்தே முத்து மாரியம்மனின் திருவிழாவிற்கு கட்டியம்கூறும் காத்தவராயரின் ஊர்வலமும் நடந்து கொண்டிருந்தது. இதனால் கூட்டத்திற்கு சமூகமளிக் காதோர் மங்கலவிளக்குகளுடன் வீட்டுவாசல்களில் காத்த வராயரின் வருகைக்காக காத்திருந்தனர். இவ்வாறு வல்வை யின்மைந்தர்கள் அனைவரும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஓர்புறம் ஒதுக்கி வைத்துவிட்டு தெய்வ சிந்தனையுடனும் சமூகசிந்தனையுடனும்ஒன்றிப் போயிருந்த னர். இந்நிலையில் சிங்களஅராஜகப் படைகளான இராணுவத் தினர் மூன்று ஜீப்புகளிலும் பத்திரானாவின் தலைமயில் பொலிசார் இன்னொரு ஜீப்பிலுமாக கூட்டம் நடந்துகொண்டி ருந்த வாசிகசாலை மைதானத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர். எவ்விதமுன்னறிவித்தலுமின்றி படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட மக்கள் என்ன? ஏது? என தம்மை சுதாகரிப்பதற்குள் படைகளின் குண்டாந்தடித்தாக்கு தலுக்கு இலக்காகினர். மைதானத்தின் மூன்றுவாசல்களையும் வாசிகசாலையின் வடக்குப் புறவாசலையும் மக்கள் தப்பித்து செல்லாதவாறு தடைசெய்தபடி படையினர் தமது தாக்குதலை தொடங்கியிருந்தனர்.

1956இல் காலிமுக சத்தியாக்கிரகத்திலும் 1958இன்இனக்கலவர நேரத்திலும் அப்பாவித்தமிழ் மக்கள் இனவெறிகொண்டசிங்கள க்காடையர் களின் தாக்குதலுக்கு உள்ளாகினர். பலநூற்றுக் கணக்கானோர் தமது உயிர்களையும் இழந்தனர். 1961இல் யாழப்பாணத்தில் சிங்களஸ்ரீக்கெதிரான சத்தியாக்கிரக போராட் டத்தினை படையினர் குண்டாந்தடி கொண்டு விரட்டியடித்த போதும் யாரும் திருப்பித்தாக்கவில்லை. ‘ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு’ எனும் யேசுநாதரின் போதனையில் வளர்ந்த செல்வ நாயகத்தின் வழிகாட்டலினால் போலும் எல்லோரும் ஒடுங்கியிருந்தனர். யாரும் எந்தநிலை யிலும் அடிபட்டவர்கள்கூட அடித்தவர்களை திருப்பித் தாக்க வில்லை.

பத்திரானாவும் அவனுடன் வந்த ஏனைய படைகளும்கூட ‘குட்டக்குட்ட குனிபவன் தமிழனே’ எனும் சாதாரண சிங்கள மக்களின் கருத்தினையே கொண்டிருந்தனர் போலும். அதனா ல்த் தான் தமது காடைத்தனமான தாக்குதல்களை வல்வெட்டி த்துறை மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்டனர். உயிராபத்தை துச்சமாக மதிக்கும் கடலோடி வம்சத்தில் வந்த அம்மக்களும் எதிர்பாராத அத்தாக்குதல்களிற்கு புறமுதுகுகாட்டாமல் முகம்கொடுத்தனர். எனினும் பத்தி ரானாவினதும் படைகளி னதும் தாக்குதல் அதிகரிக்கவே மக்களும் திருப்பி த்தாக்கத் தொடங்கினர்;. சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் தப்பிச் செல்வதற்கு வேறுவழியின்றி தம்மை பாதுகாப்பதற்கான இறுதிவழியாகவே அத்தடுப்புத் தாக்குதல் காணப்பட்டது. சத்தரியதர்மம் வல்வெட்டித்துறைச்சந்தியில் அன்று மீண்டும் உயிர்ப்புக்கொண்;டது. அடிபட்டபுலியாக வல்வெட்டித்துறை மக்களின் ஆக்ரோசமான பதில்த்தாக்குதலினால் நிலை குலைந்த படையினரும் மக்களும் ஒருவரோடு ஒருவர் கலந்தனர். படையினரின் குண்டாந்தடி தாக்குதலிற் குப்பதிலாக ஆரம்பத்தில் நிராயுதபாணியாக நின்றமக்களும் தமதுகையில் அகப்பட்ட போத்தல் தடி கம்பு என்பவற்றுடன் வெற்றிகரமாக தொடர்ந்;து தாக்கினார்கள்.

புறநாநூறு புளங்காகிதமடைய இரண்டாயிரம் ஆண்டுகளாக அலைக் கரங்களின் தழுவல்களினால் அமைதியாக உறங்கிக் கிடந்த வல்வெட்டித் துறை மண்ணில் புதியபோர்க்களம் ஒன்று அன்றுதிறக்கப்பட்டது. தனித் தனியாக மக்கள்கூட்டத்தினை குண்டாந்தடி கொண்டு தாக்கியபடையினர் வெருண்டோடி குழுக்களாக சேர்ந்துகொண்டனர். அதேபோல் நட்டநடுச் சந்தியில் வெட்டவெளியில் வெறும் கைகளுடன் மோத வாரம்பித்த மக்களும் பாதுகாப்பிடம்தேடி பதுங்கிக் கொண்டே கற்களினாலும் போத்தல்களினாலும் தொடர்ந்து தாக்கினார்கள். சிலர் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக சனசமூக நிலையத் திற்குள் பின்வாங்கினர். காயம்பட்டவர்கள் கைமுறிந்த வர்கள் கால் உடைந்தவர்கள் தலைபிளந்தவர்கள் என இருபறமும் இரத்தம் வழிந்தோடியது. பூனை என பதுங்குவார்கள் என எதிர்பார்த்தமக்கள் புலியாகமாறி பழிவாங்க பாய்ந்தபோது விழிபிதுங்கிய படையினர் வெருண் டோடத் தலைப்பட்டனர். தம்மை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கிகளின் துணையை நாடினர். துப்பாக்கியினால் குறிவைத்தபொலிசாரை சோடாப் போத்தலினால் அடித்து விழுத்திய அதிசயங்களும் அப்போது அங்கு நடந்தேறின. குறிப்பாக சந்தியின் வடகிழக்கில் அமைந்திருந்த மூலைக் கல்லின் பின்னால் பதுங்கியிருந்து கிழக்குவீதியினை குறிவைத்து சுட்டுக் கொண்டிருந்த பொலிஸ்காரனின் வேட்டுக்களிடையே அவனருகில் சென்று அவனை போத்தலினால் அடித்து வீழ்த்திய இறங்க நாதனின்(கிளிக்கை) சாதுரியம் என்றும் மறக்க முடியாதது. தாக்கப்பட்ட மக்கள் திருப்பிதாக்கவும் மோதல் எதிர்மறை யானது. எதையும் செய்யமுடியாத சிங்கள இராணுவ த்தினரோ தாம் ஏறிவந்த ஜீப் பொன்றையும் கைவிட்டுவிட்டு களத்தினை விட்டு ஓடிமறைந்தனர். இலங்கை இராணுவம் முதன்முறை யாக பின்வாங்கி ஓடியவரலாறு 1967ஏப்ரல் 8ந்திகதி சனிக் கிழமை இரவு வல்வெட்டித்துறை மண்ணில் ஆரம்பமாகியது. நாலாபுறமிருந்தும் பறந்துவரும் போத்தல்களையும் கற்களையும் எதிர் கொள்ளமுடியாத பத்திரானாவின் தலைமையில் வந்த பொலிசார் சனசமூக சேவாநிலையத் திற்குள் ஓடிஒளிந்து கொண்டனர். சந்தியிலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு தப்பியோடமுடியாத நிலையில் அவர்கள் இடையிடையே வெளியேவந்து சகட்டுமேனிக்கு சுட ஆரம்பித்தனர்.

இறுதியில் வல்வெட்டித்துறை சந்தியின் நடுநாயகமாக யாழ்ப்பாண வீதியோரம் நின்ற அரசமரத்தின்கீழ் இராமசாமி ப்பிள்ளை சிவஞானசுந்தரம் என அழைக்கப்படும் ‘ஞானம்’ திசநாயக்கா என்ற பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியாகி விழுகின்றார். தனது வியாபாரக்கடமைகளை முடித்துவிட்டு யாழ்ப்பாணவீதியால் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவரை வானைவிட்டு இறங்கி முன்னால் நடந்து வரக்கூறிய பத்திரானா சூட் என கட்டளையிட திசநாயக்கா என்னும்வெறியன் ஞானத்தை சுட்டு வீழ்த்தினான்.

வடஇலங்கை பல்பொருள் விற்பனைநிலையம் என்னும் நிறுவனத்தின் பங்குதாரராகவும் முகாமை யாளராகவும் விளங்கிய சிவஞானசுந்தரம் 13மார்கழி1938 இல் பிறந்திரு ந்தார். இவர் பத்திரானாவின் நண்பராக விளங்கியவர். மேற் குறிப்பிட்ட சம்பவம் நடந்த அன்றைய நாட்காலையிலும் பத்திரானாவின் காசோலை ஒன்றை இவர் பணமாக மாற்றிக்கொடுத்திருந்தார். இவ்வாறு பத்திரானாவிற்கு நன்கு பரிட்சியமான இவர் வந்தவழியில் அங்காங்கே கூடி நின்றமக்கள் மோதலின் தீவிரத்தன்மையை கூறி அவ்வழியால் போக வேண்டாம் என இவரைத் தடுத்தபோதும் பத்திரானாவின் நட்பில் நம்பிக்கை வைத்து நடந்த அப்பாவியான சிவஞானசுந்தரம் பத்திரானாவினால் கொல்லப்பட்டார்.

எதிர்பாராதமோதல் போத்தலும் கற்களும் துப்பாக்கிகளின் முன்னால் எம்மாத்திரம். கிழக்கே பருத்தித்துறைவீதியில் விநாயகசுந்தரம் இறங்கநாதனும் மேற்கே காங்கேசன்துறைவீதியில் தளையசிங்கம் பாலசுப்பிரமணி யமும் வடக்கே கடற்கரைவீதியில் சோமசுந்தரம் அருச்சுனராசா தெற்கே யாழ்வீதியில் இராமசாமிப்பிள்ளை சிவஞானசுந்தரம் என மேலும் பலர் நாலாதிசைகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களிற்கு உள்ளாகியிருந்தார்கள். இவர்களில் படுகாயமடைந்தவர்கள் போக சிவஞானசுந்தரம் தனது உயிரை இழந்திருந்தார். சந்தியின் மையத்தில் ஆறுமுகம் சேதுநாராயணசாமி உட்பட மேலும் பலர் ஓடித்தப்பமுடியாத காயங்களுடன் விழுந்துகிடக்கின்றனர்.

காத்தவராயரின் வருகைக்கான வெடியோசையோ என மக்கள் திகைத்து நிற்க தமிழினஒழிப்பில் உயிர்த்த சிங்களஅராஜகத்தின் துப்பாக்கி வெடியோசைகள் வானைப்பிழந்து கொண்டிருந்தன.

அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் புலியினை சீண்டுகின்றோம் எனப்புரியாமல் சிங்களத்தின் துப்பாக்கிகள் குண்டுகளை சீறிஉமிழ்ந்தன. சனசமூகநிலையத்தின் இருபுறவாசல் வழியாகவும் இடையி டையே வெளியே வந்து எட்டிப்பார்க்கும் பத்திரானாவின் கட்டளைக்கேற்ப இராஜரட்ணம் திசநாயக்கா மற்றும் பொலிசாரின் கைகளிலிருந்து துப்பாக்கிச்சூடுகள் மக்களைநோக்கி நாற்புறமும் பறந்து கொண்டிருந்தன. நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

இப்போது பத்திரானா வாசிகசாலையின் வடக்குவாசல் வழியாக மீண்டும் மேற்காக காங்கேசன்துறை வீதியை எட்டிப்பார்த்தார். துணைக்கு பனையன் இராஜரட்ணமும். சிலநிமிடங்களிற்கு முன்பாகபாலசுப்பிர மணியத்தை குறிவைத்து தாக்கியதுபோல் மீண்டும் மனிதரை வேட்டையாடும் கண் கொத்திப்பார்வை. இரையைத்தேடிய அவனதுபார்வையில் வீதியின் வடக்குப் புறமாக சிலபத்தடிதூரத்தில் யாரே அசைவது போன்றபிரமை இராஜரெட்ணத்தை அழைத்து குறியைக்காட்டினார். இராஜரெட்ணம் பார்வையால் அப்பகுதியை துளாவியபோதே இவர்களை நோக்கிய டுமீல் என்ற ஒற்றைச் சத்தம் காதைக்கிழித்து முந்தியது.

சிங்களப்படைகளிற்கு எதிரானதும் அவர்களை குறிவைத்ததுமான ஈழத்தமிழர்களின் இரண்டாவது வேட்டுச்சத்தம் அதுதான்’. (1949 செப்டெம்பரில் வல்வெட்டித்துறையின் துறைமுகப்பகுதியான ரேவடியில் இராஜன்கதிர்காமரின் தலைமயில் வந்த கடற்படையினர் ‘கடல்காத்த’ சேவரெத்தினாவால் இரட்டைக் குழல் துப்பாக்கியால் குறிவைத்து தாக்கப்பட்டிருந்தனர். இவர் குட்டிமணியின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது)

பத்திரானாவும் இராஜரெட்னமும் வாசிகசாலைக்குள் திரும்பி ஓடமுயன்றனர். ஆனால் அவர்கள் ஓடியவேகத்தை விட துப்பாக்கிக்குண்டின் வேகம் மிகமிக அதிகமானது. இடியைத் தொடர்ந்து வரும்மழை போல டுமீல் என்ற சத்தத்தை தொடர்ந்து அங்காங்கே ஈயக்குண்டுகள் தெறித்துப்பறந்தன. சந்தியின் மத்தியில் நின்ற அரசமரம் தென்கிழக்குத்திசையில் அமைந்திருந்த கலாநிதி ஸ்ரோர் சிவராசா தேனீர்ச்சாலை ஒட்டப்பாகடை மற்றும் இவை களுடன் இணைந்திருந்த கதவுகள் சுவர்களில் எல்லாம் ஈயக்குண்டுகள் தாக்கித்துளைத்தன. இவ்வடுக்கள் அடையாளம் காணக்கூடியவாறு சில வருடங்களின் பின்பும் காணப்பட்டன.

அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும்; புலியினை சீண்டுகின்றோம் எனப்புரியாமல் அரசபடை கள் துப்பாக்கிகளை உயர்த்தியதைத்தொடர்ந்து ஆயுதத்தை ஆயுதத்தால்அறுக்கும் பெருமைக்குரிய அந்த முதலாவதுவேட்டு வல்வெட்டித்துறை ‘மண்ணின்மைந்தனான’ செல்லையா காஞ்சிமாவடிவேலின் கரத்தி லிருந்து புறப்பட்டிருந்தது. புறா வேட்டையாடும் 12.04இரக வேட்டைத்துப்பாக்கியில் இருந்தே அது வெளிக்கிளம்பியது. புலிக்கொடியின் ஆணையின்கீழ் நந்திக்கொடியோடு ஆண்ட வல்லியத்தேவனால் வரைந்தெடுக்கப்பட்டது வல்வெட்டித்துறை மண். அது அடங்காத்தளபதி வருணகுலத்தானால் வழிகா ட்டிச் செல்லப்பட்டது அதனால் தான் பலகாக்கிச்சட்டை துப்பாக்கிகளின் முன் தனியொருதுப்பாக்கி அஞ்சாது முழங்கியது. மரபுப்போர் போல் அரைமணி நேரத்திற்கு மேலாக நேரடிமோதல்.