வழிகாட்டும் தலைவன் வரலாறு…

fotor0101519412980களின் ஆரம்ப வருடங்களில் ஒன்று…இனிமேல் எந்தவொரு வங்கிமீதோ வங்கிப்பணம் மீதோ இயக்கதேவைக்காக தாக்குதல் நடாத்துவதில்லை என்று தேசியதலைவர் முடிவெடுத்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. (அதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட புத்தூர் வங்கி, திருநெல்வேலி வங்கி மீதான நடவடிக்கைகள் தந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக)

போராளிகளே சிறுசிறு தொழில்களை, செய்து கொண்டே போராட்டநடவடிக்கையிலும் ஈடுபடல் வேணும் என்ற தலைவரின் கடடளைக்கு இணங்க ஒரு மீன்பிடிபடகும், இரண்டு சிறு கோழிவளர்ப்பு பண்ணைகளும்,மேலும் இரண்டு விவசாயபண்ணைகளும் (ஒன்றில் உழுந்து மற்றையதில் நெல்) என்று அவற்றின் ஊடாக வந்த வருமானங்களே அன்றாட செலவுகளுக்கும் வேறு போராட்ட முன்னெடுப்புகளுக்கும் என்று இருந்த பொழுது அது.மிகவும் சிரமமான நேரமது.

அமைப்பின் நிதி பொறுப்பாளன் பண்டிதர் வருகின்ற வருமானத்தை மிக சிக்கனமாக செலவு செய்து கொண்டிருந்தான்.எல்லோருக்குமான தினசரி உணவுக்கான கொடுப்பனவு அப்போது நாள் ஒன்றுக்கு பத்துரூபா…அதுகூட சில பொழுதில் கிடைப்பதில்லை… தலைவர் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார்.விடுதலைப்போராட்டத்தை வீச்சாக்கி எழுச்சி கொள்ள வைக்கும் பல திட்டங்களுடன்.ஆனால் நிதி ஒரு பற்றாக்குறையாகவே இருந்தது.ஒருநாள் தலைவருடன் இளவாலை வீட்டில் லிங்கம்.

அருணா,கிட்டு,நான் நின்றிருந்தபோது மதிய உணவுக்கு ஏதுமே இல்லாத போது பக்கத்து காணியில் விழுந்து கிடந்த தேங்காயை எடுத்து வந்து திருவி நாம் இருந்த வீட்டின் முகப்பில் நின்றிருந்த மரத்தில் விலும்பிகாய் ஆய்ந்து தலைவரே ஒரு சொதி செய்து வெறும் சோற்றுடன் சாப்பிட்ட உதாரணங்களும் அப்போது அடிக்கடி நடந்துவந்தது..அந்த நேரத்தில் எம்முடன் சிறு வியாபாரி ஒருவர் தொடர்பில் இருந்தார்.

பண்டிதர்,சீலன்,சங்கர்,லாலா,கிட்டு ஆகியோர் அவருடன் ஓரளவு வெளிப்படையான சில தொடர்புகளை பேணி வந்தனர்.எமக்கு ஆதரவானவர் அவர் . தலைவரை அவர் அப்போது சந்தித்திருக்கவில்லை. .. ஆனால் அவர் எமக்கு ஒரு லட்சம்ரூபா நிதிஉதவியாக தருவதாக சொல்லி உறுதி தந்தார்.தலைவருக்கு இதனை சொன்னபோது, முதல் இரண்டுநாட்களும் சீலன் கிட்டு மூலம் அந்த வியாபாரி பற்றி எல்லா பின்னணி தகவல்களும் எடுத்து ஆய்ந்த பின்னர் அவரிடம் நிதிஉதவி பெற ஒப்புதல் தந்தார்.

முதன்முதலில் அமைப்புக்கு அவ்வளவு தொகை ஒரு தனிமனிதர் தரப்போகிறார்.அதனை வாங்குவதற்கு தலைவரும் வந்தால்தான் ஒரு நம்பிக்கை உருவாகும் என்று மிகவும் சொல்லி தலைவரையும் சம்மதிக்க வைத்தோம்.கிட்டு,ரகு,பண்டிதர்,சீலன் போன்றோரும் தலைவரும் அந்த வியாபாரியிடம் போவற்காக புறப்பட்ட வேளையில் கிட்டு தலைவரிடம் “அண்ணை முதன்முதலில் ஒருத்தன் ஒரு லட்சம் தரப்போறான். வாங்க போகும்போது கொஞ்சம் தலையை வடிவாக இழுத்து வாங்கோ. சாரத்தோடை போறது சரியில்லை.. ட்றவுசர் போட்டு வாங்கோ” என்று சொன்னான்.அதற்கு தலைவர் சொன்னார் ‘ நான் விடுதலைக்காக கெரில்லா முறையில் போராடும் அமைப்பின் உறுப்பினன்.

நான் வழமையா எங்கடை மக்களிட்டை எப்படி போவேனோ அப்பிடி தான் இங்கையும் வருவேன்.இப்பிடித்தான் வருவேன்.. ஏன் நடிக்கவேணும்’ என்று கேட்டார்.வெறுமனே ஒரு சம்பவமும் ஒரு உரையாடலும் என்று இருந்தாலும் இதற்குள்ளாக ஒரு பெரும் விடயம் புலனாகிறது.ஒரு விடுதலைக்கான அமைப்புக்கு போராட்டத்தை நடாத்துவதற்கு நிதி மிக முக்கியமானது.ஆனால் நிதிக்காக ஒரு அமைப்பு நடிக்க வெளிக்கிட ஏலாது என்பதையே தலைவர் மிக இயல்பாக தன்னுடைய மொழியில் சொன்னார்.

இந்த பணக்காரர்களை எவ்விதம் கையாளுவது என்பதில் இந்த தத்துவமே மிக முக்கியமானதாக இருந்தது..முன்னர் எமக்கு ஒரு லட்சம் தந்த அதே பணக்காரர் பின்பொரு நாளில் ஒரு குற்றம் இழைத்தபோது அமைப்பின் விசாரணைக்குள் வந்து தண்டனையும் வழங்கப்பெற்றார். இதுமட்டுமல்லாமல் கேணல் சாள்ஸை பற்றிய “சொன்னால் முடியாத சரித்திரமாக என்னால் முடியும் ” என்ற நினைவு குறிப்பில் தளபதி பொட்டு கூட இந்த முதலாளி பற்றி சொல்லி இருக்கிறார்.ஒரு செல்வம் படைத்தவன் நிதி தருகிறான் என்பதற்காக அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒரு விடுதலை அமைப்பு இழுபடமுடியாது..

முதலாளிகள் அல்லது செல்வம் படைத்தவர்கள் இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய வகி பாத்திரம் வகிக்க முடியும் என்பதை இந்த இயக்கமே முடிவு செய்யும் என்பதில் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது. தன் சொல், செயல் என்று அனைத்தின் மூலமும் இதனை வெளிக்காட்டி வந்தார் தலைவர்.இன்னொரு உதாரணம் இதற்கு..இந்திய வியாபாரம் செய்யும் ஒரு கொஞ்சம் பேருடன் தலைவரின் சந்திப்பு..இது1983ல்.கடல் மூலம் இந்தியாவுக்கான தொழில் செய்பவர்கள் அவர்கள்.

எமது கடற்போக்குவரத்து அதிகமாகி வந்த அந்த பொழுதில் மிக முக்கியமான ஒரு சந்திப்பு..நிறைய பேசப்பட்டது.. எல்லாம் முடிந்து விடைபெறும் தறுவாயில் ஒருவர் சொன்னார் ‘ அப்போ விடுதலைக்கு பிறகு நாங்கள் இந்த தொழில் தொடர்ந்து செய்யலாம்தானே ‘ என்று..வாசல்வரை வந்த தலைவர் நின்று நிதானித்து சொன்னார் ‘ ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கோ..இந்த தொழில் தமிழீழத்தின் பொருளாதாரத்துக்கு விரோதமானது..

தமிழீழம் விடுதலை அடைந்த மறு நிமிடமே இந்த தொழிலை சட்டவிரோதம் என்று நான் அறிவிப்பேன்.. நீங்கள் எவரும் இந்த தொழில் செய்ய முடியாது ‘ என்றார்..சந்திப்பு முடிந்து இருப்பிடம் திரும்பும்போது லாலா தலைவரிடம் கேட்டான் ‘அண்ணை விடுதலைக்கு பிறகுநாங்கள் இதனை அறிவிக்கலாம்தானே..ஏன் இப்பவே இவங்களுக்கு சொன்னனீங்கள்..அவங்கள் இனி ஆதரவு தர மாட்டாங்கள் ‘ என்று.தலைவர் சொன்னார் ‘ அவையளுக்கு ஏன் நாங்கள் ஒரு பொய்யான வாக்குறுதியை வழங்க வேணும்.

இதுதான் எங்கடை நிலைப்பாடு என்று சொல்லி விட்டால் நல்லது..அவையள் ஆதரவு தருகினம் காசு தருகினம், போர்ட் (படகு) தருகினம் என்றதுக்காக நாம் ஏன் பொய் சொல்லவேணும் ‘ என்றார். எமது அமைப்பு நின்று நிலைபெற்று போராட வேணுமானால் நிதி முக்கியம்தான். ஆனால் அதனை தருகிறார்கள் என்பதற்காக ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தையும் இந்த தேசத்தின் உயிர்ப்பையும் விற்று விடல் கூடாது என்பதில் தலைவர்’ உறுதியாகவே நின்றார்.

முன்பொருநாள் உலகை குலுக்கிய சோவியத் புரட்சியின் போது சொல்லப்பட்ட வாசகமான ‘ சிறு முதலாளிகள் ஆடும் பென்டூலம் போன்றவர்கள் ‘ என்ற வாசகத்தை தமது பட்டறிவின் மூலம் கண்டவர்கள் எம் தேசப்புதல்வர்களும் எம் தேசியதலைவனும்.. எத்தனையோ ஏழை தாய்மார் தமது அன்றாட உழைப்பில் ஒரு பிடி சோறிட்டு வளர்த்த போராளிகள்எத்தனையோ தினசரி கூலி தொழில் செய்யும் என் தேசத்து தந்தைமார் தமது தோளில் தூக்கி வளர்த்த இந்த தேசிய விடுதலை அமைப்பு கத்தை கத்தையாக பணத்தை தூக்கி தருகிறான் என்பதற்காக எந்த வித சமரசங்களையும் விட்டு கொடுப்புகளையும் பணக்காரர்களுக்கு வழங்கியது இல்லை..

ஆனால் இன்று எல்லாம் மௌனமான இப் பொழுதில் பணத்தை கொண்டு தேசியத்தையும் தேசிய விடுதலை என்ற இலட்சியத்தையும் மொத்தமாக விலைபேசி வாங்கி விடலாம் என்று எந்தவொரு செல்வந்தனும் நினைப்பானாகில் அவன் நினைப்பில் ஏதோ பிசகு இருக்கிறது என்றே அர்த்தம்.

ஏனென்றால், தொடர்ந்து பின்னால் சிங்களபுலனாய்வாளர் துரத்தி வந்த பொழுதில் சயனைட் அடித்து மரணித்தால்கூட முகத்தை அடையாளம் கண்டால் இனி நடக்கப்போகும் நகர்வுகளுக்கு பாதகமாக அமையும் என்பதால் ஒரு கணம் கூட தாமதிக்காமல் உயிருடன் பேக்கரி அடுப்பில் புகுந்தவர்களதும்,தான் இருக்கும் இடத்தின் திசை சொல்லி இந்த இடத்துக்கு எறிகணை அடி என்று சொல்லி சென்றவர்களதும்,தன்னை சுட்டுவிட்டு தனது ஆயுதத்தை எடுத்து செல்லுங்கள் என்று இறுதி வாக்கியத்தை உறுதியுடன் சொன்னவர்களதும்,சிங்களத்தின் மூளைக்குள் துளையிட்டு அதன் ஆணிவேரை அறுக்கும் ஒரு செயற்பாட்டில் கணக்கு கேட்கப்படாமல் பல இலட்சங்களை செலவிடும் பொறுப்புகள் கொடுக்கப்பட்ட ஒரு மாவீரன் தனது தங்கைக்கு ஒரு தோடு ஒன்றுக்கு தாய் கேட்டபோது சொன்னானே “இது இயக்க காசு “என்றுஅத்தகையவர்களதும் ஈகத்தால், இணையற்ற அர்ப்பணத்தால் மட்டுமே எழுந்தது இந்த தேசிய விடுதலை போராட்டம்.நிதி மிகுந்தவர்கள் இதற்கு அனுசரணையும் ஒத்துழைப்பும் வழங்கலாமே தவிர இதன் திசைவழியை மாற்றிட முடியாது ஒரு போதும்..

– ச.ச.முத்து-