பகிரப்படாத பக்கங்கள் -3

களமுனைக்கு மிக அருகில் கொண்டுபோய் பிரதான இராணுவமருத்துவமனையை நிர்வகித்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்கள்…!

2007 இன் ஆரம்ப காலம், மன்னார் களமுனையில் கட்டளைத்தளபதியாக இருந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உடல்நலம் குறைந்த போது பின்நகர்த்தப்பட்டு கட்டளைத் தளபதியாக கேணல் பானு அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்த நாட்கள் பல இடர்களை சுமந்து நின்றது தமிழீழ எல்லை வேலி. சிங்களப்படை புதிது புதிதாக களமுனைகளை திறந்து கொண்டிருந்தது. எங்கும் ஓய்வற்ற சண்டை. வெடியோசைகளும் இரத்த சிதறல்களும். வீரச்சாவுகளும் காயங்கள் நிறைந்தன.

அதைப்போலவே மன்னார் களமுனையும் அதிர்ந்தது. அந்த பிரதேசம் எங்கும் எம் படையணிகள் வீழ்ந்து விதையாகிக் கொண்டிருந்தாலும் நிமிர்ந்து நின்று எதிரிக்கும் இழப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நிலை சொல்ல முடியாதது. மிக கொடூரமான சிங்களத்தின் தாக்குதல்களால் தம் உடல், உயிர் , உடமைகளை இழந்து ஏதிலிகளாக்கப் பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளமடுவில் இருந்த அரச மருத்துவமனை தான் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பிரதான மருத்துவ சிகிச்சைக்கான இடம். அந்த மருத்துவமனையில் தமிழீழ சுகாதாரசேவை பணிப்பாளர் மருத்துவர் சுஜந்தன் அவர்களின் பணிப்பில் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களான தமிழ்நேசன் ( பின் நாள் ஒன்றில் சுதந்திரபுரம் பகுதியில் லெப் கேணல் தமிழ்நேசனாக வீரச்சாவு) , தணிகை, இசைவாணன் (இறுதி சண்டையின் போது லெப் கேணல் இசைவாணனாக வீரச்சாவு ) , காந்தன்( இறுதி சண்டையில் லெப் கேணல் காந்தனாக வீரச்சாவு) , வளர்பிறை ( பின் நாட்களில் இராணுவ மருத்துவராக அம்பாறைக்குச் சென்று கடமை செய்த போது லெப் கேணல் வளர்பிறையாக வீரச்சாவு) ஆகியோர் கடமையில் இருக்கிறார்கள். அங்கு செறிந்து வாழ்ந்து வந்த மக்களுக்கான பிரதான மருத்துவமனையாக இருந்த அந்த அரசினர் மருத்துவ மனையில் அரசமருத்துவரான வைத்திய கலாநிதி விஜயன் அவர்கள் கடமையில் இருந்தார். அவரோடு போராளி மருத்துவர்களும் கடமையில் இருந்தார்கள்.

இங்கே தமிழீழ சுகாதாரப்பிரிவு பற்றி நாம் சிறு விடயத்தை பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறை இரு பிரதான பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒன்று மருத்துவப்பிரிவு. இது பிரதானமாக போராளிகளுக்கான மருத்துவம் மற்றும் சிகிச்சைகளை வழங்கும் பிரதான செயற்பாட்டை கொண்டதாகும் இரண்டாவதாக தமிழீழ சுகாதாரப்பிரிவு. இது முற்றுமுழுதாக மக்களுக்கான மருத்துவ சேவையை அடிப்படையாக கொண்டது. இதற்குள் பெரும்பாலான செயற்பாட்டளர்கள் மருத்துவப்பிரிவு போராளிகளே. இவ்வாறான பெரும் பிரிவுகளைக் கொண்ட மருத்துவத்துறை அப்போது ரேகா அவர்களின் தமிழீழ பொறுப்புக்குள் இயக்கம் கொண்டிருந்தது. இது இவ்வாறு இருக்க,

தமிழீழ மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்களின் அனுமதியோடு தமிழீழ சுகாதாரப்பிரிவு பணிப்பாளர் சுஜந்தன் போராளி மருத்துவர்களை மன்னார் பிரதேசத்தில் மக்கள் பணிக்காக அனுப்பி இருந்தார். அவர்கள் அங்கே கடமையில் இருந்த அரசமருத்துவருடன் இணைந்து மருத்துவப்பணி செய்தனர். ஆனாலும் அங்கே தீவிரசிகிச்சைகளை வழங்கவோ அல்லது சத்திரசிகிச்சைகள் செய்யக்கூடிய சத்திரசிகிச்சை ஏற்பாடுகளோ இல்லை. அவை எதுவும் அரசால் பள்ளமடு மருத்துவமனைக்கு கொடுக்கப்படவில்லை. அவை அனைத்தையும் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மருத்துவர்களுமே ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் போராளிகளுக்கான சிகிச்சைகள் மட்டுமன்றி மக்களுக்கான சிகிச்சையையும் சிறப்பாகவே கொடுத்தார்கள். மக்களுக்காக சாகத் துணிந்து நின்ற ஒவ்வொரு போராளிகள் அவர்கள். மக்கள் அழியக் கூடாது என்ற பெரும் இலக்கிற்காக இரவு பகல் தூக்கமற்று கிடக்கிறார்கள்.

இந்த நிலையில் திடீர் என்று ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, உடனடியாக களமுனையில் இருந்து பாதுகாப்பான பகுதியில் மருத்துவமனையை நகர்த்துமாறு மன்னார் களமுனை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பானு அவர்களிடம் இருந்து கட்டளை கிடைக்கிறது. மக்கள் மருத்துவமனையாக இருந்த பள்ளமடு மருத்துவமனையை அண்டி இருந்த மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து போய்விட, முற்றுமுழுவதுமாக இராணுவ மருத்துவமனையாக இயங்கத் தொடங்கியது. பள்ளமடு மருத்துவமனை.

அப்போது பாதுகாப்பு பிரதேசமாக கொள்ளக்கூடிய பகுதிகளாக இருந்த இடங்கள் என்பதை விட இலுப்பக்கடவை மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய இடங்களில் தான் அரச மருத்துவமனைகள் இருந்தன. அதனால் அவை முன்மொழியப்பட்டன. ஆனால் அந்த இருபகுதிகளுக்கும் காயமடைந்த போராளிகளையோ அல்லது மக்களையோ நகர்த்துவது என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஏனெனில் அங்கே பயணிக்கும் இராணுவ வாகனங்களை குறி வைத்து LRRP என்று கூறப்படும் ஆழ ஊடுருவும் படையணியின் சிங்கள சிப்பாய்கள் கிளைமோர் தாக்குதல்களை செய்து கொண்டிருந்தனர். மேலும் 20 கிலோமீட்டர்கள் கடந்து களமுனையில் இருந்து காயப்பட்ட போராளிகளை அல்லது மக்களை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அவர்களுக்கு உயிரிழப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

இந்த நிலையில் லெப் கேணல் தமிழ்நேசன் வீரச்சாவடைந்த நிலையில், நான்கு இராணுவ மருத்துவர்களும் ஆலோசித்து முடிவுக்கு வர முடியாது தவித்துக் கொண்டிருந்த போது, போராளி மருத்துவர் லெப் கேணல் காந்தன் ” நாங்கள் பெரியமடுவில கொஸ்பிட்டல போடுவம். அங்க போட்டால் லைன்ல மெயினுக்கு என்று பெடியள விடத் தேவையில்ல களமருத்துவ போராளிகளிடம் இருந்து நாங்களே பெடியள நேரே பொறுப்பெடுத்து காயங்கள காப்பாற்றலாம்” என்கிறார். அந்த யோசினையிலும் பாரதூரமான சிக்கல்கள் இருந்தன.

களமுனைக்கு மிக அருகில் மருத்துவமனை அமைந்திருப்பதால் அதுவும் எதிரியின் ஐந்து இஞ்சி மற்றும் ஆட்லறி செல் தாக்குதல் இலக்குக்கு உள்ளாகலாம் அல்லது தாக்குதல் வலயத்துக்குள் இருப்பதால் இருப்பிடத்தை அறிந்து திடீர் என்று மருத்துவமனை கூட கைப்பற்றப்படலாம் என்ற பல பிரச்சனைகள் கண்முன்னே எழுந்தன. ஆனாலும் போராளி மருத்துவர்கள் முடிவெடுத்துக் கொள்கிறார்கள். கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பானு அவர்களுக்கு விடயத்தை தெரிவிக்கின்றனர். அவர் முற்றுமுழுதாக அந்த திட்டத்தை மறுக்கிறார்.

மருத்துவர்கள் நிலமையை தெளிவு படுத்தி விளக்கம் கொடுக்கிறார்கள் நாம் இரகசியத்தையும், மருத்துவமனையை சுற்றி நல்ல பாதுகாப்பையும் போட்டால் எந்தப் பிரச்சனையும் வராது என்ற உண்மையை உணர வைக்கின்றனர் காயப்பட்ட போராளிகளை வாகனங்களில் கொண்டு வந்து இறக்காது கொஞ்சம் தூரத்திலையே இறக்கி தூக்கி வருவது எதிரியின் கண்காணிப்பை உடைத்தெறியக் கூடியது என்ற உண்மைகளை எல்லாம் புரிந்து கொண்டாலும் பிரிகேடியர் பானு அவர்களால் மனம் உவந்து அனுமதி கொடுக்க முடியவில்லை எதாவது ஒன்று நடந்து மருத்துவமனை தாக்கப்பட்டால் அத்தனை போராளிகளையும் இழக்க நேரும் என்ற உண்மையும் ஒரு பக்கத்தில் உதைத்தெறிந்தது.

எதாவது ஒன்று நடந்தால் நீங்கள் நால்வரும் தான் ஆளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் இதற்கு நான் அனுமதி தர முடியாது. ஆனால் இது உங்கள் முடிவு மட்டுமே என் முடிவல்ல உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். அந்த வார்த்தை மட்டுமே அனுமதி கிடைத்து விட்டதுக்கான அறிகுறியாக கருதியவர்கள் பள்ளமடுவில் இருந்து பெரியமடுவிற்கு மருத்துவமனையை நகர்த்துகிறார்கள்.

சண்டையின் போக்கு சற்று மாறுபட்டது. பின்நகர்ந்து கொண்டிருந்த எம் படையணிகள் நின்று நிலைத்து சண்டையிட்டன. வழமையை விட எதிரி பல விழுக்காடு அதிகமான இழப்புக்களை சந்திக்க நேர்ந்தது. எதிரிக்கு பேரிடிகளைக் கொடுத்து சண்டையிட்டன எமது சண்டையணிகள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதி அந்த களமுனையை உடைத்து முன்நகர முடியாது திகைத்தது சிங்களம்.

மருத்துவமனை அங்கே போடப்பட்ட சில நாட்களில் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்த பிரிகேடியர் பானு ” நீங்கள் சொன்னது சரிதான்டாப்பா… நீங்கள் பக்கத்தில நிக்கிறியள் என்றவுடனே பெடியளுக்கு நம்பிக்கை இன்னும் வந்திட்டுது எந்த தயக்கமும் இன்று சண்டை பிடிக்கிறாங்கள். உங்களுக்கு என்ன வேணும் என்றாலும் கேளுங்கோடாப்பா உடனே ஒழுங்கு படுத்துறன் ஆள் உங்கள பற்றி கதைச்சவர் பிரச்சனை இல்லைடாப்பா பெடியள கவனமா பாருங்கோ…” அவர் கொடுத்த உற்சாகம் இராணுவ மருத்துவர்களுக்கு ஊக்கத்தை தந்தது.

பொதுவாக இராணுவ மருத்துவமனைகள் களமுனையை விட்டு பின்நகர்த்தப்படுவதே வழமை ஆனால் எம் போராளி மருத்துவர்களான தணிகை, காந்தன், இசைவாணன் மற்றும் வளர்பிறை ஆகியோர் பின்னால் கொண்டு செல்லாது களமுனைக்கு அருகில் முன்னோக்கி கொண்டு சென்று போராளிகளின் மனதில் நம்பிக்கையை விதைத்தது மட்டுமல்லாது சண்டையின் போக்கையே மாற்றினார்கள்…

சண்டை அணிகளுக்கு வழங்கல் அணியும் மருத்துவ அணியும் அருகில் இருந்து இரு விநியோகமும் தடை இன்றி கிடைக்குமானால் சிறு சோர்வு கூட வராது. தமக்கான ரவைகளும் மருத்துவமும் அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கை பிறக்கும் இதை அவர்கள் செய்து காட்டினார்கள். அவர்களது மனவுறுதிக்கு இன்னும் பலம் சேர்க்கும் மருத்துவத் துறையின் அருகாமை. அதுவும் இயக்கத்தின் மூத்த இராணுவ மருத்துவர்கள் களமுனையில் நிற்பதால் காயப்பட்டவர்கள் நிட்சயமாக காப்பாற்றப்படுவார்கள் என்ற மனவுணர்ச்சி அவர்களுக்கு இன்னும் புது வேகத்தை கொடுத்தது. படையணிகள் தீவிரத் தாக்குதலில் மடிந்து கொண்டிருந்தது சிங்களபடையணிகள். அப்போதும் எம் மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்கள் ஓயாது எம்மை வழி நடத்துவார் ஆனால் இப்போது அவரது இருப்பு வினாக்குறியோடு நீளும் அதே நேரம் என்னோட கூட நின்ற மற்ற மருத்துவர்கள் நால்வரும் பின் நாட்களில் விதையாக வீழ்ந்து லெப் கேணல் இசைவாணன், லெப் கேணல் காந்தன் , லெப் கேணல் வளர்பிறை, லெப் கேணல் தமிழ்நேசப் என்ற நிலையோடு மண்ணுக்குள்வாழ்கிறார்கள். அவர் விழிகள் கலங்கி உதட்டில் இருந்து விம்மல் ஒலி வருகிறது.

சரி கவி சந்திப்போம் என்ற வார்த்தையோடு நிறைவு பெறுகிறது எனக்கும் போராளி மருத்துவர் தணிகைக்குமான இன்றைய தொலைபேசி உரையாடல் நன்றி தணிகையண்ண….

கவிமகன்.இ