“விடுதலைப் புலிகளும் மத சுதந்திரமும்”
(தொடர் -1)

மதம் சம்பந்தமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? விடுதலைப்புலிகள் மதத்திற்கு விரோதமானவர்களா? மதவழிபாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரானவர்களா? மதம் பற்றி விடுதலைப் புலிகளின் சித்தாந்த கருத்துப் பார்வை என்ன? இவ்விதமாக மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்விகளுக்குத் தெளிவான கொள்கை விளக்கத்தை அளிக்க முயல்கிறது இக் கட்டுரை.

மதம் சம்பந்தமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை,எமது கொள்கைத் திட்டப் பிரகடனம் தெட்டத்தெளிவாக எடுத்து விளக்குகிறது. அதில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது:

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மதசார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். அதேவேளை சகல மதங்களையும் சார்ந்த மக்களினதும் அடிப்படை உரிமையான வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு, எமது இயக்கம் உத்தரவாதமளிக்கும். சகல மதத்தவர்களும் தமது ஆன்மீக அபிலைசைகளைப் பூர்த்தி செய்யவும், மத-கலாசாரப் பண்புகளைப் பேணி வளர்க்கவும் எமது இயக்கம் ஊக்கமளிக்கும்”

புலிகளின் கொள்கைப் பிரகடனத்தில் இரத்தினச்சுருக்கமாகத் தரப்பட்டுள்ள இந்த விளக்கம், மதம் சம்பந்தமாக மூன்று முக்கிய அம்சங்களை முதன்மைப்படுத்துகிறது.

ஒன்று, மதசார்பற்றநிலை. இரண்டாவது, மக்களின் வழிபாட்டுச் சுதந்திரம். 
மூன்றாவது, தமிழரின் தேசிய பண்பாட்டு வாழ்வு.

இந்த மூன்று அம்சங்களையும் இனி விரிவாக பார்ப்போம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மதசார்பற்றது எனும் பொழுது, எந்த ஒரு மதத்தையும் சார்ந்ததாக நிற்கவில்லை என்பது தான் அர்த்தம். தமிழீழ மக்கள் தழுவிக் கொண்ட சகல மதங்களையும் அரவணைத்து, கௌரவித்து, சகல மதத்தவர்களுக்கும் பொதுவாக நின்று நடுநிலையைக் கடைப்பிடிப்பது தான்,மதசார்பற்ற நிலையாகும்.

தமிழ் இன ஒருமைப்பாட்டையும், தேசிய சுதந்திரத்தையும் இலட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம், மதசார்பான கொள்கையை கடைபிடிப்பது தவறானதாகும். இந்த குறுகிய மதவாதப்போக்கு தமிழ் இன ஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். இதனை கருத்திற் கொண்டு தான் எமது இயக்கம், ஆரம்பகாலத்திலிருந்தே மதசார்பற்ற நடுநிலையை தழுவிக்கொண்டது.

சிங்கள அரசு மதசார்பானது. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, அதாவது பௌத்த மதத்திற்கு தேசிய அந்தஸ்தும் கௌரவமும் வழங்கி, ஏனைய மதங்கள் சார்ந்த மக்களை அந்நியப்படுத்தியது. இந்தக் குறுகிய மதவாதப் போக்கு சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு வழிகோலி, சிங்கள – தமிழ் தேசிய இன முரண்பாட்டை தீவிரமடையச் செய்தது.

சிங்கள தேசத்து மதவாத, இனவாத ஒடுக்குமுறையைச் சந்தித்து நிற்கும் தமிழ்த் தேசிய இனம், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிளவுபட்டு நிற்கமுடியாது. அது எமது தேசியப் போராட்டத்தைப் பலவீனமடையச் செய்யும். எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் விடுதலை இயக்கம் என்ற வகையில் புலிகள் இயக்கம் மதசார்பற்ற நிலையைத் தழுவி, மதங்களுக்கு அப்பால் நின்று இன ரீதியில் – தேசிய ரீதியில், எமது மக்களை அணிதிரட்டி ஐக்கியப்படுத்தும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

(“விடுதலைப் புலிகள்” இதழ் ஆடி – ஆவணி 1992 இதழிலிருந்து)