விடுதலைப் போராட்டதிற்கு அப்பால் தேசியத்தலைவர்

வெறுமனே ஆயுதம் தாங்கிய மனித இயந்திரங்களாய் எம்மை ஆக்காது நல்ல பண்புகளை எம்மில் வளர்த்து,சமூகம்,அறிவியல்,அரசியல்,வரலாறு,மருத்துவம்,விஞ்ஞானம் என எதிலுமே தேடலுடன் கற்கும் ஆர்வத்துடன் எம்மை வளர்த்தவர்.பல்வேறு தேவைகளை கருதி உலக நாடுகளெங்கும் தன் பிள்ளைகளை(போராளிகளை) அனுப்பி தமிழீழம் என்னும் நெடுங்கனவு கண்டவர் எம் தலைவர்.

தவறான நடத்தை,போதை இப்படி எதற்கும் அடிமையாகாது அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர்.குழந்தைகள்,இயாலாதவர்கள்,ஆதரவற்றவர்கள்,காயமடைந்த போராளிகள் என மனித படைப்புகளிலையே கடவுளை தரிசித்து போராளி பிள்ளைகளுக்கு ஆதர்சமாய் இருந்தவர் எங்கள் அண்ணண்.

தெளிவற்ற கரடுமுரடான சதிகளும் சகதிகளும் நிரம்பிய பெரும் குழிகள் கொண்ட பாதையில் பலர் முயன்றும் ஓட்ட முடியாது போய்விட்ட தமிழீழம் என்னும் தேரை மூன்று தலைமுறைகளுக்குமேல் விடாப்பிடியாக கம்பீரமாக தலை நிமிர்ந்து ஓட்டிச் சென்றவர் எங்கள் தலைவர்.மிக நீண்ட பாரம்பரியமாய் தொடர்ந்த இறுக்கமான மனிதாபிமானங்களை தூரவைத்து சாதிய கட்டமைப்புகள் சிதைந்து போகவும் பெண்ணடிமை ஒழிப்பு சீதன ஒழிப்பு போன்ற முற்போக்கான விடயங்கள் பக்கவிளைவுகளாக தொடரவும் நிலப்பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுண்டுவிரல் அளவேயான ஈழத்தை உலகமெங்கும் பேச வைத்தவர் எம் தலைவர்.தமிழினத்தின் பாரம்பரிய குணங்களை மீண்டும் எழுச்சிபெற வைத்து,கடமை,கண்ணியம்,கட்டுபாட்டுடன் கூடிய புதிய சமுதாயத்தை படைத்ததும் ஆயுதப்போரட்டதிற்கு வெளியே எம் தேசியத்தலைவர் சாதித்தவை.

விடுதலை அமைப்புக்குள் யாரும் சாதி பேதம் பார்ததில்லை பலருக்கு யார் என்ன சாதி என்பதே தெறியாது.

ஒரு முறை கலப்பு திருமணங்களை உங்கள் இயக்கம் ஊக்குவிக்கின்றதா ? என்று பத்திரிக்கையாளர் கேட்டதற்க்கு

“சாதி பார்த்து திருமணம் எல்லாம் இயக்கத்தில இல்லை கலப்பு திருமணத்தையே பெரிய சாதனையாக சொல்லும் தன்மைகூட எங்களிடம் இல்லை.ஏனென்றால் திருமணம் என்றால் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைவதற்கான ஏற்பாடு அவ்வளவுதான்.கூடா ஒழுக்கம்தான் கூடாது மற்றபடி ஒருவருக்கொருவர் உண்மையாக நேசிப்பதை அமைப்பு தடைசெய்ததில்லை.மேலும் புலிகள் அமைப்பு வரதட்சணை வாங்கி திருமணம் செய்வதை உறுதியாக எதிர்கின்றது.எங்கள் ஆளுகை பகுதிக்குள் சீதன தடைச்சட்டம் இருந்தாலும் சட்டத்தால் மட்டுமே இதைநான் சரி செய்ய முடியுமென நினைக்கவில்லை கற்றுகொடுத்தல் விழிப்புணர்வு முகாம்கள் உறுதியான சாதி ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாகதான் ஒழிக்க முடியும்”

என்று தலைவர் கூறியிருந்தார்

நம் கண்ணால் கண்ட ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட கால வரலாறு தொக்கிபோய் எம்முன் சூனியப்பெருவெளி சூழ்ந்து போயுள்ளது.ஆயினும் தடைகளையும் சோதனைகளையும் கால இடைவெளிகளையும் கண்டு சோர்வடையாது எஞ்சியவர்களுடன் கைகோர்த்து எம் இலக்கு எட்டபட்டே தீரும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்.