13ம் ஆண்டு நினைவுநாள்– 15.04.2019
மாமனிதர் கவிஞர் நாவண்ணன் அவர்கள் 

(¶) 15.03.1947அன்று மன்னார் மண்ணில் மருசலீன் பிலோமினா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சூசைநாயகம் என்ற இயற்பெயரையுடைய கவிஞர் நாவண்ணன். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கற்றவர்.

சிறுவயதில் இருந்தே எழுத்தாற்றலும் கலைத்திறனும் கொண்டுவிளங்கிய இவர் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். இவருடைய 16 வயதில் ‘அவரும் ஏழை தானே’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசைப் பெற்றார். தொடர்ந்து எழுத்துப்பணியை முன்னெடுத்த இவர் தமிழ் மீதும் எழுத்தின் மீதும் தீராக்காதல் கொண்டவர். இறுதி மூச்சுவரை தமிழுக்காக தமிழருக்காக உழைப்பேன் என்ற அவருடைய வார்த்தைகள் வெறும் மேடைப் பேச்சாக இன்றி அப்படியே வாழ்ந்து காட்டியவர். இவர் எழுதிய நூல்கள் எல்லாமே ஏதோ ஒரு வரலாற்றை ஆவணப்படுத்துவதாகவே இருந்தன.

ஈழவரலாற்றில் இன்றுவரை பலருடைய நெஞ்சையள்ளும் பாடலான ‘என் இனமே என் சனமே’ என்ற பாடல் இவரது முதலாவது பாடலாகும். தொடர்ந்தும் பல பாடல்களை எழுதிய இவரது பாடல்களில் மறக்கமுடியாதவையாக நெற்றியிலே திலகமிடும் இரத்தம், வீரக்குழந்தைகளே, கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும், ஒட்டி ஓரா மீன் பிடிக்க..’ போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு கொண்ட இவரது கவியரங்கக் கவிதைகளில் நகைச்சுவை நிறைந்து கிடக்கும்.

பல மேடைகளைக் கண்டிருந்த இவர் மணமாலைகளைச் சுமக்கவேண்டிய இளையவர்கள் நஞ்சு மாலை அணிந்து கொண்டு சமர்க்களத்தில் நின்று, அவர்கள் வீரமரணத்தின் பின் புகழுடலில் மாலை தாங்கும் வீரர்களை மனதில் கொண்டு, இறுதிவரை மேடைகளில் தன் கழுத்தில் மாலைகள் வாங்கியதில்லை..

உண்மையும் நேர்மையும் இரக்கமும் சுபாவமாகக் கொண்ட இவருக்கு தன்மான உணர்வும் எதற்கும் அஞ்சாத துணிச்சலும் கூடவே பயணித்தது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய போது குறிப்பாக இவரிடம் காணப்பட்ட துணிச்சலுக்காகவே உங்களை எனக்குப் பிடிக்கும் என தலைவர் அவர்கள் நேரடியாகவே பாராட்டியுள்ளார்

1974ல் சுதந்திரன் பத்திரிகைத் துணையாசிரியராகவும் 1982ல் புதிய உலகம் பத்திரிகைத் துணையாசிரியராகவும் இருந்தவர். சுடர், பாதுகாவலன், தொண்டன் போன்ற சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகளும் தொடர்களும் வெளிவந்தன. இவருடைய எழுத்துப்பணிக்காக 2 தடவைகள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் தங்கப்பதங்கம் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டார்.

எழுத்துத் துறையோடு ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கற்சிலை மடுவில் நிறுவப்பட்டிருந்த கம்பீரமான பண்டாரவன்னியன் சிலை, மாங்குளத்தில் நிறுவப்பட்டிருந்த கரும்புலி போர்க்கின் சிலை, கிளிநொச்சி 155ம் கட்டையில் அமைக்கப்பட்டிருந்த முதற் பெண் மாவீர்ர் மாலதியின் சிலை போன்றன இவர் செதுக்கிய சிற்பங்களே.

மானிப்பாய் அந்தோனியார் ஆலய முன்றலில் யேசுக் கிறீஸ்துவின் சிலை, மல்வம் வாசிகசாலையில் சுவாமி ஞானப்பிரகாசர் சிலை,வங்காலையில் அருட்திரு பஸ்ரியன் சிலை, மன்னார் மாதா கோவில் முன்றலில் அருட்சகோதர்ர். டிலாசாலும் இரு சிறுவர்களும் நிற்கும் சிலை போன்றன இன்றும் கவிஞர் நாவண்ணணின் கலைத்திறனை நிரூபிக்கும் அவரது சிற்பங்களாகும்.

இயற்கை இசைஞானமும் பாடும் திறனும் கொண்ட இவர் எழுத்துத்துறையில் கொண்ட அதிக ஈடுபாட்டால் இசைத்துறையில் ஈடுபடவில்லை எனினும் இவரது நாடகங்களுக்கான பாடல்களைத் தாமே பாடியிருக்கிறார். சிறந்த நாடகக் கலைஞனான இவர் பல வானொலி நாடகங்களையும் மேடை நாடகங்களையும் எழுதியும் நடித்தும் இருக்கிறார். ஆரம்பகாலங்களில் இவரது நாடகங்கள் இலங்கை வானொலியிலும் பின்னர் 1992 ம் ஆண்டிலிருந்து இவரது படைப்புகள் புலிகளின் குரலிலும் ஒலிபரப்பாயின. 1995 ன் பின் புலிகளின் குரல் முழுநேரப்பணியாளராகவும் பின்னர் நிதர்சனம் பணியாளராகவும் கடமையாற்றினார்.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

1972 இறுதி மூச்சு
1976 தமிழன் சிந்திய இரத்தம்-(1958 இனக்கலவரம் பற்றியது)
1976 புத்தளத்தில் இரத்தக்களம் -(1976ல் நடந்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் பற்றியது)
1978 பயணம் தொடர்கிறது (நாவல்)
1988 நானொரு முற்றுப்புள்ளி (சிறுகதைத் தொகுப்பு)
1988 தீபங்கள் எரிகின்றன (தனி மனித வரலாறு)
1989 இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் (இலக்கியம்)
1992 கதை-கண்ணீர்- கவிதை (மலையக மக்கள் தொடர்பான குறுங்காவியம்)
1989 நினைவாலயம் (குறுநாவல்)
1994 பொழிவு (அரங்கக் கவிதைகள்)
1995 எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன
2002 கரும்புலி காவியம் -பாகம் 1
2005 சுனாமிச் சுவடுகள்

எழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்
வலிகாமம் இருந்து வன்னி வரை
குருதியில் நனைந்த திருவடிகள்
வித்தான காவியம்
முல்லை அலை விடு தூது (தூதுப் பிரபந்தம்)

இறுதி மூச்சு வரை எழுதும் முயற்சியில் இருந்தது – புலம்பெயர்ந்த ஈழத்து உறவுகளின் வரலாறு
2006 ஏப்பிரல் 15ம் திகதி நோயுற்ற நிலையில் எழுத வேண்டும் என்ற தாகத்தோடேயே இவரது இறுதி மூச்சும் காற்றில் கலந்தது. இவருக்கு தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் மாமனிதர் என்ற பட்டத்தை வழங்கி மதிப்பளித்தார்.